Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொடநாடு எஸ்டேட்டை மக்களுக்கு எழுதி வைப்பீங்களா? - விஜயகாந்த் கேட்டாரே ஒரு கேள்வி

 

"மக்களால் நான் மக்களுக்காக நான்" என்று சொல்றீங்க. உங்க சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட்டையும் மக்களுக்கு  எழுதிவையுங்கள் பார்க்கலாம் என்று ஜெயலலிதாவுக்கு சவால் விடுத்தார் விஜயகாந்த்.

மதுரையில் தேமுதிக- மக்கள் நலக்கூட்டணி- த.மா.கா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கூட்டணி கட்சியை சேர்ந்த 10 தொகுதி வேட்பாளர்களை விஜயகாந்த் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "என்னை போல யாரும் தமிழ்நாடு முழுவதும் சுத்த முடியாது. ஆனால் சில நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் என்னை பற்றி தப்பு தப்பா எழுதுறாங்க. அதற்கு நான் பயப்படமாட்டேன். ஜெயலலிதா சொன்னதையும் செய்வார் சொல்லாததையும் செய்வார். ஆமா, தண்ணீர் இல்லாமல் நாட்டை காயப்போடுவார்.

ஜெயலலிதா இரட்டை விரலை காட்டுவதற்கு காரணம், கூட்டத்தில் இரண்டு பேர் காலி செத்துட்டான் தூக்குடா என்பதற்கு சிக்னல்தான் அது. அமைச்சர்கள் ஒ.பி.எஸ், நத்தத்தின் சத்தத்தையே காணோம். அன்றைக்கே சொன்னார் நத்தம், மதுவிலக்கு கொண்டு வரமாட்டோம் என்று பகிரங்கமாக. ஆனா, இந்த அம்மா, படிப்படியா கொண்டுவர போகுதாம். காமெடி பண்ணாதீங்க. சசி பெருமாள் இறந்து போனாரே, அப்போது ஏன் படிப்படியா குறைக்கவில்லை. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. ஏன், நிதிஷ்குமார் மதுவிலக்கு கொண்டு வரவில்லையா? ஏன், பக்கத்து மாநில உம்மன்சாண்டி கொண்டு வரவில்லையா? லாபம் பார்ப்பதுதான் உங்கள் நோக்கமா? மக்கள் நிலையை கருத்தில் கொள்ள மாட்டீர்களா. திமுக, அதிமுக இரண்டும் அதர்மம். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் நாங்கள் ஆறு பேரும் தர்மம். தர்மம் அதர்மத்தை வெல்லும்.

எனக்கு தொண்டையில் சளி கட்டும். அதனால்தான் மேடையில் இருமுகிறேன். பயந்து கொண்டு இரும மாட்டேன். எனது மக்கள்தானே இருக்காங்க. எதற்கு இருமுவதற்கு பயப்படணும். பத்திரிகைகாரர்கள் எதையாவது எழுதுவாங்க. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். என் மீது பல அவதூறு வழக்கு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதற்காக அலைகிறேன். அதற்காக அஞ்சமாட்டேன் ஒரு போதும். நல்லவேளை நான், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டேன். சுந்தர்ராஜனுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்தால் கூனிக்குறுகி நாற்காலியில் உட்கார வேண்டும். யாருக்கும் தலைவணங்க மாட்டான் இந்த விஜயகாந்த்.

ஜெயலலிதாவைவிட கலைஞர் மிகப்பெரிய ஆள். இரண்டு ஜெயலலிதான் கலைஞர். வேஷ்டி கட்டிய ஜெயலலிதாதான் கலைஞர். சேலை கட்டிய கலைஞர்தான் ஜெயலலிதா. இருவருக்கும் அதுதான் வித்தியாசம். வாழ்ந்தால் மக்களுக்காதான் வாழ்கிறேன் என்றும் ஜெயலலிதா பொய் சொல்கிறார் . இதில் டயலாக் வேற விடுகிறார், "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்று சொல்றீங்க. உங்க சிறுதாவூர் பங்களா மற்றும் கொடநாடு எஸ்டேட்டையும் மக்களுக்கு  எழுதிவையுங்கள் பார்க்கலாம்.

எங்கள் கட்சியில் முரட்டு பணம் இல்லை, முரட்டு படை உள்ளது. கண்டிப்பாக இந்த முறை வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியில் இருக்கும் நண்பர்கள் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு சொல்ல முடியுமா? முடியாது!

நான் ஒரு சினிமாக்காரன். பயங்கர சண்டை போடுவேன். அதுவும் மதுரைக்காரன் பயங்கரமா கோபம் வரும். நான் ஒரு நாய் மாதிரி, சுத்தி நடக்குற விஷயங்களை கரெக்டா கண்டுபிடிப்பேன். என் வீட்டில் நாய் வளர்த்தேன். அது சிங்கம் மாதிரி படுக்கும், தூங்கும். அதை எனது மூத்தமகன் நல்லா வைத்துக்கொள்வான். தப்பு செஞ்சா தொண்டையை கடிச்சிடும். அந்த நாய் இறந்துவிட்டது. நான் நாய் குட்டிகளுக்கு ஜூலியர், சீசர் என்றுதான் பெயர் வைப்பேன். எனது மகன்கள் வேற பெயரை வச்சுடுவாங்க. இப்ப ஒரு நாய் வளர்க்கிறேன். அது பெயர் லக்கி. அது பாக்க நாய் மாதிரியும் இருக்கும், சிங்கம் மாதிரியும் இருக்கும். மக்களே நன்றி வருகிறேன்"  என்று சம்பந்தம் இல்லாமல் பேசி கடைசியாக மக்களை குழப்பிவிட்டு சென்றார் விஜயகாந்த்.

-சே.சின்னதுரை

படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார், நா.ராஜமுருகன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ