Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுப் பள்ளியில் சேர்க்காவிட்டால், ரேஷன் கார்டு பறிமுதல்! - அன்புமணி தடாலடி

எல்லோரும் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களின் குடும்ப அட்டையை பிடுங்கி கொள்வேன் என்று பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி தடாலடியாக பேசினார்.

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி, உங்கள் ஊர் உங்கள் அன்புமணி... இந்த வரிசையில் வேண்டும் மாற்றம்... வேண்டும் அன்புமணி... என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஜெயலலிதா பாணியில் 3, 4 மாவட்டங்களுக்கு ஒரு இடத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசி வருகிறார் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி.

அந்த வகையில் கோவையில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்கள் 29 பேரை அறிமுகப்படுத்தி அன்புமணி பேசுகையில், "இன்றைய இளைஞர்கள் மனதில் திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். அன்புமணிதான் வேண்டும் என நினைக்கிறார்கள். பெண்களும் அன்புமணிதான் வேண்டும் என்கிறார்கள். அன்புமணி வந்தால்தான் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவார் என பெண்கள் நினைக்கிறார்கள். அத்தனை பேரும் அன்புமணிக்குதான் வாக்கு. அன்புமணிதான் வேண்டும் என நினைக்கிறார்கள்.

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை வெறும் அறிக்கை அல்ல. அது செயல் திட்டம். பா.ம.க. ஆட்சி பொறுப்பேற்ற பின், நான் முதல்வரான பின்னர் 2 ஆண்டுகளில் இதில் சொல்லப்பட்டவற்றை எல்லாம் நிறைவேற்றுவேன். இல்லையென்றால் 2 ஆண்டில் பதவி விலகுவேன். பதவி ஆசை எனக்கு இல்லை. நான் மத்திய அமைச்சராக இருந்த போது ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் என்னை சந்திக்க வேண்டும் என விரும்பி, என் அலுவலகத்துக்கு வந்து என்னை சந்தித்து நான் சிறப்பாக பணியாற்றுவதாக பாராட்டினார். ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் நேரில் வந்து பாராட்டியது என்னைத்தான். உலகளவில் 4 விருதுகளை பெற்றுள்ளேன். வெள்ளையர்களுக்கு என்னைப்பற்றி தெரிகிறது. இங்கு தான் இதை பெருமையாக கருதுவதில்லை.

சென்னையில் வெள்ளம் வந்தபோது நான் முதல்வராக இருந்திருந்தால் தூங்கியிருக்கவே மாட்டேன். நான் மக்களை காப்பாற்றி இருப்பேன். இந்த மழையின் போது தர்மபுரியில் இருந்து 5 பரிசல்களை எடுத்து வந்து, ஆயிரக்கணக்கானோரை நான் காப்பாற்றினேன். இதை வேறு யாராவது செய்ய முடியுமா?. நான் ஆட்சிக்கு வந்ததும் எந்த இலவசங்களும் இருக்காது. இதனால் ஓட்டு கிடைக்காது என்றாலும் எனக்கு கவலை இல்லை. நான் முதல்வரானதும் சிபிஎஸ்இ தரத்தில் இலவச கல்வி, அப்பல்லோ தரத்தில் இலவச மருத்துவத்தை கொடுப்பேன். இவை என்னால் மட்டும் தான் முடியும். யாராலும் முடியாது. எல்லோரும் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களின் குடும்ப அட்டையை பிடுங்கி கொள்வேன்.

5 ஆண்டு மத்திய அமைச்சராக இருந்து மாற்றிக்காட்டிய எனக்கு தமிழகத்தை மாற்றத் தெரியாதா என்ன. எனக்கு அதிகம் வேண்டாம். ஒரு ஐந்து வருஷம் மட்டும் கொடுங்க. எப்படி தமிழ்நாட்டை மாத்தி காட்டுறேன்னு மட்டும் பாருங்க. உங்களுக்கு பிரச்னை என்றால் நான் ஓடோடி வருவேன். அதனால்தான் எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.

பா.ம.க.வின் வரைவு தேர்தல் அறிக்கையில் இருந்த 60 சதவீத தகவல்களை காப்பியடித்து உருவாக்கப்பட்டது தான் திமுக தேர்தல் அறிக்கை. அதை கதாநாயகன் என்கிறார். திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகன் இல்லை. திருட்டு கதாநாயகன். மதுவிலக்கை நாங்கள் தான் கொண்டு வருவோம். கள்ளச்சாரயம் விற்றால் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிப்போம். கள்ளச்சாரய விற்பனை பற்றி தகவல் அளித்தால் 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும். கள்ளச்சாராயம் விற்பது உறுதியானால் அந்த பகுதி ஊராட்சி தலைவர், விஏஓ, எஸ்.ஐ ஆகியோர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்படுவார்கள்.

தற்போது 35 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு கலெக்டர் இருக்கும் நிலை உள்ளது. நான் ஆட்சிக்கு வந்தது 12 லட்சம் மக்கள் தொகைக்கு ஒரு கலெக்டர் நியமிப்பேன். 5 மண்டலங்களில் தலைமை செயலர் அந்தஸ்தில் அதிகாரியை நியமிப்பேன். எல்லாவற்றுக்கும் சென்னை செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஒட்டு மொத்த இளைஞர்களும் அன்புமணிதான் முதல்வராக வர வேண்டும் என முடிவெடுத்துவிட்டனர். விவசாய புரட்சிக்கும் அன்புமணி வந்தால்தான் முடியும் என விவசாயிகள் முடிவெடுத்துவிட்டனர். அத்தனை பேரும் அன்புமணிக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துவிட்டனர்" என்று தடாலடியாக பேசினார்.

கூட்டத்தை முடித்து வேட்பாளர்களிடம் தனியாக பேசியவர், நமக்கு ஓட்டு போடணும்னு மக்கள் விரும்புறாங்க. ஆனா அவங்களுக்கு நம்ம சின்னம் தெரியலை. எல்லோரும் மாம்பழச்சின்னத்தோட மக்களை சந்திங்க" என்றார்.

-ச.ஜெ.ரவி

படங்கள்:
தி.விஜய்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close