Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

92 வயதில் அரசியலில் இருப்பது ஏன்? கருணாநிதியின் அட்ராசக்க பதில்!

 

92 வயதைக் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். ஏன் இன்னும் அரசியலில் இருக்கிறீர்கள் என்கிறார்கள். மக்களுக்காக பாடுபடத்தான் இந்த வயதிலும் இருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி மயிலாடுதுறையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் நேற்றிரவு நடைபெற்ற திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகுகள் கேட்டு அவர் பேசுகையில், "சமுதாயத்தை இளைஞர்கள் மட்டுமே உருவாக்க முடியும். தகுதியை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும், இளைஞர்களால் ஆகாதது எதுவுமில்லை. முன்னேறிய நாட்டையும் சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க இளைஞர்களால் மட்டுமே முடியும். அவர்கள்  தன்னை திருத்தி பின் மக்களைத் திருத்த வேண்டும். ஒரு காலத்தில் நான் இளைஞராக இருந்தேன்.  இப்போது 92 வயதைக் கடந்து சென்று கொண்டிருக்கிறேன். ஏன் இன்னும் அரசியலில் இருக்கிறீர்கள் என்கிறார்கள். மக்களுக்காக பாடுபடத்தான் இந்த வயதிலும் இருக்கிறேன்.
 

தமிழகத்தில் அண்ணாவின் பெயரால் ஒரு ஆட்சி நடைபெறுகிறது, உண்மையில் தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சி அல்ல.  காட்சி தான். ஜெயலலிதா பாணியில் சொல்ல வேண்டும் என்றால், கண்காட்சி.  இப்போது தமிழகத்துக்கு காட்சியும், தேவையில்லை, கண்காட்சியும் தேவையில்லை. நல்லாட்சி தான் தேவை.  பெரியாரின் கொள்கைகள் நிறைவேற உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஆளும் கட்சியினரின் அநியாயங்கள் தற்போது பல்வேறு செய்தித்தாள்களில் படித்துக் கொண்டு வந்தேன். தேர்தல் நடைபெறும் சூழலில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், வாக்காளர்களுக்கு வழங்க திரட்டி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கெல்லாம் ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா?  மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? தீர்வு விரைவில் தெரியவரும்.

திமுக அரசியல் கட்சி மட்டுமல்ல. சமுதாய சீர்திருத்த இயக்கமும்தான் என்பதை அனைவரும் உணர வேண்டும். சாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது திமுக. திமுக உறுப்பினர்கள் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்களால் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும். எனவே, திமுகவில் உள்ள இளைஞர்கள் அதற்கேற்ப தங்களை தயார் செய்து கொண்டு சமுதாய சீர்திருத்தப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

திமுகவையும், வேறு சில கட்சிகளையும் அழித்தொழிப்பதற்கு நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த முயற்சிகளை எதிர்த்து, புறக்கணிக்கச் செய்வது முக்கியமானது. தமிழர்களின் நாகரிகத்தை, வீரத்தை காப்பாற்ற உருவானதுதான் திமுகவின் தேர்தல் கூட்டணி. திமுகவினர் தங்கள் பணியை சமுதாயத்துக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டும். இந்தக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். வெறியாட்டமும், வெற்றுக் கூச்சலும் வெற்றியைத் தேடித் தராது.  புத்தர் அமைதி வழியைக் கடைபிடித்து வென்றதைப் போல நாமும் அமைதி வழியைக் கடைபிடிக்க வேண்டும்.  நாகை மாவட்டம் விவசாயத்தைப்  பிரதானமாகக் கொண்ட மாவட்டம், திமுகவின் தேர்தல் அறிக்கையில் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையே தரப்பட்டுள்ளது.  இது திமுகவின் தேர்தல் அறிக்கையாக இருந்தாலும் மக்கள் உணர்வுகளின் பிரதிபலிப்பு தான் இந்த அறிக்கை.  நெல்லுக்கு, கரும்புக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலையை திமுக அரசு நிச்சயமாக வழங்கும்.
 

திமுக ஆட்சிக்கு வந்தால் முதல்நாள் முதல் கையெழுத்து தமிழகத்தில் நிலவும் மதுப் பிரச்னைக்கு தீர்வான மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கைக்குத் தான்.  தமிழகத்தில் இளைஞர்கள், பெண்களின் வாழ்வை மது வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்பதை திமுக முழுமையாக உணர்ந்துள்ளது. திமுக முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரே தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய தற்காலிக ஏற்பாடாக மட்டுமே சில ஆண்டுகள் மதுவிலக்குத் தளர்த்தப்பட்டு, பின்னர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அதிமுக அரசு தான் மதுவிற்பனையை மிக அதிகமாக ஊக்கப்படுத்தியது. இப்போது ஜெயலலிதா சொல்கிறார் படிப்படியாக மதுவிலக்கு என்று, எப்படி படிப்படியாக குறைப்பார்கள்,  திமுக சொல்கிறது ஒரேடியாக மதுவிலக்கு! மதுவிலக்கு! மதுவை  மறப்போம்; தடுப்போம்;  ஒழிப்போம்.

மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும், என்பதில் திமுக உறுதியாக உள்ளது.  எனவே தான் திமுக அரசு பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்து மதுவிலக்கு அமலாக்கத்துக்குத் தான் என்பதில் திமுக உறுதியாக உள்ளது.  தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பெற திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

-த.க.தமிழ் பாரதன்

படங்கள்:
க.சதீஷ்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ