Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரங்கசாமி இப்படிச் செய்யலாமா? புதுச்சேரியில் புயல் கிளப்பிய ஜெயலலிதா!

 

கூட்டணி தர்மத்தை மட்டுமல்லாமல், புதுச்சேரியின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்தவர் ரங்கசாமி. நம்பிக்கை துரோகம் என்பது ரங்கசாமிக்கு கைவந்த கலை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து பேசினார்.

புதுச்சேரியில் இன்று அதிமுக பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, " புதுச்சேரியில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்க ஒற்றைச் சாளர முறை செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டிலேயே வளர்ச்சி கொடுக்க முடிந்தது என்றால் புதுச்சேரியை வளர்ச்சியுறச் செய்வது எளிது. ஆட்சியாளர்கள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர முயற்சிக்கவில்லை. நிர்வாக திறனற்ற ஆட்சியால் புதுச்சேரியின் வளர்ச்சி வீழ்ந்துவிட்டது. புதுச்சேரி உழவர்கரை நகராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்படும்.

தமிழகத்தைப் போன்று அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். விலையில்லா பாடபுத்தங்கள் உட்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்படும். மாணவர்களுக்கு மிதிவண்டி, லேப்டாப் வழங்கப்படும். தமிழகத்தை போல, விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்டவை வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கப்படும். புதுச்சேரியை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மூடிக்கிடக்கும் 3 பஞ்சாலைகள் புனரமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். ஏழை, எளியோர் நலம் பெறும் வகையில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் திட்டங்கள் நிறைவேற்றப்படும். சுதேகி, பாரதி உள்ளிட்ட 3 நூற்பாலைகள் புனரமைக்கப்பட்டு 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரி மாநில காவல்துறை நவீனப்படுத்தப்படும்.  ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 மருத்துவ இடங்களை 250 இடங்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கோயில்களிலும் அன்னதான திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களின் திருமண திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படும். பெண்கள் சொந்தத் தொழில் தொடங்க வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்படும்.

காங்கிரஸ் கட்சியும், என்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். காங்கிரஸ் கட்சி எதிரி என்றால் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி துரோகி. கூட்டணி தர்மத்தை மட்டுமல்லாமல், புதுச்சேரியின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்தவர் ரங்கசாமி. நம்பிக்கை துரோகம் என்பது ரங்கசாமிக்கு கைவந்த கலை. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், மக்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்தவர் ரங்கசாமி. என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம். புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். காங்கிரஸ்- திமுக கூட்டணி என்றால் இமாலய ஊழல் கூட்டணி  என்று பொருள். காங்கிரஸ்- திமுக ஊழல் கூட்டணியை இந்தத் தேர்தலில் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். புதுச்சேரியில் மக்களாட்சி மலர வேண்டும், அந்த ஆட்சி அதிமுக ஆட்சியாக அமைய வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close