Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவுக்கு 2 கோடி ரூபாய் கடன்; கையிருப்பு 41 ஆயிரம் மட்டுமே!

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தேர்தல் அதிகாரி பத்மஜாவிடம்  நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த மனுவில் அவர் அளித்துள்ள விபரங்கள்:

வேட்பாளர் படிவ ஒப்புகையின் முதல் பத்தியில்,  நான் அதிமுகவின் வேட்பாளராக  நிறுத்தப்பட்டுள்ளேன் என்றும், 2-வது பத்திக்கான பதிலில் தமிழ்நாட்டின் ஆயிரம் விளக்குத் தொகுதியில் என்னுடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அடுத்து தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிகளை குறிப்பிட்டுள்ளார்.  சமூக  வலைதள கணக்குகள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார்

குடும்ப விபரம் குறித்த பத்தியில், யாருமில்லை என்றும்,   பான் கார்டு எண்ணில்  காட்டப்பட்ட மொத்த வருமானம், 95,23,630.00 ரூபாய் (வரியிலிருந்து வருமான விலக்கு) என்று (2014- 2015) சொல்லப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் குற்றஞ் சாட்டப்பட்டு 2 அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிற்கு தண்டனை பெற்றுள்ளவரா? நிலுவையில் ஏதேனும் வழக்குகள் உள்ளதா என்ற கேள்வி  பத்திக்கு,  தம் மீது தொடரப் பட்டு சென்னை எழும்பூர் மெட்ரோபாலிடன் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கை குறிப்பிட்டுள்ளார்.


 1991- 1993 ஆண்டுகளில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் வருமான வரியை  செலுத்தவில்லை  என்று வருமானவரித் துறை 1997ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்திருந்தது. வருமான வரி ஏய்ப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வருமானவரித்துறை, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு கொடுத்தது.

மேலும் ஒரு கோடியே 99 லட்சம் ரூபாய் வரி பாக்கியையும், வருமான வருவாய்த் துறையிடம் கட்டிவிட்டதாகவும்  எங்கள் தரப்பில் சொல்லப்பட்டதால், வருமான வரித்துறையினர் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

பின்னர் அந்த வழக்கு சென்னை ஐகோர்ட், சிபிஐ கோர்ட்டுகளில் மாற்றப்பட்டு  இருந்ததையும் ஜெயலலிதா தம்முடைய வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதில்,   தண்டனை ஏதும் அளிக்கப்படவில்லை என்று சொல்லியுள்ளார்.

இரண்டு பக்க அளவிற்கு செல்வ வரி வழக்கை மட்டுமே குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, அதன் பின்னர்,  கர்நாடகா நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அதே வழக்கில் விடுவிக்கப் பட்டதையும், தற்போது அதே வழக்கு திமுகவின் க.அன்பழகனால் மேல் முறையீட்டு மனுவாக விசாரணையில் இருப்பதையும் சொல்லியுள்ளார். 

25 வங்கிகளில் 10,63, 83, 945.51 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும்,  தற்போது கையிருப்பாக 41 ஆயிரம் ரூபாய் மட்டும் இருப்பதாகவும் சொல்லியுள்ளார். கடந்த 2011- தேர்தலின் போது தனது கையிருப்பாக 25 ஆயிரம் ரூபாய் இருந்ததாக ஜெயலலிதா சொல்லியிருந்தார்,

ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர் பிரைசஸ், கோடநாடு எஸ்டேட்ஸ்,  ராயல் வாலே ஃப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ், க்ரீன் டீ எஸ்டேட்ஸ் ஆகியவற்றின் மொத்த சொத்து மதிப்பாக, 27,44,55,450.00 கோடிகள் காட்டப் பட்டுள்ளன.

ஹைதராபாத் , காஞ்சிபுரம், போயஸ் கார்டன் (தன்னுடைய தாயார் மூலமாக பெறப்பட்டதாக கூறியுள்ளார்) ஆகியவற்றின்  தற்போதைய  சந்தை மதிப்பு 72,09,83,190- கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.

அம்பாசிடர், மஹிந்திரா ஜீப் மற்றும் பொலீரோ, டெம்போ டிராவலர், ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி, கன்டெசா, டெம்போ ட்ராக்ஸ், இரண்டு டொயோட்டோக்கள் தம்முடைய வாகன சொத்துக்களாக (மதிப்பு : 42,24,000) காட்டியுள்ளார்.

வழக்கின் காரணமாக கைப்பற்றப்பட்டு, கர்நாடக நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள நகைகளின் மொத்த எடை 1250 கிலோ ஆகும். அதன் மதிப்பானது கிலோ ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் என்ற கணக்கின்படி, 3,12,50,000- கோடி  என்று கூறியுள்ள அவர்,  தம்முடைய ஒட்டுமொத்த அசையும், அசையா சொத்துகளின் மதிப்பு 41,63,55,395.51 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார்.


2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜெயலலிதா அளித்த உறுதிமொழிப் பத்திரத்தில், ‌அவரது அசையும் மற்றும் அசையாச் சொ‌த்துகளின் மதிப்பு சுமார் 51 கோடியே 41 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது
சுயமாக வாங்கிய சொத்துக்களின் மதிப்பு 72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய் என்றும், மொத்த சொத்துமதிப்பு 118 கோடியே 59 லட்சம் ரூபாய் என்றும் படிவத்தில்  தெரிவித்துள்ள அவர்,  2 கோடியே 4 லட்சத்து இரண்டாயிரத்து 987 ரூபாய் தனக்கு கடன் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

2016- சட்டமன்றத் தேர்தலின் வேட்புமனுவில், தனது சொத்துகளின் தற்போதைய மதிப்பு சுமார் 118 கோடியே 58 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு சுமார் 67 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதாவது 130 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அசையும் சொத்துகளின் மதிப்பு சுமார் 41 கோடியே 63 லட்ச ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஐந்து வெவ்வேறு நிறுவனங்களில் பங்குதாரர் என்ற முறையில் செய்துள்ள முதலீடுகள் 27 கோடியே 44 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாகவும், சேமிப்புக் கணக்குகளிலும் உள்ள தொகை சுமார் 10 கோடியே 64 லட்சம் ரூபாய் தவிர, 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 9 மோட்டார் வாகனங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது மற்றும் தாயார் பெயரில் உள்ள விவசாய நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அசையாச் சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு  72 கோடியே பத்து லட்ச ரூபாய்  அளவில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ‌அதில், தனது பெயரில் வாங்கிய அசையாச் சொத்தின் மதிப்பு 18 லட்சத்து 63 ஆயிரத்து 300 ரூபாய் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாங்கிய சொத்தில் நில மேம்பாடு, கட்டுமானம் முதலியவற்றிற்கு செய்த செலவு சுமார் 4 கோடியே 67 லட்ச ரூபாய் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

கையிருப்பு ரொக்கம் ரூ.41,000, அசையும் சொத்துகள்ரூ.41,63,55,395, சுயமாக வாங்கிய அசையா சொத்து    ரூ.18,63,300, அசையா சொத்துகளில் மதிப்பு    ரூ.4,66,73,190, சுயமாக வாங்கி சொத்து மதிப்பு    ரூ.72,09,83,190,  மொத்த  சொத்து மதிப்பு  ரூ.118,59,160,75 கடன் பொறுப்புகள்  ரூ.2,04,02,987 ஆகும் என்று ஜெயலலிதா தம்முடைய மனுவில் கூறியுள்ளார்.

- ந.பா.சேதுராமன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ