Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெற்றி வசப்படுமா 'தளி' ராமச்சந்திரனுக்கு? தளி தொகுதி நிலவரம்!

 வாக்காளர் எண்ணிக்கை:


தொகுதி புராணம்:

குளிர்ந்த காற்று, ரோஜா தோட்டங்கள், அடர்ந்த மலைப்பகுதிகள் என  தளி தொகுதிக்குள் நுழைந்தால் அத்தனை ஏகாந்தம். ‘லிட்டில் இங்கிலாந்து’ என்று அழைக்கப்படும் தளி தொகுதியின் நில அமைவு தமிழகத்தின் வரப்பிரசாதம். நிலப்பரப்புதான் ஏகாந்தமே ஒழிய, மக்களைப் பார்த்தால் ஏமாற்றம்தான்.  நாம் பார்த்திராத ஆதிகாலக் கிராமங்கள்  இன்னமும் இங்கு உள்ளன.

கல்வியறிவு இல்லாத மக்கள், அடிப்படை வசதிகள் இல்லாமல் துளியும் முன்னேற்றமில்லாத கிராமங்கள் என தத்தளிக்கிறது தளி. தமிழக எல்லையில் காட்டுப்பகுதி சூழ இருப்பதால் கவனிப்பாரற்று இருக்கிறது இந்தத் தொகுதி.

1977-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னபாக, இது உத்தனப்பள்ளி தொகுதி. 1977-க்குப் பிறகு, உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டது. தளி தொகுதி உதயமானது. இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கும் இந்த தொகுதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என  4 மொழிகள் பேசும் வாக்காளர்கள் நிறைந்துள்ளனர்.

 

நவீன காலத்திலும் தங்களது பழமை மாறாத இருளர் இன மக்கள், கவுடா, ரெட்டி சமுதாய மக்களும் அதிக அளவில் உள்ளனர். இதைத் தவிர பிற சமுதாய மக்களும் பரவலாக உள்ளார்கள். வயிற்றுப்பிழைப்புக்காக ஆந்திரா, கர்நாடகா என  அண்டை மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்பவர்களே இங்கு அதிகம்.

தொகுதி எல்லைகள்:

தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, தளி சட்டமன்றத் தொகுதியில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. ஏற்கனவே இருந்த தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச் சேர்ந்த கிராமப் பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கி உள்ளன.

கடந்த தேர்தல்கள் ஒரு பார்வை:

ளி சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில், இந்திய கம்யூனிஸ்ட், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சரிசமமான ஓட்டு வங்கி உள்ளது. திராவிடக் கட்சிகள் இதுவரை தளி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதே இல்லை. 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் தளி தொகுதியில் வெற்றி பெற்ற ராமச்சந்திரன்தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் அவர்,  இந்தமுறையும் தளி தொகுதியில் போட்டியிடுகிறார்.


2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.ராமச்சந்திரன் உட்பட 7 பேர் போட்டியிட்டனர். தி.மு.க. வேட்பாளர் ஒய்.பிரகாசை விட 6 ஆயிரத்து 435 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் ராமச்சந்திரன். அந்தத் தேர்தலில் ராமச்சந்திரன் 74 ஆயிரத்து 353 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் ஒய்.பிரகாஷ் 67 ஆயிரத்து 918 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் :


1977  - காங். வெற்றி
பி.ஆர்.ராஜாராம்நாயுடு (காங்.) - 18,559
பி.வெங்கடசாமி (சுதந்திரா கட்சி) - 13,388

1980  - காங். வெற்றி
ராஜாராம்நாயுடு (காங்) - 25,558
விஜயேந்திரய்யா (ஜனதா கட்சி) - 22,061

1984 - காங். வெற்றி
கே.வி.வேணுகோபால் (காங்) - 36,441
விஜயேந்திரய்யா (ஜனதா கட்சி) - 34,017

1991 - காங். வெற்றி
வெங்கட்ராமசெட்டி (காங்) - 38,831
ரெங்காரெட்டி (பாரதீய ஜனதா) - 28,270

1996 - இந்திய கம்யூனிஸ்டு வெற்றி
எஸ்.ராஜாரெட்டி (இந்திய கம்யூனிஸ்டு) - 26,427
வெங்கட்ராமரெட்டி (காங்.) - 18,938

2001 - பி.ஜே.பி வெற்றி
கே.வி.முரளிதரன் (பாரதீய ஜனதா) - 36,738
எஸ்.ராஜாரெட்டி (இந்திய கம்யூனிஸ்டு) - 30,521

2006 - சுயேச்சை வெற்றி
டி.ராமச்சந்திரன் (சுயேட்சை) - 30,007
எஸ்.நாகராஜரெட்டி (இந்திய கம்யூனிஸ்டு) - 25,313

2011 - இந்திய கம்யூனிஸ்டு வெற்றி
டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) - 74353
ஒய்.பிரகாஷ் (தி.மு.க.) - 67918

 

தொகுதியின் குறைகள்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதி, தளி. கல்வி வளர்ச்சி மிகவும் குறைவு. முற்றிலும் கல்வி அறிவே பெறாத மக்கள் வசிக்கும் பல குக்கிராமங்கள் இங்கு உண்டு.  அதிகமான குழந்தைத் திருமணங்கள் உட்பட  பல்வேறு சமூகச் சிக்கல்களும் இங்கு அதிகம். யானைகள் தொல்லையும் அதிகம். இதனால், விவசாயப் பயிர்கள் நாசம் ஆவதும், உயிர் இழப்புகளும் தொடர்கதையாகவே இருக்கிறது. குக்கிராமங்களில் சாலைகள் பழுதடைந்துள்ளன.  சில மலை கிராமங்களுக்கு இன்றுவரை போக்குவரத்து வசதி கிடையாது.  தொகுதியில் அதிக வளர்ச்சித் திட்டங்கள்  எதுவும் செயல்படுத்தப்படவில்லை என குறைகள் நிறைந்திருக்கிறது தளி.

என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் (சி.பி.ஐ)?

மலைவாழ் மக்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால், அந்த மக்களுக்கான  வளர்ச்சித் திட்டங்கள் நிறைய செய்திருக்க வேண்டும். ஆனால், எதுவும் செய்யப்படவில்லை. பெரும்பாலான கிராமங்களில் எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லை.

தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்ததை தவிர  வேறு பெரிய வகையில் தொழிற்சாலையோ ஆக்கப்பூர்வமான பணிகளையோ செய்யவில்லை என்பது மக்களின் ஆதங்கம்.

ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள்:

இந்த சட்டமன்றத் தேர்தலில், ராமச்சந்திரனை இந்திய கம்யூனிஸ் கட்சி வேட்பாளராக அறிவித்த நிமிடம் முதல், அந்தக் கட்சி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. காரணம், தளி ராமச்சந்திரன் மீது உள்ள வழக்குகள். கொலை வழக்கு, ஆள்மாறாட்ட வழக்கு, கிரானைட் குவாரி தொடர்பான புகார்கள் என அவர் மீது குற்றச்சாட்டுகளுக்குப் பஞ்சமில்லை.

 

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், கல்வியறிவில் மிகவும் பின் தங்கியிருக்கும் தளி தொகுதி மக்களை தன்னுடைய இன்னொரு முகத்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் என ஏராளமான புகார்கள் ராமச்சந்திரனுக்கு எதிராக அணிவகுக்குகின்றன.

ராமச்சந்திரனை எதிர்க்கும் பிரதான வேட்பாளர்களின் ப்ளஸ் மைனஸ்:


ஒய்.பிரகாஷ் ( தி.மு.க)

 

+  கடந்த முறை 6,435 வாக்குகளில் ராமச்சந்திரனிடம் வெற்றியை நழுவவிட்ட ஒய்.பிரகாஷ்,   கவுடா சமூகத்தைச் சேர்ந்தவர். தளியில் ராமச்சந்திரனை எதிர்க்கும் அளவுக்கு செல்வாக்குமிக்கவர், பணம் படைத்தவர், கட்சியில் செல்வாக்கானவர்.


- தொண்டர்களிடம் நெருங்கிப்பழக மாட்டார்.

நாகேஷ்  (அ.தி.மு.க):

 

+ ஓரளவுக்கு தொகுதியில் அறிமுகமானவர்
- முதல்முறையாக வேட்பாளராக நிற்கிறார்.

அருண்ராஜ் (பா.ம.க.)

 

+ எளிமையானவர்
தொகுதியில் பெரிய அளவு அறிமுகம் இல்லை

வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள்:

மற்ற தொகுதிகளைப்போல இந்தத் தொகுதியில் கட்சிப்பணிகளோ அல்லது தலைவர்களின் செல்வாக்கோ தேர்தல் முடிவைத் நிர்ணயிக்காது. காரணம், அங்கு வாழும் மக்கள் விழிப்பு உணர்வு இல்லாதவர்கள். கிராமங்களுக்குச் சாலை அமைத்துக்கொடுத்த தளி ராமச்சந்திரன், அந்த மக்கள் கல்வி கற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவில்லை.  அந்த மக்களுக்கு  சாலையே ஒரு சாதனையாக தெரிந்தது. இத்தனை நாட்களாக  இல்லாமல் இருந்த  வசதியை நமக்கு கிடைக்கச் செய்திருக்கிறாரே என்று மக்கள் ராமச்சந்திரனிடம் சரணடைந்துவிட்டார்கள்.

ஆனால் ராமச்சந்திரனின் சுயரூபமோ, சாலையெல்லாம் சாதாரண விஷயம் என்ற எதார்த்தமோ அவர்களுக்குத் தெரியாது. அதை அவர்களிடம் பிரசாரத்தின் வாயிலாக யார் எடுத்துச் சொல்லி புரியவைக்கிறார்களோ, அவர்களால்தான் ராமச்சந்திரனை வீழ்த்தமுடியும். அந்த வாய்ப்பு இப்போதைக்கு இருப்பதாக தெரியவில்லை என்பதால், தளி தொகுதியில் தொடர்ந்து ராமச்சந்திரன்தான் வெற்றிக்கொடி நாட்டுவார் என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.



 
- எம்.புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ