Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பர்கூர் தொகுதியை பறிகொடுக்காமல் இருக்குமா அ.தி.மு.க? - தொகுதி நிலவரம்

z`

வாக்காளர்களின் எண்ணிக்கை:

தொகுதி புராணம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள பர்கூர் தொகுதி, 1977-ம் ஆண்டு, ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதியில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது.

தமிழகத்தின் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் அமைந்துள்ள பர்கூர் தொகுதியை தமிழக மக்களால் ஒருபோதும் மறக்க முடியாது. தமிழக அரசியலில் யானை பலம் கொண்ட கட்சியின் தலைவியான ஜெயலலிதாவையே வீழ்த்திய தொகுதி இது.

மொத்த ஜவுளி வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறது இந்தத் தொகுதி. பளபளக்கும் ஜவுளிக்கடைகளால் பர்கூர் வீதிகள் நிரம்பி இருக்கின்றன.  இதை ஒரு குட்டி சூரத் என்றே அழைக்கிறார்கள். ‘மா’ சாகுபடியிலும் முன்னணி வகிக்கிறது. 



பர்கூர் தொகுதியில் வன்னியர், வெள்ளாள கவுண்டர், நாயுடு, யாதவர், குரும்பர், தாழ்த்தப்பட்டோர்  ஆகியோர் பரவலாக இருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வின் கோட்டை:

இதுவரை நடந்துள்ள 10 சட்டசபைத் தேர்தல்களில் 8 முறை அ.தி.மு.க-வும், 2 முறை தி.மு.க-வும் வெற்றி பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, 1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டது. அப்போது பர்கூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெ. அணி வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து 1991-ல் நடந்த தேர்தலில் பர்கூரில் போட்டியிட்டு வெற்றி  பெற்று  முதலமைச்சரானார் ஜெயலலிதா .  அந்த அளவுக்கு அ.தி.மு.க-வின் கோட்டையாக இருந்தது பர்கூர்.

யானை காதில் புகுந்து வந்த சிற்றெறும்பு:

1996-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவே தோற்கடிக்கப்பட்டார். தி.மு.க-வின் வேட்பாளர் சுகவனத்தால் வீழ்த்தப்பட்டார் ஜெயலலிதா.

“யானை காதில் புகுந்து வந்த சிற்றெறும்பே..” என சுகவனத்தைப் புகழ்பாடினார் கருணாநிதி. 

கடந்த தேர்தல்கள் பற்றி ஒரு பார்வை:

2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை, 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கரூர் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றிபெற்றார். அதனால், தம்பித்துரை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2009-ம் ஆண்டு பர்கூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.



தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த அந்தத் தேர்தலில், அ.தி.மு.க போட்டியிடவில்லை. தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட், பி.ஜே.பி என நான்கு முனைப் போட்டி நிலவியது. தி.மு.க. வேட்பாளர் நரசிம்மன் வெற்றி பெற்றார்.

2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் கே.இ.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. சார்பில் டி.கே.ராஜா உட்பட மொத்தம் 10 பேர் இங்கு போட்டியிட்டனர். கே.இ.கிருஷ்ணமூர்த்தி, 88 ஆயிரத்து 711 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டி.கே.ராஜா 59 ஆயிரத்து 271 வாக்குகள் பெற்றார்.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்:

1977 தேர்தல் - அ.தி.மு.க. வெற்றி

எச்.ஜி.ஆறுமுகம் (அ.தி.மு.க.) - 28,812

திம்மராயன் (தி.மு.க.) - 15,420

தொகுதி பிரச்னைகள்

நிலத்தடி நீர் குறைந்ததால், தண்ணீருக்கு மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்னும் வரவில்லை. தொகுதி முழுவதும் பரவலாக தண்ணீர் பிரச்னை உள்ளது. பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. பர்கூர் சிப்காட் போச்சம்பள்ளியில் அமைந்துள்ள சந்தை, பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய 2-வது சந்தையாக உள்ளது. அதனால் அங்கு பெரிய அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது  மக்களின் எதிர்பார்ப்பு.


தொகுதி எல்லைகள்:

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு முற்றிலுமாக மாற்றம் பெற்றன, பர்கூர் தொகுதியின் எல்லைகள். 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை இந்தத் தொகுதியில் பர்கூர் மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமப் பகுதிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, மத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அனைத்தும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊத்தங்கரை (தனி) தொகுதியுடன் இணைக்கப்பட்டு உள்ளன.



இதற்குப் பதிலாக, நீக்கப்பட்ட காவேரிப்பட்டணம் தொகுதியில் உள்ள 20 ஊராட்சிகள், பர்கூர் சட்டசபை தொகுதியுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ கே.இ.கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க)?

பர்கூர் தொகுதியில் உள்ள 24 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரையில் ரூ.7 கோடி மதிப்பில் புதிய கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால், கர்நாடகாவில் பல இடங்களில் தடுப்பணை கட்டிவிட்டதாலும், மணல் கொள்ளையாலும் இந்த திட்டம் பயனற்று போய்விட்டது. தண்ணீர் வரவில்லை. போச்சம்பள்ளி சிப்காட்டுக்கு கொடமாண்டப்பட்டியில் இருந்து சிப்காட் வரையில் ரூ.12 கோடி மதிப்பில் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு தரப்படவில்லை. அவர், தொகுதிப் பக்கமே தலைக்காட்டவில்லை, சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தப் பெரிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை என்ற புகார்கள் உள்ளன. இவை, அ.தி.மு.க-வுக்குப் பாதகமான சூழலை உருவாக்கும்.

களம் காணும் பிரதான வேட்பாளர்கள் பலம்/ பலவீனம்

சி.வி.ராஜேந்திரன் (அ.தி.மு.க) (+)




* தம்பிதுரையின் உறவினர். வெள்ளாளக்கவுண்டர்  என்பதால் அந்த சமுதாயத்து ஓட்டுகள் இவருக்கு அதிகம் விழும்


* கட்சியில் சீனியர்.  எல்லோரிடத்திலும் இயல்பாகப் பழகக்கூடியவர்.

*  இரண்டு ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்தவர்

(- ) 

*  பர்கூரில் மட்டுமே நன்கு அறிமுகமானவர்.

*  காவேரிப்பட்டிணம், போச்சம்பள்ளி பகுதிகளில் பெரிய அறிமுகம் இல்லாதவர்

இ.சி.கோவிந்தராசன்   (தி.மு.க) ( + )




  பலிஜ நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமுதாய ஓட்டுகள் இவருக்கு ப்ளஸ்.
  பணம் செலவழிக்கக் கூடியவர்.

(- ) தொகுதி மக்களிடத்தில் பெரிய அளவு அறிமுகம் இல்லை. கட்டப்பஞ்சாயத்து என்ற இமேஜ்

எ.ஆர்.ராஜேந்திரன் (த.மா.க) (மக்கள் நலக்கூட்டணி)



(+ ) முன்னாள் ஊராட்சிக்குழு தலைவராக இருந்தவர். இயல்பாக பழகக் கூடியவர்.


(- )   சேர்மனாக இருந்தபோது எதுவுமே செய்யவில்லை என்ற புகார். ஊத்தங்கரை தொகுதியைச் சேர்ந்தவரான இவர், பர்கூரில் போட்டியிடுகிறார்.

குமார்    (பா.ம.க)



(+ )  வன்னியர்களின் ஓட்டு ப்ளஸ்
(- )  தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லாதது மைனஸ்

மணிவண்ணன் (பி.ஜே.பி)

(+ )  கட்சியில் அறிமுகமான நபர்
(- )   தொகுதி மக்களிடம் அறிமுகம் இல்லை 

வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள்:

பர்கூரில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும்  தொகுதியில் உள்ள தங்கள் கட்சியினரிடம் அறிமுகம் பெற்றவர்கள். ஆனால், தொகுதி முழுக்க அவர்களுக்கு அறிமுகம் இல்லை. ஆகையால், பர்கூரைப் பொறுத்தவரை கட்சித் தலைமைக்கே ஓட்டு. ஜெயலலிதா இந்தத் தொகுதியில் போட்டியிட்டு  வெற்றி பெற்றபிறகு, இங்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார்.

ஒரு அரசு பெண்கள் மகளிர் கலைக்கல்லூரி, ஒரு பொறியியல் கல்லூரி, 10 மேம்பாலங்கள், சிப்காட், பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து வசதி என அ.தி.மு.க-வின் பெயரை  பர்கூரில் அழுத்தமாகப் பதிவு செய்து வைத்துள்ளார் ஜெயலலிதா.

ஆனாலும்  பலமுனை போட்டி உள்ளதால் அ.தி.மு.க அசால்ட்டாக இருந்துவிட முடியாது. இறங்கி வேலை செய்தாக வேண்டும்.  சி.வி.ராஜேந்திரனுக்கு தம்பிதுரை பக்கபலமாக இருக்கிறார். பர்கூரில் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான சூழல் இருந்தாலும், அ.தி.மு.க ஜெயிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், ஜெயலலிதாவையே வீழ்த்தியவர்கள் ஆயிற்றே பர்கூர் மக்கள்! அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் இன்றைய நிலவரப்படி சமவேகத்தில் இருக்கிறார்கள்.

எம்.புண்ணியமூர்த்தி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ