Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சி மேற்கு தொகுதியை திரும்ப மீட்பாரா கே.என். நேரு? - ஸ்டார் வேட்பாளர் ஸ்டேட்டஸ்

                                               

 

வேட்பாளர்:  கே. என். நேரு, திமுக

சிறப்புகள் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்

தொகுதி :    திருச்சி மேற்கு

ராஜீவ் காந்தியை கவர்ந்த நேருவின் அரசியல் பயணம்

 

லால்குடி தொகுதிக்கு உட்பட்ட காணக்கிளிய நல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நேரு. ஏற்கெனவே லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறையும், திருச்சி மேற்கு (அப்போது திருச்சி-2) சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து ஒரு முறையும் வெற்றி  பெற்றவர்.  விவசாயக் குடும்பம். அப்பா நாராயண ரெட்டியார்.  பி.யூ.சி., வரை படித்த நேரு, அரிய நல்லூரில் மிளகாய் மண்டி வைத்தார். பிறகு, புள்ளம்பாடியில் பால் சொசைட்டி. கையில் பணமும் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் அறிமுகமும் கிடைத்ததும் அரசியலில் இறங்கினார்.

புள்ளம்பாடி யூனியன் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் தேர்தலில் நின்றார். தேர்தல் நடத்திய எம்.ஜி.ஆர். முழுமையாகத் தோற்று, அதுவரை தொடர் தோல்வியில் இருந்த தி.மு.க. மொத்தமாக வெற்றிபெற்ற தேர்தல் அது. அன்று ஆரம்பித்த அரசியல் பயணம்,  தற்போது வரை தொடர்கிறது. இவருக்கு மனைவி சாந்தா, மகன் அருண், 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 20 வருடங்களாக திருச்சி திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வருபவர், 1989-91 வரை தமிழக மின்சாரதுறை அமைச்சர், பால்வளம், செய்தித் துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்,1996-2001ல் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர், கடந்த 2006-2011 வரை போக்குவரத்து துறை அமைச்சர் என பலமிக்க பதவிகளில் இருந்தவர், இப்போது  திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும், அடுத்து நடந்த இடைத்தேர்தலிலும் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் நேரு.

 

விவசாயக் குடும்பம். தேசம் அறிந்த தலைவரான ஜவஹர்லால் நேருவைப்போல வர வேண்டும் என்பதற்காக நேரு என்று பெயரை வைத்தார் தந்தை.  மத்திய அரசில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்து நகர்பாலிகா என்று ஏராளமான பணத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்குத் திருப்பிவிட்ட காலகட்டம் அது.


பிரதமரை திருச்சியில் சந்திக்கும் வாய்ப்பு நேருவுக்குக் கிடைத்தது. “உங்கள் தாத்தா பெயரைத்தான் எனக்கு வைத்திருக்கிறார்கள்” என்று சொல்லி, பிரதமரின் கவனத்தைக் கவர்ந்த நேரு, தன் யூனியனுக்குப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டார். அதனால், அந்தப் பகுதியில் செல்வாக்கு உயர்ந்தது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சட்டசபைக்குத் தேர்தல். எம்.எல்.ஏ. ஆசை துளிர்த்தது. அப்போது, திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர் செல்வராஜ். அவரே ‘ஓனர்’ என்று தீனதயாளன் ரெட்டியார் என்பவரை அழைப்பார். அந்த ரெட்டியாரை நேரு பிடித்தார். ‘ஓனர்’ சொன்னதற்குப் பிறகு மறுக்க முடியாது என்பதால், லால்குடி தொகுதியை நேருவுக்குத் தாரை வார்த்தார் செல்வராஜ். சொந்த செல்வாக்கும் சாதி வாக்காளர்களின் உதவியும் நேருவை வெல்லவைத்தது.


நல்ல காலம் நேருவுக்கு ஆரம்பித்தது. அமைச்சர் பதவியைப் பங்கிடும் சதுரங்கத்தில் சத்தம் இல்லாமல் நேரு நுழைகிறார்.

தேடி வந்த அமைச்சர் பதவி

திருச்சி மாவட்டத்தில் செல்வாக்கான செல்வராஜ், முசிறி தொகுதியில் தோற்கிறார். அவருக்கு அடுத்த செல்வாக்கான மலர்மன்னனுக்கு மந்திரி பதவி தரக் கூடாது என்று கருணாநிதியின் இளமைக் கால நண்பர் அன்பில் தர்மலிங்கம் தடுக்கிறார். அன்பில் பொய்யாமொழிக்குத் தரலாமா என்று யோசித்தால், முக்குலத்தோர் பிரதிநிதித்துவம் ஏற்கெனவே எகிறிக்கொண்டு இருந்தது.

அப்படியானால்... என்று தேடியபோது, தெரிந்தவர் நேரு. மின் துறை அமைச்சராக நேரு இணைந்தார்.

வைகோ பிரியும்போது செல்வராஜும் மலர்மன்னனும் பிரிந்தார்கள். நேருவுக்குத் தடையாக இருந்த இரண்டு மலை முகடுகள் தகர்ந்தன. அன்பில் பொய்யாமொழியின் அகால மரணம், அவர் தாண்டியாக வேண்டிய கடலை வற்றவைத்தது. ‘நான் யாருக்கும் அடிமை அல்ல’ என்று சொல்லும் ஒரே ஆளாக திருச்சி என்.சிவா மட்டும்தான் இருக்கிறார். உள்ளூர் பாலிடிக்ஸுல் செல்வாக்கு இல்லாதவர் சிவா. திருச்சியில், இரண்டாம் கட்ட ஆட்களாக வலம் வரும் எம்.எல்.ஏ-க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், துணை மேயர் அன்பழகன் ஆகிய மூவரும், நேரு காரின் பின் இருக்கைத் தம்பிகளாக மாறினார்கள்.

 

ஒருகட்டத்தில், அழகிரி ஸ்டாலின் ஆகிய இரட்டைக் குதிரைகளைத் திருப்திப்படுத்த முடியாமல் நேரு திணறிவந்தார். தனது தம்பி ராமஜெயத்தை மதுரைக்கு  தூதுவராக அனுப்பிவிட்டு, ஸ்டாலின் சானலை மட்டும் நேரு கவனித்துக்கொண்டார்.

நேரு என்றால் கருணாநிதிக்கும் தனிப் பிரியம். அதை அதிகப்படுத்திக் காட்ட நேரு எடுத்த முயற்சிதான் திருச்சியில் திறக்கப்பட்ட ‘கலைஞர் அறிவாலயம்‘. திறப்பு விழா ரிப்பனை வெட்ட, கருணாநிதி கையில் தரப்பட்டது தங்கக் கத்தரிக்கோல். ஆனால், அது வெட்டவில்லை. இரும்புக் கத்தரிக்கோலைக் கேட்டு வாங்கினார் கருணாநிதி. அது வெட்டியது. “ஏழைகளுக்காகக் கட்டும் மாளிகையில் இரும்புக் கத்திரிக்கோல்தான் பயன்படுத்த வேண்டும்“ என்றார் கருணாநிதி. அந்த அளவுக்குச் செல்வம் பெருகிய குடும்பமாக இன்றைக்கு நேரு வளர்ந்துவிட்டார். அவருக்கு இரண்டு கைகளாக இருந்தவர்கள் அவரது தம்பிகள் ராமஜெயமும் ரவிச்சந்திரனும்.

ப்ளஸ்

யார் வேண்டுமானாலும், எளிதில் தொடர்புகொள்ளலாம். பிரச்னைகள் என்றால், காதுகொடுத்து கேட்பார். அடிக்கடி டென்ஷன் ஆனாலும், உடனே கூல் ஆகி எதிரிலிருப்பவரின் பிரச்னையை தீர்த்து வைப்பார்.

மைனஸ்

சட்டென்று வரும் கோபம்தான். ஏற்கனவே இவரின் தம்பி ராமஜெயம் ஏற்படுத்திவிட்டுப்போன நில ஆக்கிரமிப்புகள், கட்டைப் பஞ்சாயத்து விவகாரங்கள் மக்கள் மனதில் இன்னும் மறையாமல் நிற்கின்றன.


எவ்வளவுதான் நேரு அரசியலில் உச்சத்தை தொட்டாலும் தற்போது அவருக்கு இறங்குமுகம்தான். அவரின் அரசியல் எதிரியான முன்னாள் அமைச்சர் செல்வராஜ், தற்போது அ.தி.மு.கவுக்கு தாவி விட்டார். முத்திரையர் சமூகத்தில் முக்கியமானவர். அவர் தற்போது நேருவை வீழ்த்தவேண்டும் என்று தீவிர பிரசாரத்தில் இறங்கியிருப்பதை கண்டு நேரு கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார். அதே போல, அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷை தற்போது ஸ்டாலின் தரப்பு,  நேருவுக்கு எதிராக கொம்பு சீவி விட்டிருக்கிறது. முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மகேஷுக்கு தி.மு.க-வில் நல்ல எதிர்காலம் தெரிவதால், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்த நேருவுக்கு தற்போது பிரச்னைதான்.

தி.மு.க. ஆட்சியை பிடித்தால், மகேஷா... நேருவா? என்கிற விவாதம் வந்தால், ஸ்டாலின் நிச்சயமாக மகேஷைத்தான் ஆதரிப்பார் என்றே தெரிகிறது. அதனால் மகேஷ் ஆதரவாளர்களும், முக்குலத்தோரும் இந்த தேர்தலில் நேருவை ஜெயிக்கவிடக்கூடாது என்றே கருதி காய் நகர்த்தி வருகிறார்கள். இவர்களை சரிகட்ட, பிஸினஸ் மூளையான தம்பி ரவியை களம் இறக்கிவிட்டிருக்கிறார் நேரு. கடந்த தேர்தலில் ராமஜெயத்தைப் போல, இந்த தேர்தலில் ரவி. இவர் எப்படி நேருவுக்கு கைகொடுக்கப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

தொகுதி டிராக் ரெக்கார்ட்: 

எப்போதும் விஐபி தொகுதியாக இருந்த இந்த தொகுதி அடையாளமில்லாமல் இருக்கிறது. அமைச்சர்களாக தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த,  அன்பில் தர்மலிங்கம், நல்லுசாமி, கே.என்.நேரு, மரியம்பிச்சை, பரஞ்சோதி என அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும் அமைச்சர்களாக வலம் வந்தவர்களை தேர்ந்தெடுத்த தொகுதி இது.

'திருச்சி 2' என்ற பெயரில் இருந்த தொகுதிதான் சில தெருக்கள் இடம் மாறியதுடன் 'திருச்சி மேற்கு' என்றாகியிருக்கிறது. தொகுதியைச் சார்ந்த பகுதிகளில் பெரிய மாற்றமில்லை.

திருச்சிராப்பள்ளி தாலுக்கா (பகுதி) , திருச்சி (மாநகராட்சி) வார்டு எண்: 39 முதல் 42 வரை மற்றும் 44 முதல் 60 வரையிலான உறையூர், மத்திய பேருந்துநிலையம், பீமநகர், மருதாண்டாகுறிச்சி, பாத்திமா நகர், தியாகராஜா நகர், பாக்கு பேட்டை, சோழமாநகர், நவாப்தோட்டம், தில்லைநகர் , புத்தூர், உய்யக்கொண்டான் திருமைல, தென்னூர், லெட்சுமிபுரம்,மார்சிங்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த தொகுதி  முழுவதும் திருச்சி மாநகர்பகுதியை உள்ளடக்கியது.

 

திருச்சியின் இதயப்பகுதியான தில்லை நகர், புத்தூர், உறையூர் உள்ளிட்டபகுதிகள் இந்த தொகுதியில் உள்ளது, தில்லை நகரில் 20க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், புத்தூரில் திருச்சி அரசு மருத்துவமனை, மத்திய பேருந்து நிலையம், வணிகவளாகங்கள் என தினமும் வந்துபோகும் முக்கியமான தொகுதியாக திருச்சி மேற்கு தொகுதி உள்ளது. திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தேவை என்பதை கருத்தில் கொண்டு இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே.என்.நேரு கொண்டுவர திட்டமிட்டார். ஆனால் அவற்றை ஆட்சி மாறியதும் அதிமுக தலைமை மறந்துபோனது.

ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட,  கடந்த திமுக ஆட்சிகாலத்தில்  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன் கட்டி திறக்கப்பட்டது. இப்படியிருக்க இப்போது, 'இந்த கட்டடடம் கட்டியதில் ஊழல் நடந்திருக்கிறது. கட்டடங்கள் தரமாக கட்டவில்லை' என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு நடந்த முதல் தேர்தலில் (1957) கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம். கல்யாணசுந்தரம் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. 1962லும் அவர்தான் இந்தத் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார்.

1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது என்றாலும், கட்சியிலிருந்து எம்ஜிஆர் பிரிந்தது முதல் இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாகத் தொடர்ந்தது. அடுத்து  1989-ல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக, இங்கு நிலவிய நான்குமுனைப் போட்டியும், ஒரு காலத்தில் அன்பில் தர்மலிங்கத்தின் தொகுதியான திருச்சி 2லிருந்து மீண்டும் அன்பில் பொய்யாமொழி வெற்றி பெற வழிவகுத்தது.  அடுத்து 1991 ராஜீவ் அனுதாப அலையில் இந்தத் தொகுதியை அதிமுக மீண்டும் கைப்பற்றியது என்றாலும் 1996 முதல் இங்கே கொடிகட்டிப் பறப்பது என்னவோ திமுகவின் செல்வாக்குதான். இதையொட்டிதான் லால்குடியிலிருந்து கடந்த 2006 ல் தொகுதி மாறிய நேரு, அடுத்தடுத்து  இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த 2006 ம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலில் கே.என்.நேரு 74, 026 வாக்குகள் பெற,  அதிமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட என்.மரியம்பிச்சை 57, 394 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.  இந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற நேரு அமைச்சரானார்.

கடந்த 2011 தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நேருவை எதிர்த்து வெற்றிபெற்றதற்காகவே அமைச்சராக்கப்பட்டார் மரியம்பிச்சை. அவர் வெற்றிபெற்ற கையோடு சென்னை செல்லும் வழியில் நடந்த கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் நேரு களமிறங்க, அவரை எதிர்த்து  பரஞ்சோதி  அதிமுக சார்பில் போட்டியிட்டார்.  இந்த ஆட்சியின் துவக்கத்தில் நடந்த முதல் இடைத்தேர்தலில்  கே. என்.நேருவை 14,608 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி,  பரஞ்சோதி எம்.எல்.ஏ ஆனார்.  அடுத்து அமைச்சர் வாய்ப்பும் வழங்கப்பட்டது.  அடுத்து சில மாதங்களில் இவர் மீது எழுந்த பாலியல் சர்ச்சைகளால் அமைச்சர் பதவி பறிபோனது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை :

ஆண்           :1,23,373,

பெண்          :1,30,172,

இதர           : 6

மொத்தம் :  2,53,551 வாக்காளர்கள்.

எதிர்த்து போட்டியிடும் மற்ற பிரதான கட்சி வேட்பாளர்கள்:

அதிமுக வேட்பாளர் :  ஆர்.மனோகரன்


தற்போது சட்டமன்ற அரசு தலைமை கொறடாவாக இருக்கும் இவர், திருச்சி  திருவானைகோவில், திருநகரில் வசிக்கிறார். பி.எஸ்.சி வரை படித்துள்ள இவர், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.  ரங்கசாமி நாயுடு என்பவரின் மகனான மனோகரன், சொந்தமாக பிஸ்னஸ் செய்துவந்தார். இவருக்கு  சாந்தி என்கிற மனைவியும் சங்கீதா, கவிதா என்ற இரு மகள்களும், விக்னேஷ், ராகேஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

கடந்த  1982 ம் ஆண்டு அதிமுகவில் இணைந்த இவர், 1986 முதல் 1991வரை ஸ்ரீரங்கம் நகராட்சி உறுப்பினராக இருந்தார். அடுத்து 1988 ல் ஜெ. அணி வட்டச் செயலாளாராக இருந்தவர்,  அந்த வருடம் ஜெ அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டார்.  அடுத்து 1992-2001 வரை திருச்சி  மாவட்ட அம்மா பேரவை செயலாளார், பின்னர் 1996 முதல் 2001 வரை திருச்சி 4வது வார்டு கவுன்சிலர்,  2001 முதல் 2006 வரை ஶ்ரீரங்கம் கோட்டத் தலைவர், அடுத்து 2006 முதல் திருச்சி மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,   2009 முதல் திருச்சி மாவட்டக் கழக செயலாளர், கடந்த 5 ஆண்டுகள் சட்டமன்ற அரசு தலைமை கொறடா உள்ளிட்ட பொறுப்புகளில் தொடர்ச்சியாக இருந்தவர். இப்போது மீண்டும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலில் அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியது. ஆனால் பின்னர் தொகுதியை மாற்றி, திருச்சி மேற்கு தொகுதியில் களமிறக்கியுள்ளது.

 தேமுதிக வேட்பாளர்: ஜோசப் ஜெரால்டு

இவர் சிட்டிங் கவுன்சிலராகவும், திருச்சி மாநகர மாவட்ட துணைச்செயலாளராக உள்ளார். இவர் கணிசமான வாக்குகள் பிரிப்பார்கள் என்கிறார்கள்.

ஃபைனல் பன்ச்

கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்ததால், இழந்த தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் நேரு படை பரிவாரங்களோடு தொகுதியில் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில், நீண்ட வருடங்களுக்கு பின்னர் வெற்றி பெற்ற தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்சி தலைமையின் கடுமையான உத்தரவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் மனோகரன். இதனால் போட்டி கடுமையாக உள்ளது.  இரு வேட்பாளர்களும் சம பலத்தில் உள்ளனர் என்பதே தற்போதைய நிலை.


- ஆனந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close