Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.கே.நகரில் திமுகவை பின்னுக்குத் தள்ளும் ம.ந.கூட்டணி! குஷியில் அதிமுகவினர்

டைத் தேர்தலில் வென்று  மீண்டும் முதல்வர் பதவியில் தொடர காரணமாயிருந்த அதே ஆர்.கே.நகர் தொகுதியில்தான்  மீண்டும் போட்டியிடுகிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கொருக்குப்பேட்டை மேம்பாலம், ஸ்டான்லி சுரங்கப் பாலம்,  பளபளக்கும் வழுக்கு வீதிகள், எந்நேரமும் ஒளிரும் நியான் பல்புகள் என  சமீப காலமாக ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்,  பல புதிய வசதிகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தொகுதி நிலவரம் எப்படி என அத்தொகுதியின் மூத்த அதிமுக புள்ளிகள் சிலரிடம் பேசினேன். 

''எங்கள் கட்சியில் எங்களுக்கு என்ன குறை ?'' என்ற கேள்வியை நம்மிடமே திருப்பிக் கேட்டு  வஞ்சப் புகழ்ச்சியுடன் நம்மை தாளித்து எடுத்து விட்டனர், நாம் சந்தித்த மூத்த ர.ர.க்கள்.

அவர்கள் பேசியதில் யதார்த்தத்தின் உச்சம்:

''ஏறக்குறைய அனைவர் வீட்டிலும் பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் பாத்திரங்கள், ஸ்டீல் குடங்கள், இட்லி அவிக்கும் அலுமினிய குண்டான்கள்  குவிந்து கிடக்கின்றன. நலத்திட்ட உதவி என்று அடிக்கடி அறிவித்து ஓப்பன் ஸ்டேஜில் ரெக்கார்ட் டான்ஸ்  ஆடி இவைகளை கொடுப்பார்கள்.

அதேபோல் லோக்கல் கோயில் விழா என்று அறிவித்து அங்கே புடவை, ஜாக்கெட், வேட்டி, துண்டுகளை கொடுப்பார்கள். இதுதான் நலத்திட்ட உதவிகள். இது எங்க கட்சியில்தான் என்றில்லை, திமுகவிலும் இதே நலத்திட்ட கூத்துதான் நடந்து கொண்டு வருகிறது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்றால்,  திமுகவினர்  மாணவர்களுக்கு  நோட்டுப் புத்தகமும் ஏதாவது கொடுத்து அனுப்புவார்கள். அவ்வளவுதான் .

மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மிதி வண்டிகள் எல்லாம், நூறு மீட்டர் வேகத்தை 11 வினாடிகளில் ஓடக் கூடிய பிள்ளைகள் உள்ள வீட்டில் வரிசையாக கிடக்கிறது. இப்படித்தான் யாருக்கு எங்கே,  எது போய்ச் சேர வேண்டுமோ அப்படி அது போய்ச் சேருவதில்லை.

எந்த வேலையையும் செய்யாமல் கட்சி வேலை (?)யை மட்டுமே பார்த்துக் கொண்டு ஒரு கும்பல்,  ஆளுக்கு இரண்டு தெருக்கள் வீதம் கையில் தத்து எடுத்து வைத்துள்ளது. இதை முதலில் சரிசெய்தாலே சின்னச் சின்ன அதிருப்தியாளர்களை சரி செய்து விடலாம்.

நலத்திட்ட டோக்கன் கொடுப்பதோ, தேர்தல் நேரத்தில் கட்சிக் காரர்களின் கை செலவுக்கு பணம் கொடுப்பதோ இவர்களின் மூலமாகத்தான் போய்ச் சேர்கிறது. அதுபோக பொதுமக்களுக்கு இவ்வளவு கொடுத்தோம், அவ்வளவு கொடுத்தோம் என்று பொய்  கணக்கும் எழுதி வைத்து விடுகிறார்கள்'' என்கின்றனர்

முதல்வர் தொகுதியில் இப்போதுள்ள தேர்தல் கால பிரச்னை குறித்து ர.ர.க்கள் சிலரிடம் பேசியதில்,    ''அவைத் தலைவர் மதுசூதனன் ஒரு தனி டீம் வைச்சிக்கிட்டு வேலை பார்க்கிறார். மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் சொல்றதை மதுசூதனன் கேக்கறது இல்லை.

வெங்கடேஷ்பாபு எம்.பி. மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தபோது நியமித்த வட்டச் செயலாளர்களில் 7 பேர், இப்போதைய மா.செ.வான வெற்றிவேலுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. வெங்கடேஷ்பாபுவும் மதுசூதனனும் ஒரே டீம். ஆர்.கே.நகரின் நிலைமையை விளக்கி கார்டனுக்கு வெற்றிவேல் அனுப்பிய கடிதங்கள் ஒன்றும் பலனில்லாமல் போய்விட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்றச் செயலாளர் கார்த்திகேயன், பகுதிச் செயலாளர் சந்தானம் மற்றும் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஆதரவு வட்டச் செயலாளர்கள் ஏழுபேரை கையில் வைத்துக் கொண்டு, இரண்டு மாதத்துக்கு முன்பாகவே தேர்தல் வேலைகளை வெற்றிவேல் 99 சதவீதம் முடித்து வைத்து விட்டார். அதனால் தொகுதியில், அம்மாவின் வெற்றி குறித்த எந்த குழப்பமும் யாருக்கும் இல்லை. ஆனால், இந்த பஞ்சாயத்துதான் தொகுதியில் புது தலைவலியாக இருக்கிறது.

ஏற்கனவே தொகுதி சீரமைப்பின்படி ஆர்.கே.நகரில் இருந்தும், பெரம்பூரில் இருந்தும் நான்கு வார்டுகள் ராயபுரம் தொகுதிக்கு போய் விட்டது . ராயபுரம் தொகுதியில் இருந்து   35 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட காசிமாநகர், புது அமராஞ்சிபுரம், சிங்கார வேலர் நகர், ஜீவரத்தினம் நகர், சி.ஜி.காலனிகளைக் கொண்ட 14-வது வார்டு ஆர்.கே.நகரில் வந்து விட்டது.

இவைகளை சரியாகப் பிரித்து கணக்குப் போட்டு வேலை பார்க்க வேண்டும்"  என்றனர் சற்று விரிவாகவே.

சரி, தொகுதியின் மறுமுனை வேட்பாளர்கள் எப்படி ? விசாரித்தேன்.

'' திமுகவின் வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனுக்காக உ.பி.க்கள் காலையிலேயே தேர்தல் பணியைத் தொடங்கி விடுகிறார்கள். ஆனாலும், மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர் டாக்டர்.வசந்திதேவிக்காக தோழர்களும், சிறுத்தைகளும் சுழன்றடிக்கும் தேர்தல் பிரசாரப் பணி, திமுகவின் தேர்தல்  பணியை சாதாரணமாக கடந்து போகிறது என்றே சொல்லலாம் '' என்கின்றனர்.

ஆனாலும் ஆளும் அதிமுக,  மகிழ்ச்சியில் இருக்க முடியாதபடி அங்கே உட்கட்சிப் பூசல் படமெடுத்தாடுகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக அநேகமாக தொகுதியில் வீடு இருக்கும் அவைத் தலைவர் மதுசூதனனையும், எம்.பி. வெங்கடேஷ் பாபுவையும் நியமிப்பார்கள்  என்ற தகவலால் வெற்றிவேலின் டீம் நொந்து போய்க் கிடக்கிறது.

முதல்வர் போட்டியிடும் அவருடைய சொந்தத் தொகுதியில், அதுவும் அவருடைய சொந்தக் கட்சியில் இப்படி  சின்னதாக  ஒரு சில உள்குத்துக்கள் கூட  இல்லாமல் போனால் எப்படி?


-ந.பா.சேதுராமன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ