Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'போலீஸ் அதிகாரி வந்திதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும்!' -ஸ்டாலின்

நெல்லை: போலீஸ் அதிகாரி வந்திதாவுக்கு ஏதாவது நேர்ந்தால் ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் கூறினார்.

தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், ''கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபையில் மேஜையை தட்டியதுதான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரே சாதனை. அவர்கள் இந்த தேர்தலில் ஓட்டுக்கேட்க உங்களை தேடி வந்தால், 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? என கேளுங்கள்.

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின்போது சொன்னதை செய்ததாகவும், சொல்லாததையும் செய்ததாகவும் கூறுகிறார். தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்தது, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததுதான் அவர்கள் சொல்லாமல் செய்தது.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக ஜெயலலிதா கூறுகிறார். ஒரு பத்திரிகையில் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் 7,630 கொலைச் சம்பவங்கள், 3,473 பாலியல் பலாத்கார வழக்குகள், 6,431 பெண் கடத்தல் சம்பவங்கள், 8,119 கொள்ளை சம்பவங்கள், 11,845 கொலை முயற்சிகள் நடந்து இருப்பதாக அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியில் கொலைகள் 16.8 சதவீதமும், கொலை முயற்சி 42.2 சதவீதமும், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 61.1 சதவீதமும், பெண் கடத்தல் சம்பவங்கள் 56.5 சதவீதமும், கொள்ளை-திருட்டு சம்பவங்கள் 105 சதவீதமும் அதிகரித்து இருப்பதாகவும் அந்த புள்ளிவிவரத்தில் கூறப்பட்டு இருக்கிறது. எனவே இதன் மூலமே அ.தி.மு.க. ஆட்சியின் சட்டம்-ஒழுங்கைப் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து இருப்பீர்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் ஒரே ஆண்டில் 100 கொலைகள் நடந்து இருப்பது அ.தி.மு.க. ஆட்சியில்தான். அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு காவல்துறை தலையிட்டு தீர்வு காணவும், தாய்மார்கள் நிம்மதியாக இருக்கவும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தாக வேண்டும்.

கரூரில் அ.தி.மு.க. பிரமுகர் அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்தி ரூ.5 கோடியை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்கள். அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொல்ல தற்போது முயற்சி நடந்துள்ளது.

இதுதொடர்பாகவும், அ.தி.மு.க.வினர் பணம் பதுக்கல் சம்பந்தமாகவும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குலாம்நபி ஆசாத், டி.ஆர்.பாலு ஆகியோர் புதுடெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இருக்கிறார்கள். அது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொலை முயற்சிக்கு உள்ளான அந்த போலீஸ் அதிகாரிக்கு ஏதாவது நேர்ந்தால், ஜெயலலிதா பதில் சொல்ல வேண்டும். எங்களது புகார் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கையை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி இல்லை என்றால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close