Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுவை விற்பவர்கள்தான் தீண்டத் தகாதவர்கள்: கருணாநிதிக்கு ராமதாஸ் பதிலடி!

சென்னை: மதுக்கடைகளுக்கு செல்பவர்களைத்  தீண்டத்தகாதவர்களாகப்  பார்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,மதுவை விற்பவர்கள்தான் தீண்டத் தகாதவர்கள் குற்றவாளிகள் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் திமுக தலைவர் கலைஞரும், அவரது மகன் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாக கூறி வரும் கருத்துக்கள் அவர்களின் பதற்றத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

மக்களின் நம்பிக்கையை பெற முடியாத விரக்தியில் திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ள கருத்துக்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவையாகும்.

தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் கலைஞர், ‘‘ சத்தியம் செய்கிறேன். திமுக ஆட்சியில் மதுவிலக்கு உறுதி. ஆட்சிக்கு வந்ததற்கு அடுத்த நாளே மதுவிலக்கு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுவேன்’’ என்று கூறியிருக்கிறார். பகுத்தறிவின் ஒட்டுமொத்த அடையாளம் தாம் தான் என்று தொடர்ந்து கூறி வரும் கலைஞர், இப்போது மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக தந்தை பெரியாரின் கொள்கைகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டு, மது விலக்குக்காக சத்தியம் செய்வதாக கூறுகிறார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி கலைஞர் அறிவித்தார். அதன்பின் 9 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், மதுவிலக்கு எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான நிலைப்பாட்டை கலைஞரும், ஸ்டாலினும் பலமுறை மாற்றிக்கொண்டு விட்டனர்.

தொடக்கத்தில் மதுவிலக்கை கொண்டு வருவதாக பொதுவாக கலைஞர்கூறினார். எப்போது முதல் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என பா.ம.க வினா எழுப்பியதும், முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான் என்று கலைஞர் கூறினார். பின்னர் கடந்த 10 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மதுவிலக்குக்கு சட்டம் கொண்டு வருவதாக இருந்தால் பல மாதங்கள் ஆகுமே என்று விமர்சித்தவுடன் முதல் நாளே மதுவிலக்கு ஆணையில் கையெழுத்திடுவேன் என்று மயிலாடுதுறையில் நடந்த திமுக கூட்டத்தில் கலைஞர் பேசினார். அங்கிருந்து தஞ்சாவூர் வருவதற்குள் நிலைப்பாட்டை மீண்டும் மாற்றிக் கொண்டு, சட்டம் இயற்றித் தான் மதுவிலக்கை கொண்டு வருவோம்; ஆனால், ஆட்சிக்கு வந்த இரண்டாம் நாளிலேயே சட்டம் இயற்றி விடுவோம் என்று விளக்கமளித்திருக்கிறார். மதுவிலக்கு சட்டம் இயற்றுவது என்பது மளிகைக் கடையில் சென்று பொருட்களை வாங்குவதைப் போன்றதல்ல.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான காரணங்களை விளக்கி சட்ட முன்வடிவை தயாரிக்க வேண்டும். பின்னர் அதை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் அளிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையைக் கூட்டி உறுப்பினர்களுக்கு பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைத்து பேரவைத் தலைவர், துணைத்தலைவரை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு தான் சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்ய முடியும். தொடர்ந்து அதன்மீது விவாதம் நடத்தி, நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். இதற்கெல்லாம் குறைந்தது 3 மாதங்கள் தேவை. 80 ஆண்டு அரசியல் வரலாற்றுக்கும், 60 ஆண்டு சட்டமன்ற அனுபவத்துக்கும் சொந்தக்காரரான கலைஞருக்கு இவையெல்லாம் தெரியாததல்ல. தெரிந்தும் இப்படிக் கூறுகிறார் என்றால், அதற்கு மக்களை முட்டாள்களாக்க திமுக தலைவர் கலைஞர் முயற்சிக்கிறார் என்பது தான் பொருள் ஆகும்.

மதுவிலக்கை ஏற்படுத்தப்போவதாக கலைஞர் திரும்பத் திரும்பக் கூறி வரும் போதிலும், அதையேற்க தமிழக மக்கள் தயாராக இல்லை. மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை வரும் தேர்தலில் வீழ்த்த மக்கள் தயாராகி விட்டனர். அதனால் ஏற்பட்ட விரக்தி, தோல்விபயம் ஆகியவற்றின் காரணமாகத் தான் தமிழக மக்களை எப்படியாவது நம்ப வைத்துவிட வேண்டும் என்பதற்காக சத்தியங்களை செய்யத் தொடங்கியிருக்கிறார். இதற்கெல்லாம் மக்கள் மயங்கமாட்டார்கள்.

‘‘ தி.மு.க.காரன் எவனும் மதுக்கடைகளை திறந்ததும் கிடையாது, மது விற்பனை செய்ததும் கிடையாது. மதுக்கடைகளுக்கு செல்பவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்க வேண்டும்’’ என கூறியிருக்கிறார். கலைஞருக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதை கழற்றி வைத்துவிட்டு தான் இதுபோன்று அவர் பேசியிருக்க வேண்டும். திமுககாரன் எவனும் மதுக்கடைகளை திறந்ததும் கிடையாது; மதுவை விற்றதும் கிடையாது என்ற கலைஞரின் வார்த்தைகளை குழந்தைகள் கூட நம்பமாட்டார்கள். 2003 ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் செயல்பட்ட மதுக்கடைகளில் 60%க்கும் அதிகமானவை திமுகவினருடையது தான்.

இப்போதும் தமிழகத்தில் உள்ள மது ஆலைகளில் பாதிக்கும் அதிகமானவை திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானவை தான். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் பலர் மது ஆலை உரிமையாளர்கள், மது மொத்த விற்பனை முகவர்கள், மதுக்கடை அதிபர்களாக இருந்தவர்கள் தான். திமுக வேட்பாளர்களில் இன்னும் பலர் ஆளுங்கட்சி நிர்வாகிகளுடன் மறைமுகக் கூட்டணி அமைத்துக் கொண்டு பார்களை நடத்தி வருபவர்கள் தான். இதையெல்லாம் கலைஞரால் மறுக்க முடியுமா? ஒருவேளை இதை கலைஞர் மறுத்தால், மதுவுடன் தொடர்புடைய திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது.

23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை தளர்த்தியும், மதுக் கடைகளை திறந்தும், மது ஆலைகளை நடத்தியும் மக்கள் மீது மதுவை திணித்த கலைஞர், இப்போது மதுக்கடைகளுக்கு செல்பவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்க வேண்டும் என்று கூறுவது கொடூரமானது. உண்மையில் மதுவுக்கு அடிமையானோரை பாதிக்கப்பட்டவர்களாகவே பார்க்க வேண்டும். மது விற்பனை செய்தோரை தான் தீண்டத்தகாதவர்களாகவும், குற்றவாளிகளாகவும் பார்க்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் மது தாராளமாக கிடைப்பது தான் மக்கள் குடிகாரர்களாக மாறுவதற்கு காரணம் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

உண்மையும் அது தான். அதைவிடுத்து அனைத்து பழிகளையும் மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் மீது சுமத்தி விட்டு, பாவங்களை செய்த திமுகவினரை உத்தமர்களைப் போல காட்டும் கலைஞரின் முயற்சி பலிக்காது. கடந்த 40 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வரும் தேர்தலில் படுதோல்வி எனும் பரிசை வழங்க மக்கள் தயாராகி விட்டனர். மே 19 ஆம் தேதி முடிவுகள் இதை உறுதி செய்யும்." என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ