Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா பற்றி விமர்சனம்... வருத்தம் தெரிவித்த இளங்கோவன்!

சென்னை: ஜெயலலிதா மீதான விமர்சனத்திற்கு, 'என்னுடைய பேச்சு தனிப்பட்ட முறையில் யாரையும் பாதித்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்' என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு, தமிழக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு உள்பட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய இளங்கோவன், ''பிரிந்து சென்ற குடும்ப உறவுகள் மீண்டும் தாய் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்கு தமிழக சட்டசபை தேர்தல் ஒரு வாய்ப்பு. தமிழகத்தில் ஆட்சி செய்யும் பிரமாண்ட அந்தஸ்தை மீண்டும் பெற கடுமையாக உழைக்கவேண்டும். எங்களுடைய தேர்தல் அறிக்கை விவசாயிகள், தொழிலாளர்கள், படித்த இளைஞர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான சரத்துக்களை உள்ளடக்கியது" என்றார்.

அதன் பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது அவரிடம், 'திருவாரூர் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசிய பேச்சை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளார்களே. இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த இளங்கோவன், ''நான் அங்கு பேசியது யானைகளிடமும், மிருகங்களிடமும் காட்டும் அக்கறையை பாதிக்கப்பட்ட மக்களிடம் ஜெயலலிதா காட்டவில்லை என்றுதான் கூறினேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதா? அல்லது வேண்டும் என்று என் மீது குற்றம் சாட்டுவதற்காகவா? என்று தெரியவில்லை. சரி என்னுடைய பேச்சு தனிப்பட்ட முறையில் யாரையும் பாதித்திருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்" என்றார்.

திருவாரூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசும்போது, ''தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களைச் சந்திக்காத முதல்வர். அவரால் எப்படி மக்கள் பிரச்னைகளை தெரிந்துகொள்ள முடியும். ஜெயலலிதாவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை" என்று தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்