Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...! ஜெயலலிதாவின் குபீர் உற்சாகம்

 

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில், "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!

தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பொதுக்கூட்டங்களில், தமிழக வாக்காளப் பெருமக்களையும், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்களையும் சந்தித்து வருகின்ற மகிழ்ச்சியான தருணத்தில், இந்த மடல் வழியாகவும் உங்களோடு சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எந்நாளும் தங்கள் குடும்பத்தின் வசமே ஆட்சி அதிகாரம் அனைத்தும் இருந்திட வேண்டும் என்று துடிக்கின்ற தீய சக்தியிடமிருந்தும், அதன் நச்சு விழுதுகளிடமிருந்தும் தமிழகத்தைக் காப்பாற்றவும்; ஏழை, எளிய, உழைக்கும் மக்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் புரட்சிகர அரசியல் பயணத்தைத் தொடர்ந்து நிலைநாட்டவும், நடைபெறுகின்ற தேர்தல் தான் இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குடும்ப ஆட்சி முறை மக்களாட்சித் தத்துவத்திற்கு முற்றிலும் விரோதமானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியையும், அதிகாரத்தையும், அரசியல் செல்வாக்கையும் முழுமையாக தங்களுக்குள்ளேயே வைத்திருப்பது "அனைவருக்கும் சம வாய்ப்பு" என்ற மக்களாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தை சின்னாபின்னப் படுத்திவிடும். வாரிசு அரசியல் முறையை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழித்திட வேண்டும். ஏனென்றால், அரசியல் அதிகாரத்தின் மீது கொண்ட பேராசையைத் தவிர, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிப்பதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. புதிது புதிதாக ஆயிரம் ஆயிரம் சிந்தனைகள் மலர வேண்டும்; அவை கோடான கோடி உள்ளங்களில் இருந்து தோன்றி வர வேண்டும்; அதன் மூலம் மக்களுக்காக, மக்களால், மக்களே நடத்துகின்ற ஜனநாயக ஆட்சி தொடர வேண்டும். சுயநல சிந்தனைகளால் நிரம்பிய தீய சக்தியை அடியோடு ஒழிக்க நம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கண்ட இயக்கம் தான் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்". புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் அரசியல் பாடம் பயின்ற நான், மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையான ஏழைகளுக்கு வாழ்வு; எளியோருக்கு பாதுகாப்பு; எல்லோருக்கும் சம வாய்ப்பு; ஏற்றம் பெற்ற சமுதாயம் என்ற சிந்தனையில் உறுதியாக எனது இந்த உறுதிப்பாட்டின் காரணமாகத் தான், எல்லோரும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற சாதனைகளை எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. அவை அனைத்தும் வரலாற்றில் நிலைபெறும் சிறப்புடையவை.

தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தற்போதைக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு செழிக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். எல்லோருக்கும் விலையில்லா அரிசி; குடும்பப் பெண்களின் வேலைப் பளுவை குறைப்பதற்கு மின் சாதனங்கள்; உழைக்கும் மக்களின் பசிப்பிணி போக்க அம்மா உணவகங்கள் போன்ற உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்யும் சாதனைகள் மட்டுமல்ல; எல்லோரும் தரமான கல்வி பெற்று, எல்லோரும் தகவல் தொழில்நுட்ப அறிவியலின் வளர்ச்சியை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்க்கைக் கனவுகளை நனவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கும் தொலைநோக்குத் திட்டங்கள் உள்ளிட்ட முன்னோடியான பல திட்டங்களை நான் நிறைவேற்றி வருகிறேன். இந்தத் திட்டங்கள் எல்லாம் தொடர வேண்டும். எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கின்ற ஜனநாயகப் பண்பு வளர வேண்டும். அதற்கு, நாம் வெற்றி மேல் வெற்றி குவித்தாக வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிக் குழு; ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிக் குழு; மண்டலக் குழு; பூத் கமிட்டி ஆகியவற்றின் உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து, உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சியில் தமிழக மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் செய்யப்பட்டிருக்கும் நற்செயல்கள் பலவற்றையும் விளக்கிக் கூறுங்கள். மேற்சொன்ன பணிகளை நிறைவேற்ற, தொகுதிக் குழு பொறுப்பாளர்களும், சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் அவரவர் சார்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றுவது மிகவும் அவசியம். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர, மற்ற தொகுதிகளில் பணியாற்றுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் "இரட்டை இலை" சின்னம் இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிடுகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்று, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம், அவருடைய பிறந்த நாள் நூற்றாண்டில் சரித்திர சாதனை படைத்திட வேண்டும். "எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட நம்முடைய இயக்கம் பெரிது, நமது இயக்கத்தின் வெற்றியே நம்முடைய வெற்றி" என்ற கொள்கை வேட்கையோடு என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பணியாற்றிட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் முழு மூச்சுடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும். தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறேன். எப்பொழுதும் தமிழக மக்களின் உயர்வு பற்றியே சிந்திக்கிறேன். தமிழகத்தில் வாழுகின்ற ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு அமைந்திட இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்ட வண்ணமே எனது அரசியல் பயணம் தொடர்கிறது. எனது அன்புக் கட்டளையை ஏற்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் கடமை உணர்வோடு தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அல்லும் பகலும் அயராது உழைத்திட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.

அண்ணா நாமம் வாழ்க!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க! என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close