Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’துட்டுக்கு ஓட்டு’ புகழ் திருமங்கலத்தில் அ.தி.மு.க. சொல்லி அடிக்குமா? - நட்சத்திர தொகுதி நிலவரம்

 

வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை: 

தொகுதி புராணம்:

திருநெல்வேலி என்றதும் அல்வா நினைவுக்கு வருவதுபோல, சமீபமாக ’தேர்தல்’ என்றாலே ’திருமங்கலம் ஃபார்முலா’, நினைவுக்கு வருகிறது. அந்தளவுக்கு தி.மு.க. ஆட்சியில் 2009-ல் அங்கு நடந்த இடைத்தேர்தலில் அழகிரி டீம் ’துட்டுக்கு ஓட்டு’ என அலப்பறை செய்தது. இது ஒருபுறமிருக்க, தென் மாவட்டங்களிலிருந்து மதுரை மாநகர் வருபவர்களுக்கு நுழைவு வாயிலாகத் திகழும் திருமங்கலம், பல வரலாற்று நிகழ்வுகளுக்கு சொந்தமானது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தொகுதியில்,  இத்தேர்தலில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தைதை பூர்வீகமாகக்கொண்ட உதயகுமார், கடந்த தேர்தலில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திருமங்கலத்துக்கு வந்துவிட்டார்.

நாட்டின் விடுதலைக்கு பின் நடந்த அனைத்து சட்டசபைத் தேர்தல்களிலும் இடம்பெற்ற தொகுதிகளில் திருமங்கலமும் ஒன்று.  கடந்த 2011 ம் ஆண்டு தேர்தலில்,  தொகுதி மறு சீரமைக்கப்பட்டு, சேடப்பட்டி தொகுதி காலி செய்யப்பட்டு, அதிலிருந்த டி.கல்லுப்பட்டி யூனியன், பேரூராட்சி, பேரையூர் பேரூராட்சி ஆகியவை திருமங்கலம் தொகுதியில் இணைக்கப்பட்டன. 1952  முதல் 2016 ம் ஆண்டு வரை 16  எம்.எல்.ஏ.க்கள் இருந்துள்ளனர்.

திருமங்கலம் அதிகளவில் கிராமங்கள் நிறைந்த பகுதி. விவசாயிகள் அதிகம் உள்ளனர். மிகவும் பின்தங்கிய பகுதியான இங்கு ஒரு தொழிற்பேட்டை உள்ளது. இந்தியா முழுக்க முனியாண்டி விலாஸ் உட்பட பல ஹோட்டல்கள் நடத்துபவர்களின் பூர்வீகம், இத்தொகுதியின் கிராமங்கள்தான். வைகைப்பாசனம் மூலம் தொகுதியின் ஒரு பகுதியில் உள்ள 20 கண்மாய்கள் பாசனவசதி பெறுகின்றன. மிச்சமிருக்கிற நீர் ஆதாரங்களையும், விவசாய நிலங்களையும் ரியல் எஸ்டேட்காரர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். இரண்டாவது தொழிற்பேட்டைக்காக பல ஏக்கர் விவசாய நிலங்களை ஆர்ஜிதப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியது. பொதுமக்களின் போராட்டத்தால் தற்பொழுது அத்திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன் மட்டும் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.  இதொகுதியிலுள்ள மக்களுக்கு  என்.எஸ்.வி.சித்தனை தவிர வேறு அரசியல்வாதியின் பெயர் கூடத் தெரியவில்லை. சித்தனைப் பற்றியும் ஓரளவே சொல்கிறார்கள். ஆனால், அவருக்கு பின் வந்த எந்த எம்.எல்.ஏ.க்களும் சொல்லிக்கொள்ளும்படி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். அதனால்தான் மதுரைக்கு அருகில் இத்தொகுதி இருந்தும்,  பெரிய வளர்ச்சி அடையாமல் பின்தங்கியே உள்ளது.என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ.!

தற்போது அ.தி.மு.கவின் முத்துராமலிங்கம்தான் தொகுதியின் எம்.எல்.ஏ. இன்றுவரை திருமங்கலத்தில் ஒழுங்கான ஒரு பேருந்து நிலையம் இல்லை. சாலையில்தான் தொலைதூர பேருந்துகள் நிற்கும், மக்களும் சாலையிலேயே நிற்க வேண்டும்.  'நான் தேர்தலில் ஜெயித்தால் முதல் வேலையே பஸ் ஸ்டாண்ட் கட்டுவதுதான்' என்று சொன்ன முத்துராமலிங்கத்தை அப்புறம் ஊரிலயே பார்க்கமுடியவில்லை. 'தீயணைப்பு நிலையத்திற்கு புதிய கட்டடம் கொண்டு வருவேன்' என்றார். ஆபத்தான நிலையில் அந்த நிலையம் உள்ளது. மக்கள் தொகை அதிகமுள்ள திருமங்கலத்தில், அரசு கல்லூரி கொண்டு வருவேன் என்றார், அதுவும் நடக்கவில்லை. பேரையூர் தாலுகாவில் அரசுக் கல்லூரி கொண்டு வருவதா சொன்னவர், அதற்கு பின் அந்த ஏரியா பக்கமே வரவில்லை.

எம்.எல்.ஏ.அலுவலகத்துக்கு யாராவது மனு கொடுக்க வந்தால், 'வேற வேலையில்லை...!'  என்று விரட்டாத குறையாக கவனிப்பு இருக்குமாம். தி.மு.க. ஆட்சியில் விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்கு எடுக்க வந்ததால்தான்,  விவசாய மக்கள் எல்லோரும் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள். ஆனால், முத்துராமலிங்கமும் தனியார் நிறுவன லாபியுடன் நில அபகரிப்புக்கு முயற்சித்ததாகப் புகார் கிளம்பியது. இந்தளவுக்கு எதிர்ப்பு கிளம்பியதாலேயே, கட்சிப் பதவி காலியானதோடு தேர்தலிலும் சீட் கிடைக்கவில்லை!


தொகுதி ரெக்கார்ட்


1991
டி.கே.ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.)-62,774
ஆர்.சாமிநாதன்  (தி.மு.க.)-31,511

1996
எம்.முத்துராமலிங்கம்  (தி.மு.க.)-56,950
ஆண்டித்தேவர்  (அ.தி.மு.க.அணி)-28,025

2001
காளிமுத்து(அ.தி.மு.க.)-58,080
ஒச்சாத்தேவர்  (தி.மு.க.அணி)-39,918

2006
வீரஇளவரசன்(ம.தி.மு.க.)-45,067
வேலுச்சாமி  (தி.மு.க.)-40,923

2009 (இடைத்தேர்தல்:திமுகவெற்றி)

லதாஅதியமான்  (தி.மு.க.)-79,422
முத்துராமலிங்கம்  (அ.தி.மு.க.)-40,156

2011
முத்துராமலிங்கம்(அதிமுக) - 1,01,708
மணிமாறன் (திமுக)     - 75,662

பிரதான வேட்பாளர்களின் ப்ளஸ், மைனஸ்

ஆர்.பி. உதயகுமார், அ.தி.மு.க.


ப்ளஸ்

மக்கள் நலக் கூட்டணியின் தே.மு.தி.க. வேட்பாளராக சீனிவாசன் என்பவர் நிற்கிறார். இவரும் பெரிய செல்வாக்கான பாராசக்தி நிறுவன குடும்பத்தை சேர்ந்தவர். பா.ஜ.க.சார்பில் ராமமூர்த்தி என்பவரும் நிற்கிறார்கள். இருவரும் நாயுடு இனத்தவர்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக மணிகண்டன் நிற்கிறார். இவர்கள் பிரிக்கும் வாக்குகள், தனக்குச் சாதகமாக மாறும் என்று உதயகுமார் நம்புகிறார்.

மேலும் ஆர்.பி.உதயகுமாருக்காக திருமங்கலத்திலுள்ள கட்சி நிர்வாகிகள் இறங்கி வேலை செய்கிறார்கள். அதற்கு காரணம், கடந்த முறை வெற்றி பெற்ற முத்துராமலிங்கம் மீதான வெறுப்புதான். அவருக்கு இப்போது சீட் கொடுக்கவில்லை என்றாலும், அவரை கட்சியிலிருந்தே முழுமையாக ஓரங்கட்ட உதயகுமார் வெற்றி பெற வேண்டுமென்ற வெறியில் வேலை செய்கிறார்கள்.
அதிலும் வாக்கு கேட்டு செல்லும்போது உதயகுமார் காட்டும் பவ்யம்.... ‘அப்பப்பா.... அடடடா...’ டைப்!

உதயகுமாரின் குடும்பமே தேர்தலுக்காக இறங்கி வேலை செய்கிறார்கள். திருமங்கலத்தில் வாடகைக்கு பிடித்திருக்கும்  வீட்டு முன்பு  பெரிய பந்தலிட்டு எந்நேரமும் வருகிறவர்களுக்கு காபி, டீ கொடுத்து உபசரிக்கிறார்கள். எந்நேரமும் உலை கொதித்துக் கொண்டிருக்கிறது. மூன்று வேளையும்  உணவு தொண்டர்களுக்கு தயார் செய்து கொடுத்து உற்சாகப்படுத்தி வேலை வாங்குகிறார்கள். தி.மு.க. வேட்பாளர் நின்றிருந்தால் கரன்சி அதிகம் செலவழிக்க வேண்டியிருந்திருக்கலாம். ஆனால், அந்த சிரமும் இல்லாமல் போய்விட்டது.

 மைனஸ்

கடந்த தேர்தலில் முத்துராமலிங்கம்,  சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறனைத் தோற்கடித்து வெற்றிபெற்றார். அப்போது தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக வீசிய அலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நின்ற பலரும் வெற்றி பெற்றனர். அதனால்தான் ஏற்கனவே அங்கு நடந்த இடைத்தேர்தலில் தோற்ற முத்துராமலிங்கத்துக்கு மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். ஆனால் அப்படி வெற்றியடைய வைத்த மக்களுக்கு,  தான் வெற்றிபெற்ற பின்பு எந்தவொரு நன்மையும் செய்யவில்லை முத்துராமலிங்கம்.

இது மட்டுமல்லாது,  ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துராமலிங்கத்திடம் இத்தொகுதி மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கான எதிர்வினை உதயகுமாருக்கு போய் சேரும் வாய்ப்புள்ளது என்பதால், உதயகுமார் கரை சேருவது அதிசயமான ஒரு நிகழ்வாகத்தான் இருக்கும். அதுவுமில்லாமல்,  கொடுவா மீசையோடு மிரட்டல் பார்வையோடு வரும் முத்துராமலிங்கத்தையும் வாக்கு கேட்க கூடவே அழைத்து செல்வதால் மக்கள் ஜெர்க் ஆகிறார்கள்.


ஜெயராம், காங்கிரஸ்

ப்ளஸ்

தி.மு.க. இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது கேள்விப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்  அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி. உதயகுமார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளராக ஜெயராம் என்ற பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தியதும் ஆடிப்போய்விட்டார். காரணம், இத்தொகுதியில் முக்குலத்தோருக்கு இணையாக நாயுடு மற்றும் ரெட்டியார்களின் வாக்கு அதிகமுள்ளது. ஜெயராமின் தாத்தா, தந்தை அந்தக் காலம் முதல்  மிகுந்த செல்வாக்கு பெற்றவர்கள். தலித், முத்தரையர் மற்றும் முஸ்லிம் வாக்குகளும் கணிசமான அளவில் உள்ளன.

மைனஸ்

ஜெயராம் செல்வாக்கான குடும்பம் என்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்ய திமுகவினர் தயாராக இல்லை. அதற்கு காரணம் விட்டமின் 'ப' வை இன்னும் கூட்டணிக் கட்சியினரிடம் மட்டுமல்ல, தன் கட்சியினரிடமே இன்னும் கண்ணில் காட்டவில்லையாம் ஜெயராம்.

கள நிலவரம் 

தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் கணிசமாக இருந்தாலும் அதையும் பங்கு போட்டுக்கொள்ள தே.மு.தி.க. சீனிவாசனும், பா.ஜ.க.வேட்பாளரும் இவருக்கு வில்லனாக நிற்கிறார்கள்.
 நாம் தமிழர் வேட்பாளர் மணிகண்டன் நிற்கிறார்... அவ்வளவுதான்... மக்களிடம் அவரைபற்றி எந்த அதிர்வுகளும் இருப்பது போலத் தெரியவில்லை.

ஆர்.பி.உதயகுமாரின் அணுகுமுறை, தீவிர வாக்கு சேகரிக்கும் முறை, கட்சியினருக்கு தேவையானதை செய்து கொடுத்து தன் கூடவே வைத்துக்கொள்ளும் நேக்குபோக்கு போன்றவற்றால், சோர்வாக வேலை செய்யும் காங்கிரசை முந்திவிடுவார் என்றே தற்போதைய கள நிலவரம் காட்டுகிறது.

செ.சல்மான்

படங்கள்: இ.ஜே.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ