Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’சின்னையா’ அன்புமணி சி.எம். ஆவாரா? - முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்


முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்குக்கு ஒரு முதல்வர் வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தேர்தல் களத்தில். வாரமொரு முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் அலசும் இந்த தொடரில், நாம் தமிழர் சீமானை தொடர்ந்து, இந்த வாரம் பாமக-வின் முதல்வர் வேட்பாளரான 'மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி' 

கவனம் ஈர்க்க கார்ப்பரேட் யுக்தி

தமிழ்நாட்டுக்கு சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது என்பதை முதலில் சொன்னவர்கள் அப்பா ராமதாஸும், மகன் அன்புமணியும்!

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணிதான் என்று ராமதாஸ் அறிவித்ததுதான் முதல் மணியோசை. அன்புமணியை அறிவித்தபோது, 'இதுல இவங்க வேற' என்றுதான் பலரும் கிண்டலாக நினைத்தார்கள். ஆனால், 'மாற்றம் - முன்னேற்றம் - அன்புமணி' என்ற கார்ப்பரேட் வடிவ கலக்கல் விளம்பரங்கள் அன்புமணியை முன்னிறுத்தியதை விட,  மற்ற முதலமைச்சர் வேட்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.


'விஷன் - 234' என்று ஜெயலலிதா சொல்லவும் - 'முடியட்டும் - விடியட்டும்' என்று ஸ்டாலின் கிளம்பவும் - 30 வயது குறைவது மாதிரி மேக்கப் போட்டு விஜயகாந்த் போட்டோ எடுத்துக் கொள்ளவும் - அன்புமணியின் விளம்பரமே காரணம் ஆனது. 'மாற்றம் - முன்னேற்றம்' விளம்பரம் அன்புமணிக்கு முன்னேற்றம் கொடுக்குமோ என்னவோ, மற்ற அரசியல் தலைவர்களுக்கு மாற்றத்தைக் கொடுக்கக் காரணம் ஆகிவிட்டது.

ராமதாஸ் செய்துவிட்ட இன்னொரு வம்பு, 'முதலமைச்சர் வேட்பாளர்' என்ற அறிவிப்பு. தமிழ்நாட்டில் இந்த கெட்டப் பழக்கம் இதுவரை இல்லை. அ.தி.மு.க. வென்றால் ஜெயலலிதா. தி.மு.க. வென்றால் கருணாநிதி. இரண்டு கட்சிகள் தான் மாறிமாறி வென்று வந்தன. இரண்டு பேரை விட்டால் வேறு யார் வர முடியும்? யாரை இவர்கள் வர விடுவார்கள்?

அன்புமணிதான் எங்கள் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்ததன் மூலமாக, 'ஸ்டாலின்தான் திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர்' என்று கருணாநிதி வாயால் சொல்ல வைக்க பலரும் முயற்சித்தார்கள். கருணாநிதி சம்மதிக்கவில்லை. இதனால் அவர்கள் இருவருக்கும் அதிகமாக முட்டிக்கொண்டது. இது  குடும்பத்திலும்  கட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

தெளிவான ஸ்டாலினுக்கே இந்த அரசியல் புரியவில்லை என்றால், விஜயகாந்துக்கு எதை, யார் புரிய வைப்பது? பாரதிய ஜனதா கட்சியினர் வந்தார்கள். 'என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவியுங்கள்' என்றார் விஜயகாந்த். தி.மு.க.வினர் வந்தார்கள். 'எனக்கு துணை முதல்வர் பதவி தாருங்கள், முதல்வராக கருணாநிதி இருக்கட்டும். ஆனால் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது' என்றார் விஜயகாந்த். அவர்களும் ஓடிவிட்டார்கள். 'என்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவியுங்கள்' என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடம் விஜயகாந்த் சொன்னார். இவர் வந்தால் போதும் என்று அவர்கள் நினைத்தார்கள். 'ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை' என்பதைப் போல விஜயகாந்தை அறிவித்தார்கள்.


இப்படி 'முதலமைச்சர் வேட்பாளர்' என்ற வார்த்தையை வைத்தே எதிர் அணியை பலவீனப்படுத்தியது ராமதாஸின் அரசியல் உத்தி.

அன்புமணிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பு, கோடிக்கணக்கில் செலவு செய்து நாளிதழிலில் விளம்பரங்கள், லட்சக்கணக்கில் செலவு செய்து பிரசார கூட்டங்கள், மேடையில் ரட்சகர் போல அன்புமணி எழுந்து வருவது, 'அன்புமணி ஆகிய நான்' என்று கவர்னரே இல்லாமல் கர்ஜிப்பது, ஒரே மாதிரியான உடை, முன் வழுக்கை தெரியாதது மாதிரியான முடி... என்று அன்புமணியை அப்படியே 'எந்திரன் ' மாதிரியே வடிவமைத்து வசீகரனாக ஆக்கியதில்தான் பா.ம.க.வின் வெற்றி அடங்கி இருக்கிறது. இந்த ஜிகினா வேலைகள் இல்லாவிட்டால் பா.ம.க. வெளிச்சத்துக்கே வந்திருக்காது இந்தத் தேர்தலில்.

அன்புமணியின் மைனஸ்

இவ்வளவு 'நகாசு' வேலைகள் பார்த்து செலவு செய்தால்தான் மக்களை கவனிக்க வைக்கவாவது முடியும் என்று ராமதாஸும் அன்புமணியும் நினைத்து களத்தில் குதித்தார்கள். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது வட தமிழ்நாட்டில்!

உளுந்தூர் பேட்டை தாண்டியும் ஊர் இருக்கிறது என்பதை இவர்கள் மறந்து போனார்கள். தேர்தல் நேரம் நீங்கலாக திருச்சியைத் தாண்டுவது இல்லை இவர்கள். தூத்துக்குடியிலும், நாகர்கோவிலிலும், கோயமுத்தூரிலும் கட்சியை வளர்க்க முயற்சிக்கவில்லை. அதனால்தான் அந்த வட்டாரத்து மக்களுக்கு பா.ம.க. அந்நியமாக தெரிகிறது.


''எங்களை சாதிக்கட்சி, சாதிக்கட்சி என்று குற்றம் சாட்டுகிறார்கள்'' என்று ராமதாஸும், அன்புமணியும் வருத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட சாதியினர் பெரும்பான்மை வாழும் மாவட்டங்களில்,  அவர்கள் வாக்குகளை வசப்படுத்தும் காரியங்களை மட்டுமே பார்க்கும் கட்சிக்கு வேறு என்ன பெயர் கிடைக்கும்?

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற லட்சியத்தில் கிளம்பியவர் ராமதாஸ். எம்.ஜி.ஆர். ஆட்சியில் இவர் முன்னெடுத்த போராட்டங்கள் தமிழ்நாட்டில், 'யாரப்பா இந்த டாக்டர்?' என்ற கேள்வியைக் கிளப்பியது. இப்படி ஒரு போராட்டத்தை மீண்டும் தாங்க முடியாது என்பதால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்கி, இடஒதுக்கீட்டை அன்றைய முதலமைச்சர் கருணாநிதி வழங்கியதால் சாத்தியம் ஆனது. முதல் கோரிக்கையின் முழு வெற்றிக்குப் பிறகு ராமதாஸ் ஏறு முகத்தில் ஏறி, தமிழகத் தலைவராக வளர்ந்திருக்க வேண்டும்.

அப்படித்தான் சமூகநீதி, தமிழ்தேசியம், ஈழவிடுதலை என்று பேசி மார்க்ஸையும், பெரியாரையும், அம்பேத்காரையும் தனது லட்சியங்களாக சொல்ல ஆரம்பித்தார். தமிழ்த்தேச தன்னுரிமை மாநாடு அவருக்கு தமிழினப் போராளி முகத்தைக் கொடுத்தது. பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரது உடலை, சாதி இந்துக்கள் வசிக்கும் தெருவில் சுமந்து செல்ல பாதை அமைத்துக் கொடுத்ததால் 'தமிழ்க் குடி தாங்கி' ஆனார்.

சாதி மறந்து தமிழின உணர்வு முன்னுக்கு வந்ததால் திருமாவளவனுடன் கை கோர்த்தார். திருமாவளவனது உண்ணாவிரதத்தை முடித்து வைக்கப் போனார். இவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் மேடைகளில் அம்பேத்கர் விருதே தரப்பட்டது. இந்த சமூக நல்லிணக்கம் தொடர்ந்து, வளர்ந்து வட தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்ற, சமூக நலத்திட்டங்களை வளர்த்தெடுக்க, நிலத்தில் மட்டுமல்ல மனத்திலும் வறட்சியாகிப் போன மக்களது வாழ்க்கையை வளப்படுத்த நகர்ந்திருக்குமானால் ராமேஸ்வரத்துக்கும் ராமதாஸ் பெயர் போயிருக்கும், அருப்புக் கோட்டையிலும் அன்புமணி வரவேற்பை பெற்றிருப்பார்.

தருமபுரி இளவரசன்..... என்ன, பு.தா. இளங்கோவனா? எதிரியா? துரோகியா? அது காதல் விவகாரம். அதுவும் தனிப்பட்ட இரண்டு பேரின் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னை. அதற்கு ஒட்டு மொத்த சாதியின் பிம்பத்தை புகுத்தி ராமதாஸ் பேசிய பேச்சுக்கள், குரு பேசிய பேச்சுக்கள் குறிப்பிட்ட சமூகத்தில் உணர்ச்சியை தூண்டி இருக்கலாம். ஆனால் அதற்கு வெளியே, இவர்களை வெளியே நிறுத்துகிறது.

தமிழ்நாடு என்ற பரந்துபட்ட, பல்வேறு இனம், சாதி, மதம், குழுக்கள், பிரிவுகள், உட்பிரிவுகள் உள்ள பன்முக சமூகத்தில் இதுபோன்ற போலிக் கலாச்சார நிலைபாடுகள் பாட்டாளி மக்கள் கட்சியை மட்டுமல்ல எவர் பேசினாலும் அன்னியப்படுத்தும்.


 


''வாருங்கள் இணைவோம்! புதியதோர் தமிழகம் செய்வோம்" என்று பொதுப்படையாக அனைவரையும் அழைக்கும் அன்புமணி, பொதுப்படையான கருத்தாக்கங்களுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில், ஜெயலலிதாவை தினந்தோறும் அம்பலப்படுத்திய ஒரே அரசியல் தலைவர் ராமதாஸ் மட்டும்தான். இந்த ஆட்சியின் அனைத்து முறைகேடுகளையும், ஊழல்களையும் பயமில்லாமல் அறிக்கையாக வெளியிட்டவர் ராமதாஸ். கருணாநிதியின் அறிக்கைகள் மேலோட்டமாக இருக்கும். ராமதாஸ் பயன்படுத்திய எந்த வார்த்தையையும் ஸ்டாலினால் சொல்லவே முடியாது. பயப்படுவார். வைகோவிடம் வெறும் சத்தம் மட்டும்தான் இருக்கும். எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எங்கே இருந்தார் என்பது அவருக்கே தெரியாது. ஆனால் ஜெயலலிதா எதிர்ப்பு அரசியலை, முழுமையாக மூட்டிய ராமதாஸால் அதை முழுமையாக அறுவடை செய்ய முடியாமல் போவதற்கு தடையாக இருப்பது சாதி.

அதிலிருந்து விட்டு விடுதலையாக நினைக்கிறார் அன்புமணி. நினைப்பதோடு முடிந்து விடக் கூடாது. ஒரு குரு பேச்சை நிறுத்துவதோடு அன்புமணியின் வேலை முடிந்து விடுவது இல்லை. ஏராளமானவர்கள் இன்னமும் ஊருக்குள், இணையத்தில் பாமகவுக்கு நன்மை செய்வதாக நினைத்து, சின்னய்யாவுக்கு நன்மை செய்வதாக நினைத்து, தவறான பாதையில் குழி வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுய சாதிப் பெருமை மோசமானது. பிற சாதி வெறுப்பு அதை விட மோசமானது. அன்புமணி,  பா.ம.க.வினருக்கு எடுக்க வேண்டிய முதல் பால பாடம் அதுதான். பிற சாதி வெறுப்பை விதைப்பவர்களை மௌனமாக்குவதன் மூலமாக மட்டுமே பிறசாதியினரை தன்னைப் பற்றி பேச வைக்க முடியும்.

அன்புமணியின் ப்ளஸ்

''அன்புமணி ஆகிய நான் பூரணமாக மதுவை ஒழிப்பேன். வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலை ஒழிப்பேன். கல்வி, சுகாதாரத்தை இலவசமாக அளிப்பேன். வேளாண் புரட்சி செய்வேன். தொழில், வேலை வாய்ப்பை பெருக்குவேன்" என்ற சபதத்துடன் அன்புமணி தன்னை முன்னிலைப்படுத்துகிறார். ''இது வெறும் தேர்தல் அறிக்கை அல்ல. மாற்றத்திற்கான மக்கள் சாசனம். புரட்சியின் முதல் படிக்கல்!" என்று அன்புமணி அறிவித்திருக்கிறார்.

வலிமையான தலைமை, தெளிவான பொருளாதாரத் திட்டம், ஒளிமயமான, அதிகப் பாதுகாப்பான எதிர்காலம் ஆகிய மூன்றும் அவரது லட்சியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ''கதாநாயகனுக்கு வாக்களித்தீர்கள். கதாநாயகிக்கு வாக்களித்தீர்கள். கதாசிரியருக்கு வாக்களித்தீர்கள். இம்முறை டாக்டருக்கு வாக்களியுங்கள்'' என்று புரியும் வழியில் சொல்கிறார். அவரது பேச்சில் இருந்து, பாட்டாளி மக்கள் ஆட்சியை பொதுவான கட்சியாக மாற்ற வேண்டும் என்ற ஆதங்கம் புரிகிறது. அப்பாவால் செய்ய முடியாததை மகன் செய்தாக வேண்டும் என்ற வேகம் தெரிகிறது.



இலக்கு இந்த தேர்தல் அல்ல

இவ்வளவு புரிந்த 'வாக்களித்தீர்கள்' க்கு இன்னொன்றும் நன்றாகவே தெரியும். இந்தத் தேர்தலும் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்குமான தேர்தல்தான் என்று. இதில் பாமக பெறப்போகும் யதார்த்தமான இடம் என்ன என்பதும் தெரியும். 'வாக்களித்தீர்கள்' குறிவைப்பது இந்தத் தேர்தல் இல்லை. அடுத்த தேர்தலாக இருக்கிறது.

Non-Tamizhar சினிமா... நாம் தமிழர் சீமான்! முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

234 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலமாக தன்னுடைய வாக்கு வங்கியை 8 முதல் 12 சதவிகிதமாக காட்ட ராமதாஸும் அன்புமணியும் நினைக்கிறார்கள். ஒரே ஒரு தேர்தலில் வாங்கிய 8 சதவிகிதத்தை வைத்து விஜயகாந்த் இன்னமும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருப்பதைப் போல - அடுத்த தேர்தலில் தன்னை நோக்கி மற்ற கட்சிகளை வரவைக்கும் தேர்தல் உத்தியே, 2016 சட்டமன்றத் தேர்தல் பா.ம.க.வுக்கு. தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்தி, அடுத்த தேர்தலில் மூலதனம் ஆக்குவதே பாமகவின் திட்டம். அதற்காகத்தான் இத்தனை பகீரத பிரயத்தனங்கள்.

அன்புமணியின் நடை, உடை, பாவனை, பேச்சில் மாற்றம் வந்து விட்டது. அது முன்னேற்றமாக மாற வேண்டுமானாலும் இன்னும் சில செயல்களைச் செய்ய வேண்டும்.

அவர் மீது இரண்டு வழக்குகள் நடக்கிறது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் சரி, தவறு என எதையும் சொல்ல முடியாது. ஆனால் மக்கள் மன்றத்தில்,  அந்த வழக்கில் அவரது தரப்பு நியாயத்தை வெளிப்படையாக வைக்க வேண்டும். கருணாநிதி 2ஜி பற்றி பேசமாட்டார். சொத்து குவிப்பு வழக்கு பற்றி ஜெயலலிதா பேசமாட்டார். அதுபோல் அன்புமணியும் இருந்து விடக் கூடாது. தனது கடந்த காலத்தை மக்கள் மன்றத்தில் சுய பரிசோதனை செய்யத் தயாராக இருக்கும் தலைமையே இளைஞர்களால் இனி விரும்பப்படும்.

'புரட்சியின் முதல் படிக்கல்' என்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்புமணி, தனது முன்னேற்றத்துக்கான முதல் படிக்கல்லைத் தாண்டுவாரா?

 


-ப.திருமாவேலன்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ