Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

233 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! - என்ன காரணம்?

 

233 சட்டமன்ற தொகுதிகளில், அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் மீது தொடர் புகார்கள் வந்து கொண்டிருப்பதால் இந்த முடிவை கட்சி தலைமை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. - மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க. ஆகிய 5 கூட்டணிகளிடையே ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 227 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் அ.தி.மு.க. தோழமைக்  கட்சிகளும் போட்டியிடுகின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா,  கடந்த திங்கட்கிழமை மனு தாக்கல் செய்தார். ஆனால் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் யாரும் அன்றைய தினம் மனுத் தாக்கல் செய்யவில்லை. அதே தினத்தன்றே 233 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 233 தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்  அனைவரும் 28 ம் தேதி (இன்று) மதியம் 12.50 மணி முதல் 1.20-க்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தியிருந்தது. இன்று மதியம் 12.50க்கு மேல் 1.20 வரை குரு ஹோரை உச்சத்தில் இருப்பதால் அந்த இடைப்பட்ட நேரத்தில் 233 அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களும், மாற்று வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


அதற்கு வசதியாக 233 வேட்பாளர்களுக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதம் நேற்று வழங்கப்பட்டது. மற்ற ஆவணங்கள்  ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒருங்கிணைத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் 226 பேரும், கூட்டணி வேட் பாளர்கள் 7 பேரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

மேலும் இன்னொரு காரணம் சொல்லப்படுகிறது. 8 முறை வேட்பாளர்கள் மாற்றம், வேட்பாளர்கள் மீது தொடர் புகார், இப்படி பல புகார்கள் கார்டனுக்கு வந்து கொண்டிருப்பதால் இனியும் வேட்பாளர்களை மாற்ற தலைமை விரும்பவில்லையாம். இதனாலேயே ஒரே நேரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து வேட்பாளர்களுக்கும் உத்தரவு சென்றதாக கார்டன் வட்டாரம் கூறுகிறது.

திருச்செந்தூரில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல்  செய்தார். அவருடன் அவரது மனைவி ராதிகா சரத்குமார் வந்திருந்தார்.

ஆலந்தூர் தொகுதியில் பண்ருட்டி ராமச்சந்திரன், போடிநாயக்கனூர்  தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடும் பா.வளர்மதி, அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் கோகுல இந்திரா, விழுப்புரம் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம், திருவாடனை தொகுதியில் நடிகர் கருணாஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

படங்கள்: விகடன் புகைப்படக்குழு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ