Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மது அருந்தினால் சிறையாம்... கருணாநிதி ஆவேசம்!

விழுப்புரம்: மது, சாராயத்தை யாரும் பயன்படுத்தக் கூடாதென்று சட்டம் கொண்டு வருவோம். மீறுபவர்களை சிறையில் அடைத்து தண்டனை வழங்கப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.க. தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருணாநிதி ஆவேசமாக பேசினார்.

தி.மு.க. தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கருணாநிதி பேசும்போது, ''தி.மு.க. ஒரு சமுதாய பேரியக்கமாகும். இந்த இயக்கத்தை அப்படி செய்துவிடலாம், இப்படி செய்துவிடலாமென்று ஜெயலலிதா நினைக்கிறார். இந்த இயக்கத்தை அப்படி யாராலும் வீழ்த்த முடியாது. யாராலும் அழிக்க முடியாது. வெல்லவும் முடியாது.

விழுப்புரம் மாவட்டச் செயலர் பொன்முடி, தன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து வெற்றி கொண்டுள்ளதற்கு வாழ்த்துக்கள். நமது தேர்தல் கூட்டணியின் முதல் வெற்றியாக அது அமைந்துள்ளது.  பொன்முடிக்கு இங்கு கிடைத்த வெற்றி திருக்கோயிலூரிலும் கிடைக்கும். இதுவே தி.மு.க.வின் வெற்றிக்கு அச்சாரமாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் எனக்கு புதிதல்ல. இங்கேயே நான் வாழ்ந்துள்ளேன். பல தோழர்களையும் பெற்றுள்ளேன். கழகத்தை வளர்த்த சண்முகஉடையார் போன்ற தலைவர்கள் மறைந்தாலும், தொடர்ந்து இயக்கம் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இதே ஊரில், தேர்தல் பிரசாரத்தின்போது சிறுவயதில் நாடகம் நடத்தியுள்ளோம். சிரமப்பட்டு பல வழிகளில் இந்த இயக்கத்தை வளர்த்து வந்துள்ளோம். அன்று ஏற்பட்ட உணர்வுதான், தொடர்ந்து இன்றும் அந்த சகோதரர்களை பார்க்க வரத்தூண்டுகிறது.

இப்போது நாடு காடாகி வருகிறது. நாட்டைப்பற்றி சிந்திக்காமல், தங்களைப் பற்றி சிந்திப்பவர்களே அதிகம் உள்ளனர். ஜெயலலிதா முதல்வருக்கான பணியை சரியாகச் செய்தாரா?. அண்மையில் சென்னையில் மழை வெள்ளம் பாதித்து நூற்றுக் கணக்கானோரை அடித்துச் சென்றது. ஆனால், ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆறுதலும் சொல்லவில்லை. ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர்களை நம்பி பயனில்லை என்பதால், எங்களையே நாங்கள் அர்பணித்து, திராவிட சமுதாயத்தை காப்பாற்றவும், எங்களை பலிகொடுக்கவும் தயாராகி உள்ளோம்.

இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பு. இந்த இயக்கத்தை கட்டிக்காப்பதும், ஆட்சிப்பொருப்பில் அமர்த்துவதும் அவர்கள் கையில் தான் உள்ளது. எனக்கு நான் முக்கியமல்ல, நீங்கள் தான் முக்கியம். இந்த இளைஞர்களால் தான் நாட்டைக் காப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் எதிர்காலத்தை உங்களால் தான் தர முடியும். இளைஞர்கள் எழுச்சி பெற வேண்டும். உங்களால் ஆகாதது ஒன்றுமில்லை. இளைஞர்களை ஊக்கப்படுத்தவே நான் சுற்றி வருகிறேன். இளைஞர்களும், தாய்மார்களும் சேர்ந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை யாரையும் புண்படுத்தாது பண்படுத்தும். விவசாயத்தை மேம்படுத்தும். விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கான இயக்கம் தி.மு.க.. விவசாயம் செழித்தால் தான் முன்னேற முடியும். விவசாயத்திற்கான தனி பட்ஜெட் போடப்படும். பால் விலை குறைக்கப்படும். மதுவிலக்கை சட்டமாக அமல்படுத்தப்படும். மதுவினால் குடும்பங்கள் அழிகிறது. மதுவின் கொடுமைகளை ஒழிக்க தி.மு.க. முயற்சி எடுக்கிறது. அதற்கு ஆதரவளிக்க வேண்டும்.

தி.மு.க. வந்தால் பூரண மதுவிலக்கு வருமா என்று ஜெயலலிதா கேட்கிறார். மதுவிலக்கென்றாலே பூரணமானதுதான். மது, சாராயத்தை யாரும் பயன்படுத்தக் கூடாதென்று வெகுவிரைவில் சட்டம் கொண்டு வருவோம். மீறுபவர்களை சிறையில் அடைத்து தண்டனை வழங்கப்படும். முதல்வராக என்னை தேர்வு செய்தீர்களென்றால், முதல் கையெழுத்தே மதுவிலக்குதான். மதுப்பழக்கத்தை விடுவோம் என்று உறுதியேற்க வேண்டும். அதற்கான சட்டத்தை ஆதரிக்க வேண்டுóம. தேர்தல் அறிக்கையின் உச்சகட்டமே மதுவிலக்கு தான்.

93 வயதில் இப்படி வரலாமா, அலைச்சல் தேவையா என்கின்றனர். வயது 100 ஆனாலும், உங்களுக்காக நான் இங்கு வருவேன். உங்களுக்காக பணியாற்றுவேன். 93 வயதில் இப்படி திரியலாமா என்று நண்பர்கள் கேட்கின்றனர். 103 வயதானாலும் மக்களுக்கான பணியாற்றுவேன். இது எனது சுயநலமில்லை. என்னை நம்பியுள்ள மக்களை, தோழர்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்