Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சூரியனுக்கும், இலைக்கும் ஓட்டு போட்டால்....!?’ முகம் சுளிக்கச் செய்யும் சீமான்

உதய சூரியன் மற்றும் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டம் வந்துவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

தனது பிரசாரத்தை பல மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி பல இடங்களில் பேசி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் சீமானை ஆதரித்து சீமான் பேசுகையில், தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஒவ்வொரு இடங்களிலும் ஏய்கப்படுகின்றனர். குடிக்கும் பாலில் கூட வெளிநாட்டு ரகமாடுகளின் பால் என்று சொல்லி ஆசைகாட்டி நாட்டில் சர்க்கரை நோய்களை இழுத்துவிட்டனர். அதற்கு பிறகு அவர்களிடம் இருந்தே சர்க்கரை நோய்க்காக மருந்துகளையும் இறக்குமதி செய்கின்றனர். இப்படி கமிஷன் காசிற்காக ஊழல் செய்து நாட்டை குட்டி சுவராக மாற்றிவிட்டனர் இந்த புரோக்கர் ஆட்சியாளர்கள்.

விவசாயம் செய்யும் இடத்தில் குவாரி வெடிகளை வெடிக்க வைத்து கல்லை சுரண்டி அதனை விற்று பணம் பார்க்கின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது அதிமுக, திமுகதான். ஒரு குவாரி முதலாளி ஏழு முறை மத்திய அரசிடம் விருது பெற்றார். ஆனால் தற்போது அவர் மீது பல மோசடி வழக்கு. அப்போ, நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது?. வைகை ஆற்றை தூர்வாராமல் அப்படியே போட்டுவிட்டார்கள். ஏன், என்றால் அந்த மண்ணை எடுத்தால் விலை போகாது என்று. தூர்வார வேண்டிய மணல்கள் அகற்றப்படுவதில்லை. ஆனால் வியாபாரம் ஆக்கப்படும். ஆற்று மணல்களை மட்டும் எடுக்கின்றனர். அந்த மணல்கள் எடுப்பது மனிதனின் தோலை உரிப்பதற்கு சமம். ஆறுகளின் பாதுகாப்பாக இருப்பது அந்த மணல்கள் தான். ஆனால் அதைகூட திருடி காசாக மாற்றுகிறது திருடர் கூட்டம்.

தாலிக்கு தங்கம் வழங்கியதை சாதனையாக கூறிய ஜெயலலிதா மதுக்கடையால் தாலி இழந்த பெண்கள் எண்ணிக்கை 2 லட்சம் என்பதையும் சொல்லவேண்டா?. கட்சத்தீவை மீட்போம் என்று கருணாநிதி கூறும் போது இளங்கோவன் கைதட்டுவது வேடிக்கையானது" என்று பேசினார்.

மேலும் மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் பெண் வேட்பாளர் சாராளை ஆதரித்து பேசிய சீமான், விவசாயம் செய்வதை கேவலம் என்று நினைக்கின்றனர் நமது மக்கள். ஆனால், அதுதான் நம்மை காப்பாற்றுகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் 2 ரூபாய்க்கு அரிசி போடுகிறார்கள் என்று ஓடி போய் வாங்குகிறோம். அதையும் குறைத்து ஒரு ரூபாயாக மாற்றினார்கள். அப்போது சென்றோம், இப்போது இலவசமாக மாற்றிவிட்டார்கள். இப்போதும் சென்று கொண்டிருக்கிறோம். இந்த நிலை நீடிக்காது. வயலில் சென்று வேலை செய்ய பயப்படும் நாம், நாளை சோற்றிற்காக பயபடபோறோம். இன்று இலவசமாக போடும் இவர்கள் நாளை கண்டிப்பாக காப்பாற்ற மாட்டார்கள். கஜானா காலியானதும் ஓடிவிடுவார்கள்.

ஒரு குண்டூசி செய்பவன் கூட தன் பொருளுக்கு தானே விலையை நிர்ணயம் செய்கிறான். ஆனால் வருடம் முழுவதும் உழைத்து ஓடாய் தேய்ந்த விவசாயி விளைய வைத்த பொருளுக்கு யாரோ விலையை நிர்ணயம் செய்கிறான். மிகவும் கொடுமையான விஷயம். விவசாயிகள் தற்கொலை வெறும் செய்தி அல்ல, உலகம் சோறு, தண்ணி இல்லாமல் அழியப்போகிறது என்பதற்கு முன்னெச்சரிக்கை.

விஜய் மல்லையாவை பத்திரமாக அனுப்பிவிட்டு நாடகம் நடத்துகிறார்கள். பீர் கம்பெனி முதலாளிக்கு பல சலுகைகள் கொடுத்து பல கோடி கடன் கொடுத்து காப்பாற்றுகின்றனர். ஆனால் விவசாயிகள் வாங்கும் சொற்ப பணத்திற்கு அவர்களை கட்டிப்போட்டு அடித்து தற்கொலை செய்வதற்கு தூண்டுகின்றனர். இந்தியாவிற்கு வேளாண்மை தொழில் அல்ல, அது அவனுடைய பண்பாடு.

ஜெயலலிதா கூட்டத்துக்கு போனவரிடம் கேட்டேன். எப்படி இருந்தது என்று. ஒரு முறை போனால் 200 ரூபாய். ஒரேடியா போனால் 20 லட்ச ரூபாய் என்றார். ஜெயலலிதா கட்சியில் இருப்பவர்கள் பல்லு விலக்குவதில்லை போல. அவர் கிட்ட போகும் போது வாயை பொத்திக்கொண்டே போகின்றனர். படி படியா மது விலக்கு கொண்டுவர போறாங்களா. மாடில எதுவும் போய் கடைவைத்திருப்பாங்க போல,  ஆனால், மதுவிற்கு அஸ்திவாரம் போட்டது கருணாநிதி தான். அந்த கள்ளச்சாவி திறந்ததுதான் டாஸ்மாக்.

இனி மாற்றம் கிடைக்கப் போகிறது. தமிழ்நாடு இயற்கை விவசாயத்தில் கொடிகட்டி பறக்கப்போகிறது. குற்றங்கள் செய்தவருக்கு தண்டனை கொடுக்கும் முன் அவனை தவறு செய்யவிடாமல் தடுத்துக்காட்டுவோம். பல லட்சம் புதிய போலீஸ் நியமிக்கப்படும். அவர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான சம்பளம் கொடுக்கப்படும். விவசாயிகள் அனைவரும் அரசுப்பணியாளராக மாற்றப்படுவர். அதனால் அனைவரும் இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களிக்க வேண்டும். கலைஞர் கருணாநிதியே இந்த முறை இதற்கு தான் கை நடுக்கத்தில் வாக்களிக்கப் போகிறார். உதய சூரியன் மற்றும் இரட்டை இலையில் வாக்களித்தால் அவர்கள் கையில் குஷ்டம் வந்துவிடும். எனவே ஆதாரிக்க வேண்டுகிறேன்" என்று பேசினார்.

சே.சின்னதுரை

படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close