Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவ நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது:முத்தரசன்!

சென்னை: மருத்துவ பொது நுழைவுத் தேர்வுக்கு அனுமதியளித்துள்ளது  மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்த விசயத்தில் தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் உரிமையைக் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
  
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசு நடத்தும் ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு’ ( Ntional Eligibility cum Entrance Test- NEET) அடிப்படையில் மட்டுமே அமைத்திட வேண்டும் என இந்திய மருத்துவக் கழகமும்,மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறையும் கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.2013 ஆம் ஆண்டு அதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது.அதை எதிர்த்து தமிழக அரசும் ,பல தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்விற்கு தடைவிதித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம், ‘தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வை ‘ இந்த ஆண்டே நடத்திட இன்று அனுமதி வழங்கியுள்ளது.இந்த நுழைவுத்தேர்விலிருந்து விதிவிலக்குக் கோரிய தமிழக அரசின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.இது அதிர்ச்சி அளிக்கிறது.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மத்திய அரசு தனது ‘‘தேசிய தகுதி காண் மற்றும் நுழைவுத் தேர்வை’ ப் புகுத்துவது மாநில அரசுகளின் உரிமைக்களுக்கு எதிரானது. கூட்டாட்சி கோட்பாட்டுக்கு எதிரானது.சமூக நீதிக்கு எதிரானது.இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்கு எதிரானது.
பல்வேறு மொழிகள்,பாடத்திட்டங்கள், பல்வேறு கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில், பொதுப்பள்ளி முறை இல்லாத ஒரு சூழலில் , மாநில அரசுகளின் மருத்துவக் கல்வி இடங்களுக்கும் அகில இந்திய அளவில் தகுதிகாண் - நுழைவுத் தேர்வை திணிப்பது நாட்டின் ஒற்றுமை - ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும். கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைமுறையை மாநில அரசுகளே அமைத்துக்கொள்ள வேண்டும்.இதில் மத்திய அரசும் ,இந்திய மருத்துவக் கவுன்சிலும் ,உச்ச நீதிமன்றமும் தலையிடக்கூடாது.
உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்திரவால் , தமிழக மாணவர்களும் ,பெற்றோர்களும் கவலை அடைந்துள்ளனர். குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.எனவே,தமிழக அரசு , தமிழக மாணவர்களின் உரிமைகளை பாதுக்காக்க போர்க்கால அடிப்படையில் சட்ட ரீதியான மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அவசியப்படின் மாநில அரசுகளின் உரிமைகளை காக்கும் வகையில் மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டுவரவேண்டும்.அவசரச்சட்டம் கொண்டுவர மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ