Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தி.நகரை தட்டிப் பறிக்குமா தி.மு.க.? - நட்சத்திர தொகுதி நிலவரம்

 

வாக்காளர்கள் எண்ணிக்கை

தொகுதி புராணம்

ஆசியாவின் பிரமாண்ட ஷாப்பிங் மையங்களில் ஒன்று தியாகராயர் நகர் தொகுதி. சுதந்திரத்துக்குப் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலின் போதுதான் இத் தொகுதி உருவாக்கப்பட்டது. தியாகராய நகர் தொகுதியில்  தேனாம்பேட்டை மண்டலத்தில்  உள்ள 117, 120, 121,122,123,124,125,126  ஆகிய வார்டுகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள  127,137  ஆகிய வார்டுகளும்  இருக்கின்றன. தொகுதியில் எல்லாதரப்பு மக்களும் குடியிருக்கின்றனர். அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்களுக்கு மத்தியில் சினிமா, அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் எண்ணிக்கையும் ஏகம். துணிக்கடைகள், நகைக்கடைகள் , உணவகங்கள் அதிக அளவில் இருக்கின்றன. மாம்பலம் ரயில் நிலையம், தியாகராயர் நகர் பேருந்து நிலையம், பனகல் பார்க், அயோத்தியா மண்டபம் ஆகியவை தொகுதியின் அடையாளங்கள்!

கைமாறிக் கொண்டே இருக்கும் கோட்டை!

தொகுதியின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால், காங்கிரஸ் 3 முறை வென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற காந்தி காமராஜ் காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றன. தி.மு.க. 5 முறை வென்றிருக்கிறது. அ.தி.மு.க 2 முறை வென்றிருக்கிறது. ஆக, ஆரம்ப காலத்தில் காங்கிரஸ், பின்னர் தி.மு.க. சமீப தேர்தல்களில் அ.தி.மு.க. என தி.நகர் தொகுதி ‘வலுத்த கட்சி’ கைகளிலேயே தஞ்சமடைந்திருக்கிறது.



 கடந்த 2006, 2011 தேர்தல்களிள்  அ.தி.மு.க வேட்பாளராக வெற்றி பெற்ற வி.பி. கலைராஜன் தொடர்ந்து 10 வது ஆண்டுகளாக தி.நகர் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இந்த தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, மக்கள் நலக்கூட்டணி, பி.ஜே.பி., பா.ம.க என 5 முனைப்போட்டி நிலவுகிறது. 

தேர்தல் ரெக்கார்ட்

1957 கே.வினாயகம் (காங்கிரஸ் )
1962 காஞ்சி மணிமொழியார் தி.மு.க
1967 ம.பொ. சிவஞானம் (தி.மு.க)
1971 கே.எம்.சுப்பிரமணியம் (காங்கிரஸ்)
1977 ஆர்.இ.சந்திரன் ஜெயபால் (திமுக)       
1980 கே.சவுரிராஜன் (கா.கா.தே.க)
1984  கே.சவுரிராஜன் (காங்கிரஸ்)
1989  எஸ்.ஏ.கணேசன் (தி.மு.க)
1991  எஸ்.ஜெயக்குமார்  (அ.தி.மு.க)
1996  ஏ.செல்லகுமார்  (த.மா.கா)
2001  ஜெ.அன்பழகன் (தி.மு.க)
2006  வி.பி.கலைராஜன் (அ.தி.மு.க)
2011  வி.பி.கலைராஜன் (அ.தி.மு.க)

தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகளும் நிரந்தரப் பிரச்னைகளும்!

தியாகராய நகர் தொகுதியில் உள்ள கடைகளுக்கு  மாநிலம் முழுவதும் இருந்து ஷாப்பிங் செய்வதற்கு மக்கள் வருவதால் எப்போதும் நெரிசல் நிறைந்த பகுதியாகவே இருக்கிறது. இங்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் போக்குவரத்து நெருக்கடியும் அதிகம். தி.நகருக்குள் வரும் இரு சக்கர வாகனங்கள் முதல் படகுக் கார்கள் வரை எதையும் நிறுத்துவதற்கு போதுமான, முறையான பார்க்கிங் வசதி  இல்லை. இதோடு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி வந்து போவதால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. சென்னையில் அதிக மாசு பதிவாகும் இடங்களில் தியாகராய நகரும் ஒன்று.  தி.நகர் பேருந்து நிலையம் பல ஆண்டு காலமாக மிக மோசமான நிலையில் உள்ளது. சிறிய அளவில் மழை பெய்தாலே பெரியளவில் தண்ணீர் தேங்குவது என்று தி.நகர் தொகுதி மக்கள், அனுதினமும்பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், குப்பை அதிகம் சேருகிறது.

ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், சில ப்ளாட்களை வணிக நிறுவனங்கள் திடீரென வாங்குகின்றன. அங்கு பல ஆண்டுகளாகக் குடியிருக்கும்  மக்களுக்கு மறைமுகமாக நெருக்கடி கொடுக்கின்றனர். இதனால், மற்றவர்களும் ஃப்ளாட்களை காலி செய்து விட்டு ஓடிவிடுகின்றனர். பின்னர் ஒட்டு மொத்த குடியிருப்பையும் இடித்து விட்டு வணிக வளாகமாக மாற்றுகின்றனர்.  பெரும்பாலான வணிக வளாகங்களில் தீ தடுப்பு வசதிகள் இல்லை. சி.எம்.டி.ஏ. விதிமுறைகளை மீறி பல அடுக்குகளில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. மாம்பலம் ரயில் நிலையத்தில் தென்மாவட்டங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. எழும்பூர், தாம்பரத்துக்கு இணையாக அதிக அளவு மக்கள் பயன்பாடு உள்ள ரயில்நிலையமாக உள்ளது. ஆனால்,  இங்கு போதுமான வாகன நிறுத்தும் இடங்களோ, மக்களுக்கான அடிப்படை வசதிகளோ இல்லை.

என்ன செய்தார் இப்போதைய எம்.எல்.ஏ..?

வி.பி. கலைராஜன் கடந்த 2006-ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.  'தி.நகர்  பகுதியில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றுகிறேன்' என்று சொன்னவர், அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. தெற்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால் அந்த பகுதியில் இருந்த தண்ணீர் பைப்புகள் இடமாற்றம் செய்யப்பட்டன. இதன் விளைவாக அந்த பகுதியில் இருக்கும் 19 தெருக்களில் இப்போது குழாய் மூலம் குடிநீர் வருவதில்லை. குடிநீர் வசதி செய்து தருவதாக கலைராஜன் கூறினார். நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள். பல அடுக்கு பார்க்கிங் வசதி கொண்டு வருகிறேன் என்று சொன்னார். அதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறினார். அந்த திட்டம் கிடப்பிலேயே இருக்கிறது!

பத்தாண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தும் சொல்லிக் கொள்ளுமளவு சாதனைகள் செய்யாததாலும், உட்கட்சி எதிர்ப்பு காரணமாகவும் கலைராஜனுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுவே எம்.எல்.ஏ-வாக அவருடைய செயல்பாட்டுக்கான அத்தாட்சி!

ஆறுதல் தரும் விஷயங்கள் 

தியாகராய நகரில் இருந்து நகரின் பல பகுதிகளுக்கும் செல்வதற்கு போக்குவரத்து வசதி, மினிப்பேருந்து வசதிகள் இருக்கின்றன.  பனகல் பார்க் , ஜீவா பார்க் என மக்கள் பொழுது போக்குவதற்காக இடங்கள் இருக்கின்றன.

களம் காணும் பிரதான வேட்பாளர்கள்!

தி.நகர் சத்யா, அ.தி.மு.க.


ப்ளஸ்

மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர். இதனால் தொகுதி மக்களுக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார். 

மைனஸ்

தி.நகர் தொகுதிக்கு முன்பு சரஸ்வதி என்பவர்  நிறுத்தப்பட்டார். அவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால் சத்யாவை ஜெயலலிதா நிறுத்தினார். ஆனால், சத்யா மீது சொத்து அபகரிப்பு, நிதிமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது அவருக்கு மைனஸ்.

  டாக்டர் கனிமொழி, தி.மு.க.



(+) 


இவரது தந்தை என்.வி.என். சோமு என்பது இவருக்கு ப்ளஸ் பாயிண்ட். டாக்டர், படித்தவர் என்பதும் இவருக்கு இருக்கும் ப்ளஸ் பாயிண்ட்கள்

(-)

  தொகுதிக்கு அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர், களத்தில் இருக்கும் தொண்டர்களிடம் அவ்வளவாக நெருங்கிப் பழகாதவர்!

வி.குமார், தே.மு.தி.க. 


(+)
தே.மு.தி.க வேட்பாளர் என்பது மட்டுமே!
 
(-)

வி.குமாருக்கும் தியாகராயநகர் தொகுதிக்கும் தொடர்பே இல்லை. சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளராக இருக்கும் இவரை இங்கு நிறுத்தியிருப்பது மைனஸ்.

ஹெச்.ராஜா, பி.ஜே.பி.



(+)

தொகுதியில் இருக்கும் பிராமணர்  சமுதாய ஓட்டுக்களை நம்பி களம் இறங்கிருக்கிறார். தி.நகர் தொகுதியைக் குறிவைத்து ஒரு வருடத்துக்கு முன்னரே, காரைக்குடியில் இருந்து இங்கு இடம் பெயர்ந்து விட்டார்.


  (-)
 
பிரபலமானவர் என்றபோதிலும் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர். எனவே, கடந்த முறை போட்டியிட்ட இல.கணேசனும் இவருடன் பிரசாரத்துக்கு சென்று வருகிறார்.

வினோத், பா.ம.க.



(+) 

தொகுதியின் மண்ணின் மைந்தர்.  ஃபேஸ்புக் ஐடி, வீட்டுக்கு வீடு விசிட்டிங் கார்டு கொடுத்து பிரசாரம்  என்று பரபரப்பாக இருக்கிறார். 

  (-)

ஆனாலும் இதுவரை தேர்தல் எதிலும் போட்டியிடாதவர் என்பது மிகப்பெரிய மைனஸாக உள்ளது.

ஃபைனல் பன்ச்

தொகுதியில் தி.மு.க, அ.தி.மு.க இடையேதான் போட்டி. தி.மு.க சார்பில் போட்டியிடும் டாக்டர் கனிமொழிக்கு நல்லவர் என்ற இமேஜ் இருக்கிறது. இது தொகுதியின் மேல்தட்டு மக்களிடம் வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. தி.மு.க-வுக்கு என இருக்கும் பாரம்பர்ய ஓட்டுக்களும் கூடுதலாக அவருக்கு கிடைக்கும். இருந்த போதிலும், குறிப்பிட்ட சமுதாயத்தின் ஓட்டுக்களை ஹெச்.ராஜா பிரிப்பார் . ஆளும் கட்சி மீதான அதிருப்தி, தி.நகர் சத்யா மீதான புகார்கள் ஆகியவை அ.தி.மு.கவுக்கு பாதகமாக அமையலாம். 

இந்த சூழலில் குறைந்த வித்தியாசத்திலேனும் கனிமொழி வெற்றி பெறுவார் என்பது போல இப்போதைய நிலவரம் இருக்கிறது. ஆனால், அது கடைசி நேரத்தில் மாறுதலுக்குட்பட்டது!  

 

- கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ