Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மண்ணின் மைந்தனாக வெற்றி பெறுவாரா பொன்முடி? - ஸ்டார் வேட்பாளர் ஸ்டேட்டஸ்!

வேட்பாளர்: பொன்முடி, தி.மு.க.

சிறப்புகள்: சுகாதாரத்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகள் வகித்தவர்

தொகுதி: திருக்கோயிலூர்

தொகுதியின் இயல்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தொகுதி. தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள  திருக்கோயிலூரில் இருக்கும் உலகளந்த பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.  1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதி, 1969-ம் ஆண்டு முகையூர் தொகுதியாக மாறியது. தொகுதி வரையறைக்குப் பின்னர் 2011-ல், மீண்டும் திருக்கோயிலூர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டது.

திருக்கோயிலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 1952-ம் ஆண்டு முதல் 15 முறை நடைபெற்ற தேர்தலில்,  தமிழ்நாடு டாய்லர்ஸ் கட்சி 1 முறையும், காங்கிரஸ் 4 முறையும், தி.மு.க 4 முறையும், அ.தி.மு.க 4 முறையும், பா.ம.க 1 முறையும், தே.மு.தி.க 1 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இத்தொகுதியில் வெற்றி பெற்றவர்களில் ஏ.கோவிந்தசாமி மட்டுமே அமைச்சரானார். திருக்கோயிலூர் தொகுதியில் வன்னியர்கள் 40 சதவீதமும், ஆதி திராவிடர்கள் 30 சதவீதமும், அகமுடையார், நத்தம் உடையார், யாதவர், நாயுடு, முதலியார், நாடார், பிள்ளைமார் உள்ளிட்ட இதர சமுதாயத்தினர் 30 சதவீதமும் உள்ளனர்.



பொன்முடியின் அரசியல் பயணம்:

டாக்டர் தெய்வ சிகாமணி என்கிற பொன்முடி, எம்.ஏ., (வரலாறு), எம்.ஏ., (பொது நிர்வாகம்), எம்.ஏ., (சமூக அறிவியல்), பி.எட்., பி.ஜி.எல்., பிஹெச்.டி என முனைவர் பட்டம் வரை, பல பட்டமேற்படிப்புகளுக்குச் சொந்தக்காரர். 17 ஆண்டு காலம் கல்லூரிப் பேராசிரியர் பணியில் இருந்தவர். விழுப்புரம் கலைக் கல்லூரியில் பணியில் இருந்தபோது திராவிடர் கழக மேடைகளில் பேச்சாளராக அறிமுகமானவர்.    அரசியல் ஆர்வம் காரணமாக தனது பணியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க-வில் சேர்ந்தார். அப்போது வடமாவட்டங்களில் தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக இருந்த செஞ்சி ராமசந்திரனுக்கு எதிர்துருவமான இளம் புயலாக கிளம்பி வந்த  பொன்முடியை நிலைநிறுத்தினார் கருணாநிதி. செஞ்சி ராமசந்திரன் ம.தி.மு.க-வுக்குப் போனதும், தி.மு.க-வில் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்தார் பொன்முடி. முதன் முதலாக 1989- சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர், சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மீண்டும் 1996-ல் தி.மு.க ஆட்சி அமைத்த போது, பொன்முடி போக்குவரத்துறை அமைச்சர் ஆனார்.  2001 தேர்தலில் வெற்றி  பெற்றார்.



2006-ல் தி.மு.க ஆட்சியின்போது,  உயர்கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.  நுழைவுத் தேர்வை ரத்து செய்தது, கலைக் கல்லூரிகளில் ஷிஃப்ட் முறையைக் கொண்டுவந்தது, கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து அட்டை, முதுகலைப் பட்டம் வரை கல்விக் கட்டணம் ரத்து போன்றவை பொன்முடியின் ஆக்கப்பூர்வ சாதனைகளாகச் சொல்லப்படுகிறது. நுழைவுத் தேர்வு ரத்து காரணமாக கிராமப்புற மாணவர்கள் 54 ஆயிரம் பேர் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருப்பது முக்கியச் சாதனை.  கட்சிக்காரர்கள் ஆதரவுடன் வெற்றி பெறும் பொன்முடி, அமைச்சர் ஆனவுடன் கட்சிக்காரர்களை மறந்து விடுவார் என்பதும், அமைச்சர் பதவி ஏற்றதும், தாம் சார்ந்த உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் உதவிகள் செய்வார் என்பதும் அவர் மீது தி.மு.க.வினர் வைக்கும் குற்றச்சாட்டுக்கள். கட்சிக்காரர்களின் அதிருப்தி மற்றும் தொகுதியில்  பெரும்பான்மையாக உள்ள வன்னியர் ஓட்டுகள் கடந்த தேர்தலில் கிடைக்கவில்லை. எனவே கடந்த தேர்தலில் விழுப்புரத்தில் தோற்றுப்போனார். எனவே இந்த முறை தொகுதி மாறி உள்ளார்!

தேர்தல் ட்ராக் ரிக்கார்ட்

1989-ல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991-ல் விழுப்புரம் தொகுதியில் தோல்வி அடைந்தார். அபார அ.தி.மு.க அலை காரணமாக தோல்வி.

1996-ல் அபார அ.தி.மு.க எதிர்ப்பு அலையில் அதே விழுப்புரத்தில் வெற்றி.

2001, 2006 தேர்தல்களில்  விழுப்புரம் தொகுதியில் வெற்றி.

2011 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் சி.வி. சண்முகத்திடம் தோல்வி.

2016 ல், தற்போது திருக்கோயிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.



பொன்முடியின் ப்ளஸ்

பொன்முடி பிறந்த டி.எடையார் கிராமம்  திருக்கோயிலூர் தொகுதிக்குள் வருகிறது. மண்ணின் மைந்தர் என்ற பெயரில் தேர்தலைச் சந்திக்கிறார். கல்லூரி பேராசிரியராக இருந்தவர். திராவிட இயக்கம் குறித்தும், அமெரிக்காவின் கருப்பினத்தவர் குறித்தும் புத்தகங்கள் எழுதி உள்ளார். நீண்டகால அரசியல் தொடர்பு, அமைச்சராக பதவி வகித்தது போன்ற தகுதிகள் இவருக்கு ப்ளஸ். கடந்த பொங்கல் பண்டிகையின் போது விழாக்களில் பங்கேற்று பல ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது முதலே  திருக்கோயிலூர் தொகுதியை குறிவைத்து களப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

மைனஸ்

தொகுதியில் இருக்கும் கிராமத்தில் பிறந்தவர் என்ற போதிலும், விழுப்புரத்தில் தோல்வியடைந்த பின்னர்தான் சொந்த ஊர் பாசம் வெளிப்படுகிறதா என்று தொகுதிக்குள் கேட்கிறார்கள். இது அவருக்கு மைனஸ். மேலும் தேர்தல் வெற்றிக்கு பின்னர் கண்டுகொள்வதில்லை என்ற கட்சிக்காரர்களின் ஆதங்கம்.

எதிர்த்து போட்டியிடும் மற்ற பிரதான கட்சி வேட்பாளர்கள் :


கோதண்டராமன், அ.தி.மு.க



(+)

கோதண்டராமன், வக்கீல். சொந்த ஊர் முகையூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமம். இவரும் தொகுதியின் மண்ணின் மைந்தர். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், தொகுதி மக்களுக்கு அறிமுகமானவர் என்பது ப்ளஸ் பாயிண்ட்.  முகையூர் தொகுதியாக இருந்த போது, 1989  தேர்தலில்  வெற்றி வாய்ப்பை இழந்தார்.  கடந்த 2001 தேர்தலில் வெற்றி பெற்றார்.

(-)

அ.தி.மு.க. ஆட்சி மீது இருக்கும் அதிருப்தி, கடந்த முறை கிடைத்த தே.மு.தி.க. ஓட்டுக்கள் கிடைக்காது ஆகியவை இவருக்கு மைனஸ்.

பால.சக்தி, பா.ம.க.



(+)

திருக்கோயிலூர்தான் சொந்த ஊர் என்பது இவருக்கு ப்ளஸ் பாயிண்ட். 37 வயதில் பரபரப்பாக தொகுதியில் வளைய வருகிறார். அந்த ஆர்வமும் வன்னிய சமூக ஆதரவும் ப்ளஸ்.

(-)

கூட்டணி பலம் எதுவும் இல்லாமல் போட்டியிடுவதால், பிற சமூக வாக்குகளோ, களத்தில் உதவியோ கிடைக்காது.

டி.ஜி.கணேஷ் , த.மா.கா



(+)

கட்சியின் மாவட்டத் தலைவர். தொழிலதிபர். மக்கள் நலக்கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.,  கடந்த முறை இத் தொகுதியில் வெற்றி பெற்றது. அந்த தே.மு.தி.க. ஆதரவு வாக்குகள் பலம்.


(-)


முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். கள நிலவரம் அவ்வளவாக அத்துபடி இல்லை. தே.மு.தி.கவின் உட்கட்சி அதிருப்தி பாதகமாக இருக்கலாம்.   

ஃபைனல் பன்ச்

மண்ணின் மைந்தர் என்ற ரீதியில் வாக்குகள் கிடைக்கும் என்று பொன்முடி எதிர்பார்க்கிறார். கடந்த முறை தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ம.க இந்த முறை தனித்துப் போட்டியிடுவதால் பொன்முடிக்கு ஆதரவான வாக்குகள் பிரியக்கூடும். கடந்த முறை தே.மு.தி.க வென்ற தொகுதி என்பதால் அவர்களும் ஓட்டுக்களைப் பிரிப்பார்கள். தேர்தல் அரசியலில் அனுபவம் வாய்ந்தவர், கட்சியின் செல்வாக்கான தலைவர்களில் ஒருவர் போன்றவை கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை கடைசி நேரத்தில் சரிக்கட்டி விடுவார் என்ற நம்பிக்கை, தாராள கரன்சி இறைப்பு, ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் போன்றவை பொன்முடிக்குச் சாதகமாக உள்ளதால், அ.தி.மு.க. வேட்பாளரைவிட நூலிழை வித்தியாசத்தில் முந்தி நிற்கிறார் பொன்முடி!

 


-கே.பாலசுப்பிரமணி, படங்கள்; சிலம்பரசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ