Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமநாதபுரத்தை மீண்டும் கைப்பற்றுவாரா ஜவாஹிருல்லா?- நட்சத்திர தொகுதி நிலவரம்!

 

 

வாக்காளர்கள்:


தொகுதி புராணம்:

மன்னரையே தோற்கடித்த சேது மண்!

 

தண்ணியில்லா காடு, தண்டனைப் பகுதி என அழைக்கப்படுவதில் புகழ்பெற்ற மாவட்டம் ராமநாதபுரம். மீன்பிடித்தலும், சுற்றுலா ஆகியவை பிரதான அடையாளங்கள். பெயர் சொல்லும் அளவுக்கு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வேலை பார்க்கின்றனர். நீண்ட கடற்பகுதியை கொண்டுள்ள ராமநாதபுரத்தில் முக்குலத்தோர் முதலிடத்திலும், இஸ்லாமியர்களும் ஆதிதிராவிடர்களும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

1952-ம் ஆண்டு நடந்த முதல் பொதுத்தேர்தலில் ராமநாதபுரம் மன்னராக இருந்த சண்முகராஜேஸ்வர சேதுபதி வென்றார். தொடர்ந்து மூன்று முறை இந்திய தேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த மன்னரை, 1967-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க வேட்பாளர் தங்கப்பன் தோற்கடித்தார். 1971-ம் ஆண்டு தி.மு.கவின் சத்தியேந்திரன் வென்றார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட டி.ராமசாமி தொடர்ந்து மூன்று முறை தொகுதியைக் கைப்பற்றினார். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என கை மாறி வந்த ராமநாதபுரம் தொகுதியில்,  கடந்த 2011 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெற்றி பெற்றார்.

முடிவுக்கு வராத மீனவர்கள் துயரம்

' வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் தொகுதியை சிங்கப்பூருக்கு நிகராக மாற்றுவோம்' என வாக்குறுதி கொடுத்து வெற்றி பெறுபவர்கள், அதற்கான சிறு முயற்சியைக்கூட எடுப்பதில்லை. இதனால் பெரும்பாலான விவசாய நிலங்கள் விளை நிலங்களாக மாறிவிட்டன. பெயரளவிற்குக்கூட தொழிற்சாலைகள் இல்லை. மீன்களை பதப்படுத்தி அவற்றை உரிய விலைக்கு விற்பதில்தான் எத்தனை இடையூறுகள்? வெளிமாநில வியாபாரிகளே மீன்களின் விலையை நிர்ணயிக்கின்றனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகிறவர்கள் ராமநாதபுரம் மீனவர்கள். மருத்துவக் கல்லூரியும் அரசுக் கல்லூரியும் நீண்டநாள் கனவுகள். இந்துக்களின் புனிததலமான ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை, பல ஆண்டுகளாக கிடப்பிலேயே போட்டுவிட்டனர்.

போட்டியிடும் வேட்பாளர்கள்:

1) எம்.எச்.ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)

2)டாக்டர். மணிகண்டன் (அ.தி.மு.க)

3)சிங்கை ஜின்னா (தே.மு.தி.க)

4) துரை கண்ணன் (பா.ஜ.க)

5)டாக்டர். சிவக்குமார் (நாம் தமிழர் கட்சி)

தொகுதி எல்லைகள்:

தொகுதி சீரமைப்பில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்த பல பகுதிகள் திருவாடானை தொகுதியுடன் இணைக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமே திருவாடனை தொகுதிக்குள்தான் உள்ளது. ராமேஸ்வரம் தாலுகா, ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி, ராமநாதபுரம் தாலுகாவில் உள்ள ஆற்றங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை, குசவன்குடி, ராஜசூரியமடை, வெள்ளமறிச்சுகட்டி, அச்சடிபிரம்பு, குதகோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், ரெட்டையூரணி, நாகாச்சி, என்மனங்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காராண், பெரியபட்டிணம், களிமண்குண்டு, திருப்புல்லாணி, களரி, உத்தரகோசமங்கை, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடினேந்தல், வேளானூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லந்தை, மாயாகுளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ராமநாதபுரம் தொகுதி.

யாருடைய கோட்டை?:

ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க ஐந்து முறையும், தி.மு.க நான்கு முறையும் காங்கிரஸ் நான்கு முறையும், மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன. அ.தி.மு.க, தி.மு.கவுக்கு சமபலமுள்ள தொகுதியாக பார்க்கப்படுகிறது.

தொகுதி ரெக்கார்ட்

1952: சண்முகராஜேஸ்வர சேதுபதி (இ.தே.காங்கிரஸ்)

1957: சண்முகராஜேஸ்வர சேதுபதி (இ.தே.காங்கிரஸ்)

1962: சண்முகராஜேஸ்வர சேதுபதி (இ.தே.காங்கிரஸ்)

1967: டி.தங்கப்பன் (தி.மு.க)

1971: எம்.எஸ்.கே. சத்தியேந்திரன் (தி.மு.க)

1977: டி.ராமசாமி (அ.தி.மு.க)

1980: டி.ராமசாமி (அ.தி.மு.க)

1984: டி.ராமசாமி (அ.தி.மு.க)

1989: எம்.எஸ்.கே.ராஜேந்திரன் (தி.மு.க)

1991: எம்.தென்னவன் (அ.தி.மு.க)

1996: ரகுமான்கான் (தி.மு.க)

2001: அன்வர்ராஜா (அ.தி.மு.க)

2006: அசன்அலி (இ.தே.காங்கிரஸ்)

2011: ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)


ப்ளஸ்-மைனஸ்:


முனைவர். ஜவாஹிருல்லா (ம.ம.க):தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஜவாஹிருல்லா, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி காலங்குடியிருப்பைச் சேர்ந்தவர். கல்வியாளர். மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர். 2011 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றிருந்த ம.ம.கவுக்கு, ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். வாக்காளர்களைப் பார்த்து கும்பிடாத வேட்பாளர் எனப் பெயர் வாங்கிய ஜவாஹிருல்லா, அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் உழைப்பால் எளிதாக வென்றார். இந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார்.

(+): எம்.எல்.ஏ என்ற முறையில் யாரும் எளிதில் சந்திக்க முடியும். தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் கமிஷன் வாங்காமல் செயல்பட்டவர். மீனவர் போராட்டங்களில் பங்கெடுத்தவர். அவர்களது பிரச்னைகள் குறித்து சட்டமன்றங்களில் குரல் எழுப்பியவர். இந்தத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெரிதும் நம்பியிருக்கிறார். இவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போட்டியிடாததும் ப்ளஸ்.

(-): நல்லவர் என பெயர் எடுத்திருந்தாலும் தொகுதிக்கு என தனித்துவமான திட்டங்கள் எதையும் கொண்டு வராதது. தொகுதியின் வளர்ச்சி குறித்து அக்கறை காட்டாதது. பிரசாரத்தின்போது பணம் செலவழிக்காமல் இருப்பது, கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாதது மைனஸ்.

டாக்டர்.மணிகண்டன் (அ.தி.மு.க):(+): தொகுதியில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற அ.தி.மு.க வாக்குகள் மட்டுமே ப்ளஸ்.

(-): தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர். கட்சிக்காரர்களுடன் நெருக்கம் இல்லாததால் பிரசாரத்தில் திணறுவது. கட்சிக்காரர்களுக்கு செலவு செய்ய மறுப்பது மைனஸ். முக்குலத்தோர் சமூகத்தில் மறவர் பிரிவை சேர்ந்தவர். இந்த பிரிவினர்  இந்த தொகுதியில் எண்ணிக்கையில் குறைவு தான்.

துரை.கண்ணன் (பா.ஜ.க):(+): 2011 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 28 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இந்த உற்சாகத்துடன் மீண்டும் களம் இறங்கியுள்ளார். தொகுதியில் அதிகமான வாக்காளார்களைக் கொண்ட . இந்த தொகுதியில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் அகமுடையார் பிரிவைச் சேர்ந்தவர். ம.ம.கவும் அ.தி.மு.கவும் வெற்றி பெறக் கூடாது என நினைப்பவர்கள் வாக்கு இருப்பது மட்டுமே ப்ளஸ்.

(-): முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டத்தில், பா.ஜ.க வேட்பாளர் என்பது மைனஸ்.

சிங்கை ஜின்னா (தே.மு.தி.க):(+): மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளராக தே.மு.தி.க சார்பில் களமிறங்குகிறார். சட்டமன்றம், நாடாளுமன்றம் எனப் பல தேர்தல்களில் போட்டியிட்டவர். இதுமட்டும்தான் ப்ளஸ்.

(-): தே.மு.தி.கவுக்கு என கணிசமான வாக்குகள் இருந்தாலும், முரசு கொட்டுமா? என்பது கேள்விக்குறி

மருத்துவர் சிவக்குமார் (நாம் தமிழர் கட்சி):(+): சீமானின் சொந்த மாவட்டத்தில் போட்டியிடுகிறார். மறவர் சமுதாய ஓட்டுக்கள் இவருடைய பிளஸ்.

(-): தமிழ் உணர்வாளர்களின் ஓட்டுக்களை மட்டுமே குறிவைப்பது

கள நிலவரம்:

சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்து வரும் ஜவாஹிருல்லா மீது தொகுதி மக்களின் அதிருப்தி, அவருடைய பிரசாரத்தில் கூட்டணிக் கட்சியினர் காட்டும் அக்கறையின்மை போன்றவை ஒருபக்கம் இருந்தாலும், அ.தி.மு.கவின் அதிருப்தி வாக்குகளும், இஸ்லாமிய சமூக வாக்குகளும் ஜவாஹிருல்லா பக்கமே அணி சேருகிறது. அ.தி.மு.க வேட்பாளரின் சமுதாய வாக்குகள் மற்றும் அ.தி.மு.கவின் பாரம்பர்ய ஓட்டுக்கள் அனைத்தும் மணிகண்டனுக்கே செல்லும் வாய்ப்புள்ளது.

இந்தத் தேர்தலில் ம.ம.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில்தான் கடும்போட்டி. இஸ்லாமிய அமைப்புகள் போட்டியிடாதது, அ.தி.மு.க வேட்பாளரின் அறிமுகமின்மை, தே.மு.தி.கவின் ஜின்னாவுக்கு போதிய மக்கள் பலம் இல்லாதது உள்ளிட்ட காரணிகளால் ம.ம.கவின் பக்கம் காற்று சற்று பலமாகவே வீசுகிறது.-இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close