Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஞ்சியில் பட்டு கிரீடம் சூடுமா திமுக?


வாக்காளர்களின் எண்ணிக்கை - 2 96 847

தொகுதி புராணம்


திரும்பிய பக்கமெல்லாம் கோவில்கள் நிறைந்திருக்கும் ஆன்மீக ஸ்தலம் காஞ்சிபுரம் தொகுதி. உலகம் முழுக்க இருக்கிற ஆத்திகர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்நகருக்கு வந்துசென்றிருப்பர். பட்டு உற்பத்தியில் கடல் கடந்த புகழ்கொண்ட நகரம்.  காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், ஏகாம்பர நாதர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் நிறைந்த
இந்த நகரில்தான் காஞ்சியின் புகழ்பெற்ற வரதராஜப்பெருமாள் கோவிலின் சுற்றுப்புறச்சுவரை ஒட்டிய ஒரு ஓட்டுவீட்டில்தான் இந்த மண்ணிற்கு பகுத்தறிவு வண்ணத்தை பூசிய பெரியாரின் அத்யந்த தொண்டரும், தளபதியுமான அண்ணாதுரை பிறந்தார். இப்படி வரலாற்று முரண் கொண்ட  தொகுதி காஞ்சிபுரம்.


தமிழக அரசியலை இன்று நிர்ணயம் செய்யும் இரண்டு பிரதான கட்சிகளின் முன்னோடி அண்ணாதான் என்பது அரசியல் வரலாறு. அந்த வகையில் காஞ்சிபுரம் அரசியலும் ஆன்மிகத்திலும் தவிர்க்கவியலான தொகுதி.

மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கும் காஞ்சி தொகுதியில் நத்தபேட்டை உள்பட 37 ஊராட்சிகள், செவிலிமேடு பேரூராட்சி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சி அமைந்துள்ளன. தொகுதி மக்களில் வன்னியர்கள் 40 சதவீதம், முதலியார் 32 சதவீதம், ஆதிதிராவிடர்கள் 15 சதவீதம், இதரபிரிவினர் 13 சதவீதம் என காஞ்சிபுரம் தொகுதியில் நிறைந்துள்ளனர்.

தொகுதிமக்களின் பிரதான தொழில் பட்டுநெசவு. மொத்த வாக்காளர்களில் காஞ்சியில் உள்ள பிள்ளையார்பாளையம் என்ற பகுதியே வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கும் பகுதி என்பார்கள். கிட்டதட்ட 50 ஆயிரம் நெசவாளர்களை கொண்ட அங்கு 90 சதவீதத்தினர் முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஓட்டு எண்ணிக்கையில் அப்பகுதியில் வாக்கு சதவீதத்தை கணக்கிட்டே வேட்பாளர்கள் மகிழ்வதும் சோர்வடைவதும் நடக்கும்.

 


தொகுதியின் அரசியல் நிலவரம்

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது என திமுக முடிவெடுத்து பங்குபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலான 1957 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1962 ல் காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியாரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதைத்தொடர்ந்து வந்த 2 பொதுத்தேர்தல்களில் தொடர்ந்து திமுக வெற்றி பெற்றது. அதிமுக துவங்கி அது சந்தித்த முதல் பொதுத்தேர்தலான 1977ல் அதிமுக முதன்முறையாக காஞ்சிபுரம் தொகுதியை கைப்பற்றியது (கே.பாலாஜி). தொடர்ந்து 1980 (பி.வெங்கடசுப்பிரமணியம்) மற்றும் 1984  தேர்தலிலும் (மீண்டும் கே.பாலாஜி ), அதிமுகவே தொகுதியை தக்கவைத்துக்கொண்டது. அடுத்துவந்த 1989 ல் அதிமுக பிளவினால் குழம்பிய குட்டையில் மீண்டும் மீன் பிடித்தது திமுக. பி.முருகேசன் வென்றார். தொடர்ந்து மீண்டும் 1991 ல் அதிமுக சி.பி.பட்டாபிராமன், 1996 ல் மீண்டும் (திமுக )பி.முருகேசன், 2001  சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசு வென்று அமைச்சராகவும் ஆனார்.


ஆனால் உடல்நலமின்றி அவர் இறந்ததால் 2005 ல் நடந்த இடைத்தேர்தலில் அவரது மனைவி மைதிலி திருநாவுக்கரசுக்கு அதிமுக தலைமை வாய்ப்பளித்தது. அந்த இடைத்தேர்தலில் அதிமுக வென்றது. 2006 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு சக்தி கமலம்மாள் வெற்றி பெற்றார். 2011 ல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரமும், திமுக கூட்டணியில்  மீண்டும் பாமகவிற்கே தொகுதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாகவும்  பாமகவுக்கு ஒதுக்கியதில் திமுகவினரிடையே ஏற்பட்ட சலசலப்பில் மாம்பழத்தை காஞ்சி மக்கள்  சுவைக்க முடியாமல் போய்விட்டது.

 

2016 ல் தோள்தட்டுபவர்கள்

 

சி.விஎம் பி எழிலரசன் (திமுக ) - வழக்கறிஞர் திமுகவின் மாநில மாணவரணி செயலாளர், ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர். நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் கட்சிக்கு அப்பாற்பட்டு எளிய மக்கள் மற்றும் நடுநிலையான மக்களிடையே நற்பெயரை பெற்றவர்.

(+): பொறியியல் பட்டதாரி மற்றும் வழக்கறிஞர் என்பதால் படித்தவர் என்ற இமேஜ் உள்ளது. இளைஞர் என்பது கூடுதல் சிறப்பு. முன்னாள் அமைச்சரும் அண்ணாவின் நெருங்கிய நண்பரான திமுக முன்னோடிகளில் ஒருவரான சி.வி.எம் அண்ணாமலையாரின் பேரன் என்ற பாராம்பரிய பெருமை. ஆனால் யாரிடமும் எளிமையான அணுகுமுறையும் எப்போதும் சிரித்த முகத்துடனும்  பழகுவார் என்பது இவருக்குள்ள இன்னொரு சிறப்பு.

கடந்த 2 தேர்தல்களில் காஞ்சிபுரம் தொகுதி கூட்டணிக்கட்சிகளுக்கே தலைமை ஒதுக்கியதால் அந்த தேர்தல்களில் திமுக கட்சியினர் அதிருப்தியில் களப்பணியில் சுணக்கம் காட்டிவந்தனர். கடந்த கால தோல்விகளுக்கு அது காரணமாகவும் சொல்லப்பட்டது. அண்ணா பிறந்த மண்ணில் 20 வருட இடைவெளிக்கு பிறகு திமுகவிற்கு ஒதுக்கியிருப்பது உடன்பிறப்புகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சியில் கதிரவன் உதித்தால் அது முக்கியமான காரணமாக இது இருக்கும்.

இது ஒருபுறமிருக்க பகுத்தறிவு வழிவந்த திமுகவினரின் இன்னொரு லாஜிக் திகைக்கவைக்கிறது நம்மை. காஞ்சியின் ராசிப்படி கடந்த பொதுத்தேர்தல்களில் நாயக்கர், வன்னியர் சமுதாயத்தினர் மாறிமாறி வந்திருக்கின்றனர். கடந்த முறை முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இம்முறை நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்தான காஞ்சிபுரம் எம்.எல்.ஏ என்று புல்லரிக்கவைக்கின்றனர் தொகுதி உடன்பிறப்புகள்.
 

(-): எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையோ அவ்வளவுக்கு அவ்வளவு சிக்கனமானவர். கட்சிப்பின்னணி குடும்ப பாரம்பரியம், என எத்தனை பிளஸ்கள் இருந்தாலும் கொளுத்தும் கோடை வெயிலில் களப்பணியாற்றுபவர்களை உற்சாகப்படுத்துவதில் சுணக்கம் காட்டுகிறார் என பொருமுகின்றனர் உடன்பிறப்புகள். இருந்தும் கட்சியை விட்டுக்கொடுக்காமல் வியர்வை சிந்துகின்றனர் உடன்பிறப்புகள்.

அதிமுக- மைதிலி திருநாவுக்கரசு

முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.திருநாவுக்கரசுவின் மனைவி. 2005 இடைத்தேர்தலில் திருநாவுக்கரசு மறைவிற்குப்பின் நடந்த இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்றவர். இப்போது காஞ்சிபுரம் நகராட்சித் தலைவர்.

(+): இன்னமும் களத்தில் இருக்கும் கணவரின் ஆதரவாளர்கள், தொகுதியின் பிரதான சமூகத்தை சேர்ந்தவர் ,பெண் வேட்பாளர் என்ற தகுதி. அதிமுக விற்கான கிராமங்களில் உள்ள நிரந்தர ஓட்டு வங்கி
 

(-): நகராட்சி தலைவராக திருப்திகரமான செயல்படாதது, பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்தாதது, சொந்த கட்சியினரிடம் அந்நியமான அணுகுமுறை, பதவியை பயன்படுத்தி கட்சியினருக்கு சலுகைகள் காட்டவில்லை என உள்ளுர் கட்சியினரிடையே உள்ள முனுமுனுப்பு. தேர்தல் செலவிற்கு பணத்தை செலவிடுவதில் சிக்கனம். வெற்றியை நிர்ணயிக்கும் பிள்ளையார்பாளையம் பகுதி மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்துவைத்திருப்பது.

மக்கள்நலக்கூட்டணி- தேமுதிக- ஏகாம்பரம்

வேட்பாளர் ஏகாம்பரம்- விஜயகாந்தின் ஆரம்பகால ரசிகர். தனியார் கூரியர் சேவை நிறுவனம் நடத்துகிறார். கட்சியில் முன்னாள் நகர செயலாளர். 'அவருக்கு பதில் இவர்' என வேட்பாளர் பட்டியலில் சமீபத்தில் இடம்பெற்றவர். ஏற்கனவே 2006 தேர்தலில் காஞ்சியில் களம் கண்ட அனுபவம் பெற்றவர்.

(+): சர்ச்சைகளில் அதிகம் சிக்காதவர். மாவட்ட செயலாளர் அனகை முருகேசனின் தீவிர ஆதரவாளர்.  தொகுதியின் பெரும்பான்மையான முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். எளிமையானவர். செலவு செய்வதில் சுணக்கம் காட்டாதவர். விஜயகாந்தின் ஆரம்பகால தீவிர ரசிகர். மக்கள்நலக் கூட்டணி என்ற பல கட்சிகளின் ஒருங்கிணைவு.

(-): உள்கட்சி குழப்பத்தில் கொஞ்சநாள் முடங்கிடந்தது தொண்டர்களிடையே இடைவெளியை ஏற்படுத்தியிருப்பது. ஏற்கனவே வேட்பளாராக அறிவிக்கப்பட்ட சாட்சி சண்முகசுந்தரம் ஆதரவாளர்களின் எதிர்ப்பு. மாவட்ட செயலாளரின் உள்குத்து என்றே எதிர்ப்பு அணி இதை நினைப்பதால் களத்தில் சுணக்கம் தெரிவது, இதுதவிர தேமுகதிகவிற்கு என்று கடந்தகாலத்தில் பெரிய வாக்குவங்கி உருவாகாமல் இருப்பது. கூட்டணி கட்சியினரை அனுசரித்துச்செல்வதில் சிக்கல்.

பா.ம.க

பெ.மகேஷ்குமார்

 

கட்சியின் மாவட்ட செயலாளர். நடுத்தரவயதினர்

(+): பா.ம.க அரசியல் ஆரம்ப காலத்திலிருந்து செயல்பட்டுவருபவர். கட்சியின் தீவிரப்போராட்டங்களில் ஈடுபட்டும் தான் சார்ந்த சமூகத்தினரிடம் நற்பெயர் பெற்றிருப்பவர். காஞ்சியின் இரண்டாவது பெரிய சமூகத்தைச் சேர்ந்தவர்.

(-): முதன்முறையாக கூட்டணி பலம் இன்றி தனித்துப்போட்டியிடுவது. தீவிர கட்சிப்போராட்டங்களால் நடுநிலைவாக்காளர்களிடையே குறிப்பிட்ட சமூக ஆதரவாளராக அறியப்பட்டிருப்பது. பெரும்பான்மை சமூகமாக இருப்பினும் அவர்கள் திமுக அதிமுக என பிரிவுபட்டுநிற்பது.

பா.ஜ.க -வாசன்

உள்ளுரில் தொழில் செய்தாலும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர். நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
 

(+): மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பது, தமிழகத்தில் பாஜக பொதுவான மக்களிடம் அறியப்பட்டிருப்பது.

(-): தொகுதிக்கு அவ்வளவாக அறிமுகமில்லாதது. சாதி ரீதியாகவும் இங்கு ஆதரவு இல்லாதது. இறக்குமதி வேட்பாளர் என்ற இமேஜ். காஞ்சியில் அவ்வளவாக பாஜகவிற்கு வாக்குவங்கி இல்லாதது, பா.ஜ.க  மாநிலத்தில் வலுவற்ற கட்சியாக இருந்த சமயங்களில் நடந்த சில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக சார்பில் நின்று வெற்றிவாய்ப்பையும் பொருளையும் இழந்தவர் தொகுதியில் அறிமுகமான பெருமாள் என்பவர்.

ஆனால் பாஜக மத்தியிலும் மாநிலத்திலும் வலுவான கட்சியாக ஊன்றியுள்ள இந்நிலையில் அவருக்கு வாய்ப்பை மறுத்து இம்முறை டம்மி வேட்பாளராக  ஆக்கியது. இது உள்கட்சிப் பூசலை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனுத் தாக்கலின்போது இரு அணியினரிடையே பிரச்னை உருவானது சகுனம் சரியில்லையே என கட்சியினரை புலம்பவைத்தது.

மொத்தத்தில் வெற்றி வாய்ப்பு

6 பிரதான கட்சிகள் களம் கண்டாலும் இங்கு அதிமுக , திமுக இரண்டும் சாதக பாதகங்களுடன் சம பலத்தில் உள்ளன. ஆனால் இப்போதைக்கு சில சில பாதகமான விஷயங்களை சரிசெய்துகொண்டால் திமுவிற்கு இங்கு வாய்ப்பு கிடைக்கலாம். சொந்த கட்சியினரின் ஒத்துழைப்பின்மை, கட்சியின் நிர்வாகிகள் மட்டத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது, நகராட்சி தலைவராக கடந்த காலத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாதது போன்றவை அதிமுக வேட்பாளரால் அவ்வளவு எளிதாக சரிசெய்துகொள்ளும் விஷயங்களாக தெரியவில்லை. அதற்கான நேரமும் தற்போது இல்லை. அண்ணா பிறந்த காஞ்சியில் மீண்டும் கதிரவன் உதிக்கலாம்.

- எஸ்.கிருபாகரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ