Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செய்யாற்றில் மீண்டும் துளிர் விடுமா இலை!

 
வாக்காளர்களின் எண்ணிக்கை
 

 

 

தொகுதி புராணம்:  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தஞ்சாவுருக்கு அடுத்தபடியாக நெல் சாகுபடி அதிகம் செய்யப்படும் இடம்.
 

வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் முக்கிய தொழில்களாக விளங்கும் செய்யாறு தொகுதி செழிப்பான கிராமங்களால் சூழப்பட்ட நகரம். முக்கிய வேளாண் நகரமாக விளங்கிய செய்யாறு, 2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மிக பெரிய தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தொகுதியின் சுமார் 25 ஆயிரம் பேர் இங்குள்ள தொழில்நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
 

வன்னியர் பிரதானமாக 60 சதவீதமும் அதற்கு அடுத்த இடத்தில் 20 முதல் 25 சதவீதம் முதலியார் சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டவர்கள் 15 சதவீதம் மற்றும் இதர சமூகத்தினர் 5 சதவீதம் என செய்யாறு தொகுதியின் மக்கள் தொகை உள்ளது.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் கீழ் செய்யாறுக்கு - காஞ்சிபுரம் சந்திப்பான மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யாறு தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருபெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை தவிர்க்கும் வகையில் மாற்று இடமாக செய்யாறு தேர்ந்தெடுக்கப்பட்டு கிடுகிடு வளர்ச்சி பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி தானியங்கி உதிரிபாகங்கள், கார் தொழிற்சாலைகள், எலெக்ட்ரானிக் தொழிற்சாலைகளும் அமைவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இப்பகுதி மக்களின் வேலைவாய்ப்பின்மை இந்த நிறுவனங்கள் ஈடுகட்டும் என நம்பலாம்.


அண்ணாவின் காலத்தில் புலவர் கோவிந்தனால் திமுகவின் கோட்டை என்று சொல்லும்படி இருந்தது. அதிமுக தலையெடுத்தபின் முன்னும் பின்னுமாகத்தான் இந்த புகழை திமுக தக்கவைக்க முடிந்தது.

கடந்த தேர்தல்கள் ஒரு பார்வை

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் இத்தொகுதியில் வெற்றிபெற்றது  பொதுநலக்கட்சி சார்பில் போட்டியிட்ட தருமலிங்க நாயக்கர் காங்கிரஸ் வேட்பாளரை வென்றார். 1957 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பி.ராமச்சந்திரன் வென்றார். அதன்பின் நடந்த 5 சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுகவே செய்யாறு தொகுதியை தக்கவைத்துக்கொண்டது. இதில் 5 வது நடந்த தேர்தல் தவிர்த்து அனைத்திலும் வேட்பாளர் அண்ணாவின் நண்பரும்,  தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவருமான புலவர் கோவிந்தன்.  திமுகவின் அசைக்கமுடியாத கோட்டையாக செய்யாறு இருந்தது அக்காலத்தில். அதிமுக உருவாக்கத்திற்குப்பின்னும் எம்.ஜி.ஆரின் கவர்ச்சி தமிழகமெங்கும் வெற்றியை குவித்தபோது செய்யாறு மட்டும் கறுப்பு சிவப்புக்கு நடுவே அத்தனை எளிதாக வெள்ளையை நுழைய விடவில்லை.
 

 

முதன்முறையாக எம்.ஜி.ஆரின் உடல்நிலை பாதித்த 1984 தேர்தலில் சென்டிமெண்ட் வேலை செய்தது. அதிமுக முதன்முறையாக வென்றது. 1989 ல் மீண்டும் திமுக வேட்பாளர் வி.அன்பழகன் வென்றார். 91 ல் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட தேவராஜ் போட்டியிட்டார். 1996 ல் நடந்த தேர்தலில் திமுக மீண்டும் வென்றது. இருபெருங்கட்சிகளான திமுக அதிமுக நேரடியாக இந்த தொகுதியில் மோதியது அதுவே கடைசி தடவை.

அதன்பின் திமுக தங்கள் கூட்டணிக்கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கிவிட்டு ஒதுங்கிவிட்டது. 2001 ல்  அதிமுக கூட்டணியிவ் பாமக வேட்பாளர் உலகரட்சகன் வென்றார். 2006 ல் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கியதை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வென்றார். அடு்த்து வந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியத்திடம் விஷ்ணுபிரசாத் தோல்வியை தழுவினார். முக்கூரார் அமைச்சராகவும் ஆனார்.

செய்யாறு பிரச்னைகள்

இப்போதைய வேட்பாளர்களின் பிளஸ் மைனஸ்கள்

அதிமுக -  துாசி மோகன்
 

சொந்த ஊரை் வெம்பாக்கம். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். தற்போது கட்சியில் வெம்பாக்கம் ஒன்றிய செயலாளராக உள்ளார். வெம்பாக்கம் ஒன்றிய குழு துணைதலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான முக்கூர் சுப்ரமணியத்திற்கு இங்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதே அதிமுகவின் முதல்வெற்றியாக பார்க்கப்படுகிறது.

(+):

நடுத்தரவயது. கட்சியில் எல்லோரையும் அனுசரித்துச் செல்லும் இயல்பு. தொணடர்களிடம் அணுகுமுறையில் சிட்டிங் எம்எல்ஏ சுப்ரமணியத்தைப்போலல்லாமல் எளிமையானவர் என்பதால் தொண்டர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின் முக்கூர் சுப்ரமணியத்திடம் வருத்தத்தில் இருந்த நிர்வாகிகள் இவருடன் கைகோர்த்திருப்பது இவருக்கு சாதகமான விஷயம்.
 

(-):
 

கட்சியினர் மத்தியில் அவ்வளவாக அதிருப்தியான குரல் இல்லாததால் இவருக்கு மைனஸ் என்பது குறைவே. இதுவரை விஐபிக்கள் மற்றும் ஸ்டார் பேச்சாளர்கள் பிரசாரத்திற்காக தொகுதியை எட்டிப்பார்க்காதது மட்டுமே குறை. இந்தகவலை வேட்பாளரை விட மற்ற நிர்வாகிகளிடம் அதிகம் தென்படுகிறது.

திமுக கூட்டணி (காங்கிரஸ்) எம்.கே. விஷ்ணுபிரசாத்
 

முன்னாள் காங்கிரஸ் தலைவரின் மகனான விஷ்ணுபிரசாத் இங்கு திமுக கூட்டணி சார்பில் இங்கு களம்காண்கிறார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் சம்பந்தி மகன். ஏற்கனவே கடந்த 2006 -2011 ல் இத்தொகுதியின் எம்.எல்.ஏ இவர். ஆனால் 2011 ல் அதிமுக முக்கூர் சுப்ரமணியத்திடம் தோல்வியை தழுவினார். 3 வது முறையாக இவருக்கே மீண்டும் சீட் வழங்கப்பட்டுளளது.
 

(+):
 

காங்கிரஸ் மூத்த தலைவரின் மகன் என்பது கொஞ்சம் சாதகம். தொண்டர்களை 'குளிர்விப்பதில்' தயக்கம் காட்டாதவர்.
 

(-):
 

2006 ல் சரியாக திட்டங்களை செயல்படுத்தவில்லை என்ற அதிருப்தி, தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே தொகுதி ஒதுக்கப்படுவதில் திமுகவினர் மத்தியில் அதிருப்தி காணப்படுகிறது. கடந்த தடவைகள் அதிருப்தியாக மட்டுமே வெளிப்பட்ட ரியாக்ஷன் இந்த முறை பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த 25 ந்தேதி வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ வேலுவின் வாகனத்தை தாக்கும் அளவு தொண்டர்களின் கோபம் இந்த முறை வெடித்தது. கூட்டத்தில் செருப்பு வீசும் அளவு போனதில் எ.வவேலு அப்செட். இதனால் இம்முறை திமுகவினரின் ஒத்துழைப்பு காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைப்பது கஸ்டம்தான் என்கிறார்கள்.
 

பாமக- அன்னை சீனிவாசன்;
 

இளைஞர், வந்தவாசி நகராட்சி தலைவராக பணியாற்றிவர்.
 

(+):
 

இளைஞர் , பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது சாதகமான விஷயம். இளைஞர்களை ஈர்க்கும் வகையில் 'சப்போர்ட் சீனிவாசன்' ஹேஷ்டேக் ஃபேஸ்புக் பக்கம், என இளைஞர்களை கவரும்வகையில் பிரசாரம் செய்வது, ராமதாஸ் பிரசாரத்திற்கு வந்துசென்றது.
 

(-):
 

செய்யாறு தொகுதிக்குள் வீடு இருந்தாலும் தொகுதிக்கு புதியவர். வன்னியர் என்பது பலம் மட்டுமல்ல, பலவீனமும் அதுதான். பெரும்பாலும் வேட்பாளர்கள் வன்னியர்கள் என்பதால் ஓட்டுக்கள் சிதறும் வாய்ப்பு உள்ளது. பிரதான கட்சிகளின் ஆதரவின்றி தனித்துப்போட்டியிடும் சூழல். இதுமட்டுமின்றி வேறொரு விவகாரமும் பாமக விஷயத்தில் இறக்கை கட்டிபறக்கிறது.

ராமதாஸ், கிருஷ்ணசாமி இருவருக்குமிடையேயான குடும்ப உறவில் உள்ளூர் பா.ம.க. தொண்டர்கள் யாருக்கு வேலை செய்வது என்கிறது குழப்பத்தில் தவிப்பதாக தகவல்


அதாவது 2006 மற்றும் 2011-ல் சட்டமன்றத்தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் பாமக இடம் பெற்றிருந்தது. அதனால், 2 தேர்தல்களிலும் செய்யாறு தொகுதியில் போட்டியிட்ட விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து பாமகவினர் பணியாற்றினர். அதற்கு, பாமக தலைமை கிரீன் சிக்னல் கொடுத்தது.


அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்ற 2009- நாடாளுமன்றத் தேர்தலிலும் இப்படி பாமகவினர் பணியாற்றினர். அப்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய வந்தவாசி நாடாளுமன்றத் தொகுதி யில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக பாமக நிறுவனர் ராமதாஸின் சம்பந்தியும், அன்புமணியின் மாமனாருமான தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.
அவருக்கு ஆதரவாக, பாமக செயல்பட்டதாக தகவல் வெளியானது. இது அதிமுக தலைமையை கொதிப்பை ஏற்படுத்த அதன் எதிரொலியாக அந்த தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெறவில்லை. அதன் பின்னணியில் அதிமுக தலைமை இருந்ததாக பாமகவினர் புலம்பினர். அதேபோல், வந்தவாசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட என்.சுப்ரமணியன், 1 லட்சத்து 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால், பழைய மன ஓட்டத்திலேயே தற்போதும் பாமக வினர் உள்ளதாக கூறப்படுகிறது. உறவை காக்க பாமக வேட்பாளரை சொந்தக்கட்சியினர் பலிகொடுத்திடுவார்களோ என்ற பீதியில் உள்ளது வேட்பாளர் தரப்பு.
 

மக்கள்நலக் கூட்டணி- தேமுதிக டி.பி சரவணன்
 

இளைஞர், வழக்கறிஞர் அகமுடைய முதலியார் வகுப்பை சேர்ந்தவர்.
 

(+):
 

மக்கள் நலக் கூட்டணி, தொகுதியின் இரண்டாவது பிரதான சமுதாயமான முதலியார்  சமூக ஓட்டுக்கள், கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றிருப்பதாலும் வன்னியர் அல்லாத வேட்பாளர் என்பதாலும் தாழ்த்தப்பட்டவர்கள் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கலாம்.  விஜயகாந்த் கட்சியினர் படு உற்சாகமாக தேர்தல் பணியில் இறங்கியிருப்பது எதிர்க்கட்சியினரை கலக்கம் அடைய வைத்துள்ளது.
 

(-):
 

பிரபலமான வழக்கறிஞர் அல்ல, தொகுதிக்கும் அறிமுகமானவர் அல்ல, இதுவரை விஐபிக்கள் பிரசாரம் செய்யாதது.
 

பாஜக பி.பாஸ்கர்
 

 

தொகுதிக்கு புதியவர், சொந்த ஊர் வந்தவாசி. செய்யாறில் கட்சி அமைப்பு ரீதியாக வளர்ந்திருக்கவில்லை. தொண்டர்கள் பலமும் இல்லை.
 

நாம் தமிழர்- எஸ்.ராஜேஸ்
 

நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டசெயலாளர். சொந்த ஊர் பெரணமல்லுார் அடுத்த கட்டாப்பாக்கம்.  அதிகம்....வேட்புமனுவுக்காக தொகுதி வந்ததோடு சரி...இதுவரை பத்திரிக்கையாளர்கள் கண்ணிலேயே வேட்பாளர் தென்பட்டதில்லை என்கிறார்கள். பிரசாரத்திற்காக யாரும் அவருக்காக வந்ததில்லை.
 


வெற்றி வாய்ப்பு
 

தொகுதியில் நேரடியான போட்டி என்பது அதிமுகவிற்கும், காங்கிரசுக்கும் மட்டுமானதாக இப்போதைக்கு உள்ளது. தொகுதி கிடைக்காத கொதிப்பில் திமுகவினர் பிரசார பணிகளில் சுணக்கம் காட்டுவது, எந்த சிக்கலுமின்றி அதிமுகவினர் பிரசாரப்பணிகளில் ஈடுபட்டுவருவது, கடந்த காலத்தில் முக்கூர் சுப்ரமணியன் நிறைவேற்றிய சில நலத்திட்டப்பணிகள் குறிப்பாக காழியூரில் 16 கோடி செலவில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணி, செய்யாறு அரசுமருத்துவமனையை தலைமை அந்தஸ்து பெற்றுக்கொடுத்தது, செய்யாறு அரசு கலைக்கல்லுாரியில் முனைவர் பட்டப்படிப்பு வரை பல துறைகளில் கொண்டுவந்தது நெடுஞ்சாலைதுறை கோட்ட அலுவலகம், ஆர்.டி.ஓ அலுவலகம் கொண்டுவந்ததுவரை திருப்திகரமாக செய்யப்பட்டிருப்பது சாதகமான விஷயங்களாக அதிமுகவிற்கு உள்ளது. ராமதாஸிடம் சம்பந்தி பாசம் மேலோங்கினாலோ, திமுக தலைமையின் நெருக்கடியால் உணர்வுப்புர்வ காங்கிரஸ் வேட்பாளருக்கு கிட்டினாலோ, விஷ்ணுபிரசாத் வின் பிரசாத் ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம். காரணம் கடந்த தேர்தலில் முக்கூர் சுப்ரமணியத்திடம் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாய்ப்பை இழந்தவர் விஷ்ணுபிரசாத். விஷ்ணுபிரசாத்தை வின் பிரசாத் ஆக்கும் அற்புதத்தை நிகழ்த்தப்போகும் அந்த மந்திரக்கோல் யாரிடம் உள்ளது? திமுகவிடமா அல்லது பாமக ராமதாஸிடமா என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரலாம். ரேசில் முந்திக்கொண்டிருப்பது அதிமுக தான்.


 - எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close