Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவை தோற்கடிக்கத் துடிக்கும் சுயேச்சை வேட்பாளர்!

திருப்பதி: தமிழக் முதல்வர் ஜெயலலிதாவை தோற்கடிப்பதே எனது குறிக்கோள் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் ஜெகதீஸ்வர ராவ் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் ஜெகதீஸ்வர ராவ். இவர், திருப்பதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ''ஜெயலலிதாவின் தீவிர தொண்டனான நான் திருப்பதியில் அவரது பிறந்த நாளின்போது கட் அவுட் வைத்தேன். அவர் சிறையில் இருந்தபோது, விடுதலையாக வேண்டி திருச்சானூரில் அங்கப்பிரதட்சணம், யாகம் எல்லாம் செய்தேன்.

ஆனால், அவர் தெலுங்கு மொழியை அவமதித்ததால் நான் அ.தி.மு.க.வில் இருந்து விலகினேன். தற்போது, ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.

தமிழகத்தில் தெலுங்கு மொழிக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை முதல்வர் ஜெயலலிதா பறித்துவிட்டார். அவர் போட்டியிடும் ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் சுமார் 1.20 லட்சம் தெலுங்கர்கள் வசிக்கின்றனர்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டது. ஆனாலும் தெலுங்கில் தேர்வு எழுத அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தெலுங்கு மொழி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. தெலுங்கர்களின் மனதை நோகடித்த ஜெயலலிதாவை தோற்கடிப்பதே எனது குறிக்கோள். அதனால் ஆர்.கே.நகர் தொகுதியிலும், ஓசூரிலும் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ