Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நமீதா பிரசாரத்துக்கு ஏன் போகவில்லை? விளக்கம் கொடுக்கும் ர.ர.க்கள்!

 

அண்மையில் அதிமுகவில் இணைக்கப்பட்ட  நடிகை நமீதாவுக்கு  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. நமீதாவை பிரசாரத்துக்கும், பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கும் ஒப்பந்தம் செய்ய அதிமுக தலைமையை கட்சியினர் அணுகிய போது தான் இது தெரிய வந்துள்ளது.

நமீதாவை பிரசாரத்துக்கு  'புக் ' செய்ய தலைமைக்குப் போய்  நமீதா பிரசார பேச்சாளர் லிஸ்ட்டில் இல்லை என்பதை அறிந்து வருத்தத்துடன் திரும்பிய ர.ர.க்கள் சிலரிடம் கேட்டதிலிருந்து...

''நம்ம கட்சியில், அதுவும் அம்மா முன்னாலயே  அடிப்படை உறுப்பினரா சேர்த்துக் கொண்ட பின்னரும், 'நீங்க  அதுக்கெல்லாம்  சரிப்பட்டு வரமாட்டீங்க ' என்பது போல காத்திருப்போர் லிஸ்ட்டில் அவரை வைத்திருப்பது சரியல்ல. வாசுகி, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு, குயிலி, விந்தியா, ஆர்த்தி போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய வெகு சிலரே பிரசார லிஸ்ட்டில் உள்ளனர்.  நடிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும் நடிகைகளுக்கு இருக்கும் மவுசு அதிகம். அந்த வகையில் கடந்த இரண்டு மாதமாக நடிகை விந்தியாவின் 'டேட் '  ரொம்ப பிசி.


2006- சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு முதலில் அதிமுகவுக்குள் வந்து சேர்ந்தது நடிகை சிம்ரன்தான். அவருக்குப் பின்னால்தான் விந்தியா வந்தார். சிம்ரனுக்கு திருமணம் ஆனதும் அப்படியே ஒதுங்கிக் கொண்டார்.  2011- தேர்தல் பிரசாரத்துக்கு சிம்ரன் போகவில்லை. ஆனால், விந்தியா தமிழ்நாடு முழுவதும் கட்சிக்காக பிரசார டூர் போனார். எல்லா மாவட்டத்திலும் விந்தியாதான் இப்போது ஸ்டார் பேச்சாளர். அதனால் டிமாண்ட் அதிகம். இந்த சூழ்நிலையில்தான்  எங்களுக்கு அபூர்வமாக நமீதா கிடைத்திருக்கிறார். அவரை பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொண்டால் கிராமங்களில் நல்ல கூட்டம் சேரும்.

ஆனால்,  34 பேரைக் கொண்ட சினிமா நடிகர்கள் பிரசார லிஸ்ட்டில் நமீதா பேரே இல்லை என்று தலைமையில் சொல்கிறார்கள், இதற்கு மேல்  நாங்கள் என்ன செய்வது '' என்றனர், வருத்தம் குறையாமல். நமீதாவை அண்மையில் அடிப்படை உறுப்பினராக அதிமுகவில் சேர்த்துக் கொண்டதும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு குஷ்பு கிடைத்தது போல, அதிமுகவுக்கு நமீதா கிடைத்து விட்டார் என்று தொண்டர்கள் மத்தியில் ஒருவித உற்சாக மனநிலை காணப்பட்டது.

கார்டனுக்கு கடிதம் கொடுத்த இரண்டே நாளில்  கட்சியின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா நமீதாவை சேர்த்துக் கொண்டார் என்று தகவல்கள் பரவியது. ஆனால், நமீதாவுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் ஜெயலலிதா  என்ட்ரி கொடுத்து விடவில்லை என்பதை இப்போது சொல்கிறார்கள், அதுவும் சென்டிமென்ட்டாக.

அது என்ன ? கேட்டேன்... 
 ''2006-ல் கட்சியில் சேர்ந்த சிம்ரன்,  2011-ல் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்ட பின் அந்த இடம் வெற்றிடமாக இருந்தது. அந்த சமயத்தில்தன் அதிமுகவில் சேர   நமீதா கடிதம் கொடுத்தார். அப்போது நமீதா கொடுத்த கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது. ஆனால், சிம்ரனும், விந்தியாவும் கட்சியில் சேர்க்கச் சொல்லி கொடுத்திருந்த   கடிதம் தமிழில் இருந்தது.


 அடுத்து வந்த லோக்கல் பாடி (உள்ளாட்சி மன்றத் தேர்தல்) சமயத்திலும், அதற்கடுத்து வந்த எம்.பி. தேர்தல் நேரத்திலும் கட்சியில் சேர்க்கச் சொல்லி  விடாமல்  சேஸிங் செய்து நமீதா கடிதம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அதுவும் ஆங்கிலத்தில்தான் இருந்தது.


இப்போது 2016-ல் நமீதா கொடுத்த கடிதம்தான் தமிழில் இருந்தது. அதனால்தான் கட்சியில் சேர்க்கச் சொல்லி தாயுள்ளத்துடன் அம்மா அனுமதி கொடுத்தார். நம்ம கட்சியில சேருவதற்கு இப்படிப்பட்ட அடிப்படை விஷயங்கள் நிறைய இருக்கிறது'' என்று நீளமாக அவர்கள் கொடுத்த விளக்கம் நமக்கு புதிய தகவல்தான்.

பேச்சாளர் லிஸ்ட்டில் அவர் பெயரை சேர்க்காமல் விட்டதுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்க நினைத்தேன். ஏற்கனவே மூன்றுமுறை கொடுத்த கடிதங்கள் ஆங்கிலத்தில் இருந்ததற்கான தண்டனைதான் அது என்று பதில் சொல்வார்களோ என்ற எண்ணத்தில் அந்தக் கேள்வியையே கேட்க வில்லை.

ந.பா.சேதுராமன்    
                                                         


 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ