Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

' தேர்தல் வேலை என்பது எங்களை கொல்லவா?' - கொதிக்கும் மாநகராட்சி ஊழியர்கள்...

" பிரசாரக் கூட்டங்களுக்குப் போய்தான் சுருண்டு விழுந்து சாகணும்னு இல்லைங்க, எலெக்‌ஷன் வொர்க் பார்த்தாலும் நாங்க சாகத்தான் வேணும்..." என்ற பரிதாபக் குரல்கள் சென்னை மாநகராட்சி ஏரியாவில்  கேட்கிறது.

" தம்பீ, நீங்க பேப்பர் காரங்க. எங்க குறையைக் கேட்டு நியூஸ் போட வந்திருக்கீங்க.  உங்களுக்கு எட்டுமணி நேரமோ, பத்து மணி நேரமோ டியூட்டி. வீட்டுல இருந்து சாப்பாட்டை கையோடு கொண்டு வந்துடப் போறீங்க.

உங்களையே காலங்காத்தாலே நாலு மணிக்கெல்லாம் உங்க வீட்ல இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி இருக்குற இடத்துக்கு நீங்க போகணும்னு சொன்னா, அப்ப சாப்புடற டிபனுக்கும், டீ- காபிக்கும் பணத்தை உங்க கையிலயிருந்து போட்டு நீங்க கொடுப்பீங்களா, உங்க ஆபீசுல கொடுப்பாங்களா?"

'ஆபீசில இதையெல்லாம் கேட்டுக் கிட்டு இருக்க மாட்டேன் பெரியவரே. நானே போட்டு செலவு பண்ணிடுவேன். வேலையை முடிச்சுட்டு ஆபீசுக்கு வந்து ஆன செலவை எழுதிக் கொடுத்ததுமே பில் கிளியராகிடும் ' -இது நான்.


நான் இப்படி பதிலை சொன்னதும் முதலில் பேசியவரை  பதிலளிக்க விடாமல், அடுத்தவர் குறுக்கிட்டு பேச ஆரம்பித்தார்.

" சென்னை மாநகராட்சியில் மெக்கானிக்கல், சிவில், கன்சூரன்சு, டெக்னிக்கல், எலெக்ட்ரிகல் னு நிறைய டிபார்ட்மெண்ட் இருக்குதுங்க. கன்சூரன்சுன்னா, துப்புரவு வேலை பாக்கறவங்க. நான் அதைத்தான் பாக்கறேன்.


இன்னைக்கு என்னை கொடுங்கையூர் ஏரியாவுக்கு, அதுவும் காலையில நாலரை மணிக்கு வரச் சொல்லி எங்க ஜே.ஈ (அதிகாரி) வரச் சொல்லிட்டாரு. என் வீடு  துரைப்பாக்கம் பக்கத்துல கண்ணகிநகர்ல இந்தப் பக்கமா இருக்கு.

நான் காலையில் மூணு மணிக்கு எழுந்து ஷேர் ஆட்டோ புடிச்சு, பிராட்வே வந்து, அங்கிருந்து பஸ் ஏறி சொன்ன நேரத்துக்கு கொடுங்கையூர் போயிட்டேன்.   

'எலெக்‌ஷன் ஆபீசருங்க வர்றாங்க. இடத்தை பக்காவா சுத்தமாக்கிடணும் 'னு எங்க மேலதிகாரி சொன்னாரு. என்னைப் போலவே அங்கே ஏழெட்டு பேரு வந்திருந்தாங்க, எல்லாம் வேற வேற ஏரியா ஆட்கள்.

வழக்கமா நாங்க டூட்டிக்கு போவதென்றால், எங்களுக்கு ஷிப்ட் கணக்குத் தெரியும். வீட்டில் இருந்து சாப்பாட்டைக் கொண்டு போயிடுவோம். அவசரப்பட்டு இப்படி ஓடி வரமாட்டோம். அது எங்க அன்றாட வேலை. எலெக்‌ஷன் நேரத்துல எப்பவுமே வேலை அதிகம் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.
நாங்க வேலையைப் பார்த்து பயப்படலை. 

ஆனா, நாளைக்கு காலையில எந்த இடத்தில் வேலை செய்யணும் என்பதை இன்று இரவு வரை சொல்வதில்லை. நடு ராத்திரியில் போனைப் போட்டு எழுப்பித்தான் சொல்வாங்க. கேட்டால்  ' எலெக்‌ஷன் நேரம்னா அப்படித்தான் இருக்கும். வர்றீயா, இல்லைன்னா, ஆப்சென்ட் போட்டுடவான்னு ' மிரட்டுவாங்க.

சொன்ன நேரத்துக்கு வேலைக்கு  வந்தாலும் நம்ம கைக்காசைப் போட்டுத்தான் சாப்பிடணும். அதுவும் முதல் முறையா இந்த தேர்தலில்தான் அதை அமல் படுத்தியிருக்காங்க, சைலண்டா. அதை ஓப்பனா அறிவிச்சுட்டா எங்களுக்கு மனசு நிம்மதியாகிடும். அப்படி அவங்களால அறிவிக்க முடியுமா?


போன தேர்தல் வரையில்  மெக்கானிகல், சிவில், கன்சூரன்சு, டெக்னிக்கல், எலெக்ட்ரிகல்னு அத்தனை  துறைக்கும் சாப்பாடு, டிபன், டீ, காபின்னு எல்லாமே வந்து கொண்டுதான் இருந்தது. அந்தந்த துறையில் உள்ள பொறியாளர், தலைமைப் பொறியாளர், துணை, உதவி பொறியாளர்கள், இதே போல் சுகாதாரத் துறையில் உள்ள ஒவ்வொரு அதிகாரிகள் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.


தேர்தல் ஆணையம் அவர்களுக்கு, அதாவது அவர்கள் கொடுக்கும் பில்லுக்கு பணத்தைக் கொடுத்து விடும். இது சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் அத்தனை பேருக்கும் தெரியும். நாங்களும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, ' அய்யா, சாப்பாட்டுக்கும், டீ- காபிக்கும் ஏதாவது வழி பண்ணுங்கய்யா' ன்னு வாய் விட்டே கேட்டுட்டோம். 


அவங்களோ, 'அந்த செலவை நாங்க யார் கிட்டே போய் வாங்கறது?'ன்னு கேட்கறாங்க.  'இதுவரை நீங்க எப்படி  வாங்குனீங்களோ, அப்படித்தானே இந்த முறையும் வாங்கணும், அதை எங்ககிட்டே வந்து கேட்டால் எப்படி?' ன்னு எங்களால் கேட்க முடியாதுங்க. நாங்க கூலிகள். பழி வாங்கப்பட்டு விடுவோம். நீங்க தாங்க இதை அதிகாரிங்கக்கிட்ட எழுதணும்" என்றார், கதறலாக.


சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டேன். " சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இதுதான் நிலைமை. கடைநிலை ஊழியர்களின் தயவு இல்லாமல்  மின்சாரத் தடையின் போது  ஒரு ப்யூஸ் வயரை கூட  மாட்ட முடியாது.

சாப்பாட்டை விடுங்கள். அவர்களுக்கு குடிநீர் வசதி கூட செய்து தரப்படவில்லை. இதுதான் உண்மை. நாங்களும் அவர்களை அதிகாரத்துடன் தேர்தல் நேர அவசரப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவதில்லை. நாங்களும் எங்கள் கைப்பணத்தை போட்டு அவர்களுக்கு கடந்த காலங்களில் செய்து கொடுத்தது போல இப்போது செய்து கொடுக்க முடியவில்லை என்பது உண்மைதான்.


எங்கள் கைகளுக்கு பணம் வந்து விட்டது என்பதோ, நாங்கள்தான் பில் பாஸ் செய்யாமல் இருக்கிறோம் என்பதோ உண்மையல்ல. பில்லைக் கொண்டு போய் எங்கே கொடுப்பது, எப்படி க்ளியர் செய்வது என்பதில் எங்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கிறது.

வெளிப்படையாக சில விஷயங்களைச் சொல்ல முடியாது. ஒரு வரியில் சொல்வதென்றால், மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக எங்கள் மீதுதான் கோபமாக இருக்கிறார்கள்.  அது இப்போது எதிரொலிக்கிறதோ, இல்லையோ தேர்தலுக்குப் பின் கண்டிப்பாக எதிரொலிக்கும். பெரிய அளவில் அது பாதிப்பை ஏற்படுத்தத்தான் போகிறது... இன்னும் சொல்வதென்றால்,  இந்தமுறை அவர்களுக்கு ஓவர் டைம் டியூட்டி கணக்கும் இல்லை" என்றனர், அவர்கள் தரப்பு பதிலாக...


சென்னை மாநகராட்சியின் ஆணையர், மேயர் உள்ளிட்ட  துறை அதிகாரிகள் அனைவருக்குமான பெரிய அதிகாரி,  தமிழக தேர்தல் ஆணைய உயரதிகாரியாக உள்ள ராஜேஷ் லக்கானிதான். அவர்தான் இதற்கான பதிலை சொல்ல வேண்டும்.


சொல்வீர்களா லக்கானி சார் ?  


-ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close