Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

துண்டுப் பிரசுரங்களுக்கு ஜெ. தடை! தொகுதிகளுக்கு பார்சலாகும் அதிமுக தேர்தல் அறிக்கை...!

மீண்டும் கோட்டைக்குள் நாங்கள்தான் கொடியேற்றி, கோலோச்சுவோம் என்று அதிமுக தொண்டர்கள் புது தெம்புடன் உலா வருவதை கடந்த சில நாட்களாக பார்க்க முடிகிறது.

அதிமுகவின் தலைமைக் கழகமான அவ்வை சண்முகம் சாலையில் கூட்டம் நிரம்பி வழிகிறது. போன வாரங்களில் காணப்பட்ட இருண்ட முகங்களைத் தொலைத்து விட்டு.  பவுர்ணமியாய் கண்ணில் ஒளி தெரிய வலம் வருகிறார்கள்...

ஏன் இந்த மாற்றம்...  யாருக்கு ஏமாற்றம் ? எப்போதும் சந்திக்கும் சில முகங்கள் தவிர்த்து சில புதுமுகங்களை கார்டன், தலைமை அலுவலகம், புறநகர்களான ஆலந்தூர், மணலி பகுதிகளில் சந்தித்தேன். அவர்களின் புது தெம்பிற்கான காரணங்கள் அவர்கள் குரலிலேயே இங்கே....


" அம்மாவைப் பொறுத்தவரை  அமாவாசை நேரங்களில்தான் மந்திரி, மாவட்டம்னு கட்சிப் போஸ்டிங்கில் இருந்து ஆட்களைத் தூக்குவாங்க. அதாவது கட்சிக்கு நல்லதையும், கெட்டவங்களுக்கு கெட்டதையும் செய்வாங்க.

மக்களுக்கு நல்லதைச் செய்யணும்னா, அமாவாசைக்கு முதல்நாள்தான் செய்வாங்க. அந்த மாதிரிதான் இந்த முறை தேர்தல் அறிக்கையைக் கொடுத்து மக்களுக்கு நல்லதை செய்திருக்காங்க.
இனிமேல் எங்கள் தேர்தல் அறிக்கைதான் நாட்டின் ஹீரோ, அது இதுன்னு பேசிக்கிட்டு திமுகவுல யாரும் சுத்தமுடியாது. அந்தளவுக்கு அம்மா, தேர்தல் அறிக்கையில் வெளுத்து வாங்கியிருக்காங்க.


பென்சன் ஸ்கீம், விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி போன்ற பல விஷயங்கள் கருணாநிதி கட்சியில இருந்து முன்னாடியே அறிவிச்சதாச்சே என்று ஈகோ பார்க்காமல், அவைகளையும் தேர்தல் அறிக்கையில் அம்மா சேர்த்துப் போட்டு கொடுத்தாங்க பாருங்க, ஒரு பன்ச்... அங்கதான் எங்கம்மா நிக்கறாங்க.


இரண்டு நாட்கள் முன்புவரை, நம்ம தேர்தல் அறிக்கையை இதுவரைக்கும் அம்மா விடலையே... என்ன பண்றதுன்னு  திரு திருன்னு முழிச்சுக்கிட்டுதான் இருந்தோம்.


இப்போ, அப்படியே மொத்தக் கதையும் மாறிப்போச்சு. கருணாநிதி கட்சியிலயும், மக்கள் நலக் கூட்டணி  ஏரியாவிலயும் சத்தத்தையே காணோம். இனிமேல் பாருங்க, எங்க பிரசாரத்தையும், பூத்-டேபிள் வொர்க்கையும். அடிச்சு தூக்கப் போறோம் பாருங்க தலைவா" என்கின்றனர்.

இதுவரையில் தொகுதியின் பெயர், வேட்பாளரின் (படம் போடாத ) பெயர், இரட்டை இலை சின்னம் இதை மட்டுமே போட்டு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்த அதிமுகவினருக்கு,  இன்று முதல் அதை கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையையே துண்டு பிரசுரமாக்கி, அதை மட்டுமே வீடு வீடாக கொண்டு போய் கொடுத்து வாக்கு சேகரிக்கும்படி தலைமையில் இருந்து அவசரமாக  உத்தரவு போடப்பட்டுள்ளது.

அதற்காக தலைமையில் இருந்து தொகுதி வாரியாக பண்டல்களை பிரித்து கொடுத்தனுப்பும்  'தேர்தல் அவசரப் பிரிவு' ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொகுதிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தவும், வேலைகளை விரைந்து மேற்கொள்ளவும் ஆட்சிமன்றக் குழு போல ஒரு ஐவர் குழுவை அவசரமாக ஜெயலலிதா நியமித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வரை  தேர்தல் அறிக்கை போஸ்டர் பண்டல்களை அதிமுக தலைமையில் இருந்தே  அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் அதிவேகத்தில் செல்லக் கூடிய தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இனி தேர்தல் அறிக்கைதான் துண்டுப் பிரசுரமா? என்ற கேள்விக்கு, "சட்டமன்றத் தேர்தல் அறிக்கை ஒன்றே ஆட்சியை மாற்றாமல் மீண்டும் அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் சக்தியாக இருக்கும் என்று அம்மா நம்புகிறார்.அம்மாவின் நம்பிக்கையை காப்பாற்ற நாங்கள், ஒட்டு மொத்தமாக தேர்தல் அறிக்கையை முன் வைத்தே பிரச்சாரத்தை மேற்கொள்வோம்" என்று பதிலளிக்கின்றனர்.

- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close