Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.கவின் குறிக்கோள் இதுதான்! -ஜெயலலிதாவின் விளக்கம்

தஞ்சை: அவர்களது ஒரே குறிக்கோள் மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை அபகரித்துவிட வேண்டும் என்பதுதான் என்று தி.மு.க.வை குற்றஞ்சாட்டி, தஞ்சையில் நடைபெற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசும்போது, ''கடந்த தி.மு.க. ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி குறைந்திருந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உணவுதானிய உற்பத்தி 68.46 சதவீதம் அதிகரித்தது. எனது அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்கப்பட்டுள்ளது. தனது சுய நலத்திற்காக விவசாயிகளின் நலனை காவு வாங்கியவர் கருணாநிதி.

மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்ற காலத்தில் கருணாநிதியின் சிந்தனை 2ஜியையே சுற்றி வந்ததால், காவரி மேலாண்மை வாரியம் அமைப்பதை அவர் கைவிட்டார். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது காவிரி டெல்டா பகுதி. இந்த பகுதியின் ஜீவ நாடியாக உள்ளது காவிரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் நமக்குள்ள காவிரி நதிநீர் பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பிரச்னையாகும். இந்த பிரச்னையில் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

டெல்டா விவசாயிகளின் நலனை காவு கொடுத்தவர்தான் கருணாநிதி. டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது தான் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆதரவான ஒப்பந்தம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்தான் கையெழுத்தானது. மீத்தேன் எரிவாயு திட்டம் வளமான டெல்டா பகுதிகளை வறண்ட பாலைவனமாக ஆக்கிவிடும் என்பதால் இதுகுறித்து விரிவாக ஆராய ஒரு குழுவினை நான் அமைத்தேன்.

அந்த குழுவின் அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது என்ற உத்தரவை எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு பிறப்பித்தது. 'கிரேட் எஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற நிறுவனமும் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிவிட்டது. விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் யார் கொண்டு வந்தாலும் அதனை தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் நலன் காப்பது எனது தலைமையிலான அ.தி.மு.க. தான்.

இந்த தஞ்சை மண் தனது பிறந்த இடம் என பெருமை பேசும் கருணாநிதி இந்த தஞ்சை மண்ணுக்கு ஏதாவது செய்தாரா என்றால் எதுவும் இல்லை. தஞ்சை டெல்டா பகுதி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கல்லணை கட்டிய கரிகால் சோழன். அந்த கரிகால் சோழனுக்கு ஒரு நினைவு மண்டபம்கூட கருணாநிதியால் கட்ட இயலவில்லை. 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கரிகால் சோழன் நினைவு மண்டபத்தை அமைத்தது நான் தான். மூச்சுக்கு முன்னூறு முறை தமிழ், தமிழ் என கருணாநிதி சொல்வது வெறும் வேஷம் தான்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க.வினர், பா.ம.க., மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் என பலரும் என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை இதுநாள் வரை சொல்லி வந்தனர். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதும் குறைகள் சொல்வதோடு மட்டுமல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். தற்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டு எங்களது தேர்தல் அறிக்கையை பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இதில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாதவை என இவர்கள் எல்லோரும் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். இந்த அம்மையார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது. அந்த அம்மாவை நம்பி ஏமாந்து போகாதீர்கள் என்று திரும்பத்திரும்பக் கூக்குரல் இடுகின்றனர்.

எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும், அதைப் பற்றி 100 தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி கொடுப்பவள் தான் இந்த ஜெயலலிதா. என்னால் நிறைவேற்ற முடியும் என்றால் தான், நான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.

மக்கள் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் விரோத செயல்களின் உச்சத்திற்கே சென்று இந்த தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திற்கே தி.மு.க. சென்றுள்ளது. இவர்கள் தான் மக்களின் எதிரிகள். அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் அ.தி.மு.க. மற்ற கட்சிகளைப் பார்த்து பயந்து போய் தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை என்று கூறி வந்தவர்கள் தான் இவர்கள். தற்போது அறிக்கை வெளியிட்டவுடன் மீண்டும் அதே கருத்தை தெரிவிக்கிறார்கள். தி.மு.க.வைப் பொறுத்தவரை அவர்களது ஒரே குறிக்கோள் மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை அபகரித்துவிட வேண்டும் என்பது தான். எனவே தான், அவர்கள் தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்ப முயற்சித்து, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பற்றி ஏதேதோ பேசி வருகிறார்கள்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close