Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முன்னாள் முதல்வரை கைது செய்யும் வரை ஓயப் போவதில்லை...!' - ஒரு சாமான்யனின் குரல்

கூடங்குளம், மீத்தேன் மற்றும் நியூட்ரினோவுக்கு எதிராக ஒலித்த அந்த கலகக் குரல் இப்போது மீண்டும் உரக்க ஒலிக்க துவங்கி இருக்கிறது, இம்முறை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பி. பன்னீர் செல்வத்திற்கு எதிராக...

முகிலன் - மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக நடக்கும் அனைத்து போராட்டக் களங்களிலும் இவரை பார்க்கலாம்.  25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக போராட்டக் களத்தில் இயங்கி கொண்டிருப்பவர் முகிலன். அதற்காக பல முறை சிறையும் சென்று இருப்பவர். இம்முறை, 'என்னை கைது செய்யுங்கள் அல்லது ஓபிஎஸ்- ஸை கைது செய்யுங்கள்' என்ற கோஷத்துடன் தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவரிடம் பேசியதிலிருந்து...

ஏன் இந்த போராட்டம்...?

" நியூட்ரினோவிற்கு ஆதரவாக இருக்கும், மணல் கொள்ளையர்களுடன் கூட்டு வைத்திருக்கும் ஓ. பன்னீர் செல்வம், தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், ‘பன்னீர் செல்வத்தை தோற்கடிக்க வேண்டும் ஏன்...? என்ற தலைப்பில் இயற்கை வள பாதுகப்பு கூட்டமைப்பு சார்பாக ஒரு துண்டறிக்கையை தயார் செய்து கடந்த இரண்டு தினங்களாக விநியோகித்து வந்தோம்.  போடி தொகுதிக்கு உட்பட்ட தேனி பழைய, புதிய பேருந்து நிலையம், தேனி கடைத்தெருக்களில் ஓபிஎஸ்-க்கு எதிரான துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்துவிட்டு,  பொட்டிபுரம் பகுதிக்கு செல்ல காத்திருந்தபோது,  போடி காவல்துறை ஆய்வாளர் பா.சேகர், தலைமை காவலர் ஆகியோர் வந்து... 'எவ்வளவு தைரியம் இருந்த இங்க வந்து ஓ.பி.எஸ்-க்கு எதிரா துண்டறிக்கை கொடுப்பீங்க...?' என்று ஆரம்பித்து மிக மோசமான வார்த்தைகளால் எங்களை திட்டி தாக்கினர். நாங்கள் சொல்ல வந்த விளக்கத்தை அவர்கள் காது கொடுத்து கேட்கவில்லை.

எங்கள் அனைவரையும் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையத்திலும் மிக மோசமான வார்த்தைகளில் எங்களை திட்டினர். பின்பு காவல் நிலையத்திற்கு டிஎஸ்பி வந்து, 'உங்கள் மீது சிறு வழக்குதான் பதிந்துள்ளோம்...சொந்த பிணையில் நீங்கள் செல்லலாம்' என்றார். நாங்கள் மறுத்தோம். 'எங்கள் மீது ஏன் வழக்கு பதிந்து இருக்கிறீர்கள். எங்களிடம் தவறுதலாக நடந்து கொண்டது உங்கள் காவல் ஆய்வாளர். அவர் மீது வழக்கு பதியுங்கள். எங்களுக்கு பிணை தேவையில்லை. சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறோம்...'  என்றோம். ஆனால் வலுக்கட்டாயமாக நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, தேனி பேருந்து நிலையம் அருகே விடப்பட்டோம்.

நடந்த சம்பவத்தை ஒரு மனுவாக தயாரித்து, இன்று மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தோம். காவல் ஆய்வாளர் மற்றும் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆனால், ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.  அதனால்தான் உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளேன்."

இதை அதிமுகவுக்கு எதிரான உங்கள் பிரசாராமாக எடுத்து கொள்ளலாமா...?

" நாங்கள் தேர்தல் கட்சி இல்லை. இப்போது ஓ.பி.எஸ் எங்கள் நேரடி எதிரி இல்லை. நாங்கள் நியூட்ரினோ திட்டத்திற்கு அவர் ஆதரவளித்தார் என்பதற்காகதான் அவருக்கு எதிராக பிரசாரம் செய்தோம். ஆனால், அவர்தான் காவல் துறையை வைத்து எங்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளார். அதனால்தான் அவரை கைது செய்ய வேண்டும் என்கிறோம்.

எங்களிடம் சமாதானத்தில் ஈடுப்பட்ட காவல் துறையிடம்,  'அநியாயத்திற்கு துணை நிற்கும் ஓபிஎஸ்-ஸை கைது செய்யுங்கள் அல்லது நியாயத்திற்காக போராடும் எங்களை கைது செய்யுங்கள்' என்கிறோம். இரண்டில் ஒன்று நடக்காத வரை எங்கள் போராட்டம் ஓயாது."

ஓபிஎஸ்-ஸை கைது செய்வது சாத்தியமா...?

"இது ஜனநாயக நாடு என்று சொல்வது உண்மை என்றால் இது சாத்தியம். 2011 ம் ஆண்டு தேர்தலின்போது, அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்தை மாற்றிய வி.பி. துரைசாமிக்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்தோம். அப்போது துரைசாமியின் ஆட்கள் எங்களை தாக்க முற்பட்டனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். எங்கள் புகாரை பெற்றுக் கொண்டு, அவர் மீது வழக்கு பதிந்தது காவல்துறை. அவர் முன் ஜாமீன் பெற்றுதான் பிரசாரம் செய்தார். அதுபோல், ஓ.பி. எஸ் மீது வழக்குப் பதிய வேண்டும்" என்று முடித்தார் முகிலன்.

- மு.நியாஸ் அகமது

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close