Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சொல்லாததையும் ஜெயலலிதா செய்திருக்கிறார்... -ஸ்டாலின் எவற்றைக் குறிப்பிடுகிறார்?

திருவாரூர்: "ஜெயலலிதா அம்மையார் சொல்லாததை செஞ்சது ஒண்ணு, ரெண்டு இருக்கு. அது, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகளை திறந்ததும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததும்தான்" என்று பிரசாரத்தின்போது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டபோது, '' இது கருணாநிதியின் சொந்த மண் என்றால், எனக்கும் சொந்த மண்தான்.

ஆகவே சொந்தங்களிடம் உரிமையோடு வாக்குகேட்க வந்துள்ளேன். சாதனை நிகழ்த்தப்போகிற திருவாரூர் தொகுதிக்கு வந்து வாக்குகள் சேகரிப்பதிலே பெருமை கொள்கிறேன். பூரிப்படைகிறேன்.

கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமல்ல, எப்போதெல்லாம் அ.தி.மு.க ஆட்சிக்கு வருகிறதோ, எப்போதெல்லாம் ஜெயலலிதா முதலமைச்சராக வருகிறாரோ அப்போதெல்லாம் புறக்கணிக்கப்படுகிற மாவட்டமாக இந்த திருவாரூர் இருக்கிறது.

கருணாநிதி ஆட்சி காலத்திலே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவின் 5 ஆண்டுகால ஆட்சியில் புதிய பேருந்து நிலையம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மீனவர்கள், விவசாயிகள் பிரச்னைகள், நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பண பட்டுவாடா செய்கின்றனர். இதனை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் கண்டுகொள்வதில்லை.

ஜெயலலிதா அம்மையார் எதுவுமே செய்யாம செய்வீங்களா... செய்வீங்களா... என்று கேட்கிறார். அதிலும் வியப்பு என்ன என்றால் அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செய்துவிட்டாராம். சரி அத்தோடு நிறுத்தினால் போதாது என்று சொல்லாததையும் செய்துவிட்டார்களாம். சொல்லாததை செஞ்சது ஒண்ணு, ரெண்டு இருக்கு.

ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு, சந்துக்கு சந்து டாஸ்மாக் கடைகளை திறந்ததை சொல்லவே இல்லை. திறந்திருக்கிறார். சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பேன் என்று சொல்லவே இல்லைங்க அதை திறந்துவிட்டுட்டாங்க. இந்த கொடுமைகள் எல்லாம் நாட்டில் நடந்துக்கிட்டு இருக்கு. கடந்த 5 ஆண்டுகளில் நாம் 50 ஆண்டுகள் பின்னாடி போயிருக்கிறோம்.

மே 16-ந் தேதி நீங்கள் அளிக்கப்போகும் வாக்குகளைத் தொடர்ந்து, மே 19-ந் தேதி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கருணாநிதி 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்போது, திருவாரூருக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

1957-ல் முதலில் தேர்தலில் போட்டியிட்ட தலைவர் தன் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவரிடம் இருந்த 1335 என்ற எண் கொண்ட பியட் காரில் குளித்தலை தொகுதிக்கு புறப்பட்டார். அன்று அவருடன் சென்றது முரசொலி அலுவலகத்தில் இருந்து ஒரு பழைய வேன். அதில் பிரசார சாதனங்களாக அச்சடிக்கப்பட்ட துண்டுத்தாள்கள், ஒரு டேப் ரிக்கார்டர் ஆகியவைதான். அப்படி முதல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற கருணாநிதி இன்றைக்கு பேஸ்புக்கில் இருக்கிறார், டுவிட்டரில் இருக்கிறார்.

கருணாநிதியின் தவ வாழ்வை இந்த நாடே நன்றாக அறியும். தான் வாழும் புகழ்பெற்ற இல்லத்தை, அதுவும் எப்படிப்பட்ட இல்லம் என்றால், ஏதோ எங்களுக்கு பங்கு இருக்கிறது என்பதற்காக நான் சொல்லவில்லை. அந்த இல்லத்திற்கு எத்தனையோ அகில இந்திய தலைவர்கள், அகில உலக அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் வந்து அமர்ந்து விவாதித்த இல்லம். அந்த வீட்டை தனது 87-வது பிறந்த நாளில் மருத்துவமனைக்காக தானம் செய்த ஒரே தலைவர் கருணாநிதிதான்.

“இலவச மருத்துவமனைக்கு வீட்டை தானமாக வழங்கியது மன நிறைவைத் தருகிறது” என்று அந்த மாபெரும் தலைவர் அந்நிகழ்ச்சியில் சொன்னபோது, இது தானே “தவ வாழ்வு” என்று நாங்கள் கருதியதுண்டு.

கருணாநிதியின் மகன் என்ற பெருமையோடு உரிமையோடு உங்கள் முன் நிற்கிறேன். நான் அவர் போட்டியிடும் மாவட்டத்தில் இன்று உங்களை சந்திக்கிறேன். நேற்று அவர், நான் போட்டியிடும் சென்னை மாவட்டத்தில் மக்களை சந்தித்தார். இந்த வரலாறு வேறு யாருக்கும் கிடைக்குமா? அதுமட்டுமல்ல, என்னைப் பற்றி குறிப்பிட்டு, என்னுடைய உழைப்பை, தேர்தல் களப்பணியை, பிரசாரத்தை குறிப்பிட்டு பாராட்டி பேசிவிட்டு, ஸ்டாலினை மகனாக பெற்றது தன்னுடைய தவப்பயன் என்று சொன்னார்.

உண்மையிலேயே, இந்த வயதில் பணியாற்றும் அவரை எனது தந்தையாகவும், இந்த பேரியக்கத்தின் தலைவராகவும் பெற்றது என்னுடைய தவப்பயன். அதுமட்டுமல்ல அப்படிப்பட்ட தலைவரை பெற்றது தமிழகத்தின் தவப்பயன். உங்களிடம் நான் வெறும் வாக்கு கேட்க வரவில்லை. ஏனென்றால், நீங்கள் தலைவரை 200 சதவீதம் உறுதியாக வெற்றி பெற செய்வீர்கள். நான் ஒரு வேண்டுகோளை மட்டும் உங்கள் முன்வைக்கிறேன்.

தேர்தல் களத்தில் வெற்றி என்பதை தவிர வேறெதுவும் அறியாத தலைவர் தற்போது 13-வது முறையாக போட்டியிடுகிறார். கடந்த முறை அவர் திருவாரூரில் போட்டியிட்டபோது, அதுவரை அவர் பெற்றிராத மகத்தான வெற்றி இலக்காக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தீர்கள். இந்த முறை இரு மடங்கு அதிகளவில் தமிழக அளவில், இந்திய அளவில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வித்தியாசத்தில் தலைவரை வெற்றிபெறச் செய்யுங்கள்.

“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்” என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, அவருக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். இனி வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் தலைவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ