Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சைதாப்பேட்டையில் தி.மு.க. புள்ளியிடம் 3 கோடி பறிமுதல்..!

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில், பறக்கும் படை அதிகாரிகள் நேற்றிரவு திடீர் சோதனை நடத்தி ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த சில நாட்களாகவே பறக்கும்படை அதிகாரிகள் சிலரது வீடுகளில் ‘திடீர்’ சோதனை நடத்தி, முறையான ஆவணம் இல்லாமல் இருக்கும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த வாரத்தில் எழும்பூர் பகுதியில் நடத்திய 2 சோதனைகளில், கோடிக்கணக்கான பணத்தை பறக்கும் படை அதிகாரிகள்-வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அரசியல் கட்சிகளை சார்ந்த பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் சென்னையில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி. நகரில் தி.மு.க. பிரமுகர் ஒருவரது வீட்டில் நேற்றிரவு பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

இந்த திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சில சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த அதிரடி சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்ததாக ரூ.3 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம், அந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்திய வீடு, ஜெயமுருகன் என்ற தி.மு.க. பிரமுகருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், "சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தி, முறையான ஆவணம் இல்லாத ரூ.3 கோடி பணத்தை பறிமுதல் செய்திருக்கிறோம். தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நடைமுறைகளின் படி செயல்பட்டு வருகிறோம். இதுதொடர்பாக புகார்களை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு தெரிவிக்கலாம். விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்’’ என்றனர். சைதாப்பேட்டையில் திடீர் சோதனை நடத்தி பறக்கும் படை அதிகாரிகள் கோடிக்கணக்கான ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி புழுதிவாக்கத்தில் மாநகராட்சி 169-வது வார்டு கவுன்சிலர் ஜெ.கே.ஜெயச்சந்திரன், அவருடைய மகனும், 168-வது வார்டு கவுன்சிலருமான ஜெ.கே.மணிகண்டன் ஆகியோர் வீட்டில் நேற்றிரவு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். பறக்கும் படை தாசில்தார் ஏழுமலை, வருமான வரித்துறை துணை இயக்குனர் கார்த்திக் மணிகண்டன் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுன்சிலர்களின் வீட்டில் இருந்து ரூ.38.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ