Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்.கே. நகரில் கிறிஸ்தவர்களுக்கு அ.தி.மு.கவின் பிரத்யேக அஸ்திரம்!

ஆர்.கே.நகருக்கு என்று மட்டுமே தனிக்கவனம் செலுத்தி, பிரத்யேகமாக தயாரிக்கப் பட்ட துண்டுப் பிரசுரங்கள்தான் தொகுதியில் இப்போது பர பர டாக். தொகுதியை எப்படியெல்லாம் மேம்படுத்தப் போகிறோம், எப்படியெல்லாம் மேம்படுத்தி இருக்கிறோம் என்பது குறித்து  'சிறப்பாக' ஏதேனும் அதில் இருக்கிறதா என்றால் அப்படி எதுவும் இல்லை.

சரி, வேறு என்னதான் இருக்கிறது, அந்த துண்டுப் பிரசுரத்தில் ?

இப்படி ஆரம்பமாகிறது... " இந்திய துணைக் கண்டத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சிறுபான்மை, கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு செய்திராத நன்மைகள் பலவற்றை மாண்புமிகு அம்மா அவர்கள் செய்துள்ளார்கள். அதில்  சிலவற்றை மட்டும் தங்களின் சீரிய சிந்தனைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறோம்"    என்று போகிறது.

தொடர்ந்து 1 முதல் 11 ம் எண் வரை பட்டியலிட்டு,  அதிமுக ஆட்சியில் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன என்பதை விவரிக்கிறது அந்த ஒரு பக்க வழ...வழ வார்னீஷ் துண்டுப் பிரசுர அறிக்கை.

ஆர்.கே.நகர் தொகுதியைத் தவிர பிற தொகுதிகளில்,  இந்த துண்டுப் பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறதா என்று பார்த்தால் அப்படி ஏதும் வழங்கப்படவில்லை என்று ர.ர.க்களே சொல்கின்றனர்.
ஆர்.கே.நகரில் அப்படி வழங்க என்ன காரணம் ?


விசாரித்தேன். "இது அம்மாவின் தொகுதி, இங்கே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அம்மா வெற்றி பெற்றதாக இருக்கக் கூடாது என்று எங்களுக்கு மேலிருந்து உத்தரவு. தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சிம்லா முத்துச் சோழன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவருக்கு தொகுதியில் இருக்கும் தேவாலயங்களில் பேசி,  திமுகவினர் தீவிரமாக வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவினரின் இந்த ஏற்பாட்டினால் அம்மாவின் வாக்கு சதவீதம் சரிந்து விடக் கூடாது என்றுதான்  நாங்கள் இத்தனை கஷ்டப்படுகிறோம்.

அதைப் புரிந்து கொண்டுதான் அம்மாவின் தொகுதியில் கிறிஸ்தவர்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை பட்டியல் போட்டு, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரமாக இங்கே கொடுக்கப்படுகிறது.
அம்மாவின் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கும்படி இது நல்ல பலனைக் கொடுக்கும் என்று நம்புகிறோம்" என்கின்றனர்.

திமுகவினரோ,  "இந்த ஒரு சம்பவமே தொகுதியில் எங்களைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது" என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்கின்றனர்.


-ந.பா.சேதுராமன்  
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ