Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’ஜெயலலிதாவே தோற்பார்..!’ -ஸ்டாலினின் ஆருடம்

வேலூர்: ஜெயலலிதாவே ஆர்.கே.நகரில் தோற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரங்களில் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மாவட்டம் முழுக்க பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின், வேலூர் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்தும், காட்பாடியில் துரைமுருகனுக்கு வாக்கு கேட்டு பேசும்போது, ''2011-ல் ஜெயலலிதாவை வெற்றி பெற வச்சீங்க, இந்த 5 வருஷத்துல எந்த தொகுதிக்காவது வந்து குறைகளை கேட்டிருக்கிறாரா? எந்த மாவட்டத்துக்காவது போய் இருக்கிறா? கோடநாடு பங்களா இருக்கும் நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் போய் இருக்கிறார். இப்போ தேர்தல் அறிவிச்சதால நாலு நாளைக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி இரண்டு இரண்டு பேரை சாகடிக்கிறார்.

சமீபத்தில் அரக்கோணத்தில் பேசிய ஜெயலலிதா, நான் ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசிச்சு தான் வாக்குறுதி கொடுப்பேன்னு பேசியிருக்கிறார். 2011 தேர்தல்ல 54 வாக்குறுதிகள் கொடுத்தார். அதில் வாக்குறுதி எண் 34-ல், சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் சிங்கப்பூரில் உள்ளது போல மோனோ ரயில் விடப்படும் என கூறியிருந்தார்கள். எங்கே செய்தார்களா? வாக்குறுதி எண் 7-ல், 151 நகராட்சிகளில் குப்பை கழிவுகளை கொண்டு 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதாக கூறினார்கள். ஒரு மெகாவாட் மின்சாரமாவது உற்பத்தி செய்தார்களா?

வாக்குறுதி எண் 6-ல் நடுத்தர மக்களுக்கு 40 லட்சம் பசுமை வீடுகள் கட்டி தருவதாக கூறியிருந்தார்கள். நிறைவேற்றினார்களா? வாக்குறுதி எண் 14-ல் கச்சத்தீவை மீட்போம், வாக்குறுதி எண் 4-ல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தினமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 20 லிட்டர் வழங்குவேன் என்றார்கள். ஏதாவது நிறைவேற்றினார்களா? 2014 நாடாளுமன்ற தேர்தல்ல 43 வாக்குறுதிகள் கொடுத்தார். 110 விதியின் கீழ் ஏராளமான வாக்குறுதிகள் அளித்தார். அதில் எதை எதை நிறைவேற்றிருக்கீங்கன்னு ஆதாரத்தோடு சொல்ல முடியுமா. எதை எல்லாம் நிறைவேற்றலன்னு என் கிட்ட ஆதாரம் இருக்கு. ஒரே மேடையில விவாதிக்க நான் ரெடி! நீங்க ரெடியா மேடம்?

போயஸ் தோட்டத்துல இருந்து புறப்படும்போதே என்ன புளுகு மூட்டை அவிழ்த்து விடலாம்னு கிளம்புறாங்க. வேலூர் மாவட்டத்திற்கு கூட்டு குடிநீர் திட்டம் அந்தம்மா கொண்டு வந்ததா சொல்றாங்க. தி.மு.க. ஆட்சி மாறுவதற்கு ஆறு மாதம் முன்பு துரைமுருகன் வேலூர் மாவட்ட குடிநீர் பிரச்னையை கலைஞரிடம் எடுத்து சொல்லி தொடங்கப்பட்ட திட்டம் தான் கூட்டுகுடிநீர் திட்டம்.

நான் கருணாநிதி மகன் பொய் பேசமாட்டேன். வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். நான் துணை முதல்வராக இருந்த போது, கடந்த 31.12.2010-ந் தேதியன்று இந்த திட்டத்திற்கான ஒப்புதலை அரசு வழங்கியது. 25.1.11-ந் தேதியன்று அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில், அதற்கான அடிக்கல்லை நான் நாட்டினேன்.

அதன்பின் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அதை கண்டுக்கவேயில்லை மீண்டும் அதற்காக நான் வேலூர் வந்து என் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. அதற்கு பின்பு காணொளி காட்சி மூலம் திறந்து வச்சாங்க ஜெயலலிதா. இதனை ஜெயலலிதா மறுக்க தயாரா? இதை திருப்பத்தூரில் அல்லது வேலூர் மாவட்டத்தில் எந்த ஊரிலாவது மேடை போட்டு பேச நான் தயார்? ஜெயலலிதா தயாரா?

ஒரு பேச்சுக்கு அவங்க தொடங்கின திட்டம்னு எடுத்துக்கிட்டாலும், மாவட்டம் முழுக்க குடிநீர் வருதா? இன்னும் தண்ணீர் பிரச்னை தீரல. இங்க விஜய்ன்னு ஒரு அமைச்சர் இருந்தார். அவர் சரியா கப்பம் கட்டலன்னு அவரை தூக்கிட்டு வீரமணியை பள்ளி கல்வி துறை அமைச்சராக்குனாங்க. அவர் கொடுக்க வேண்டியதை சரியா கொடுக்கறதால பதவியில இருக்கிறார். பள்ளி கல்விக்கு மத்திய அரசு 4,000 கோடி ஒதுக்கியிருந்தது, அதனை எப்படி கொள்ளை அடிக்கலாம்ன்னு யோசிச்சு அந்த பணத்தை பயன்படுத்தாம வச்சிருந்ததால மத்திய
அரசே திரும்ப வாங்கிவிட்டது.

அமைச்சர்கள் ஓட்டு கேட்டு போற இடங்கள்ல எல்லாம் செருப்பு மாலை போட்டு மக்கள் வரவேற்குறாங்க. கடலூரில் அமைச்சர் சம்பத் மேல செருப்பு வீசுறாங்க. மதுரை செல்லூர் ராஜூவை குடத்தை கொண்டு அடித்து விரட்டுறாங்க. ஜெயலலிதாவே ஆர்.கே.நகர்ல தோற்றாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை. ஐந்து வருட ஆட்சியில் தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது. மீண்டும் தமிழகம் தலை நிமிர உதய சூரியனுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று ஸ்டாலின் பேச்சை முடிக்க கீழேயிருந்த ஒரு பெண்மணி பாட்டு பாடுங்க சார் என்றார்.

அதில் உற்சாகமான ஸ்டாலின், “டி.வில பாக்குறீங்களாமா என் பேச்சை… இந்தம்மா பண்றதை பாட்டா எடுத்துச்சொல்லி நான் பாடகனா மாறிகிட்டு வரேன்" என்றவர், ’எத்தனைக் காலம்
தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...’, ‘புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே... ஜெயா சொல்வதும் பொய்யே பொய்யே...' நீங்களும் பாடுங்க என்று பாடி மக்களை குஷிப்படுத்திவிட்டு கிளம்பினார்.

-அ.அச்சணந்தி

படங்கள்: ச.வெங்கடேசன்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ