Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெடிகுண்டுக்கே பயப்பட மாட்டோம்... யாகம்லாம் எம்மாத்திரம்! -அசால்ட் நாராயணசாமி

புதுச்சேரி: தேர்தல் வெற்றிக்காக ரங்கசாமி யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் பொம்மைகளை செய்து யாக குண்டத்தில் போட்டுள்ளார். வெடிகுண்டுக்கே பயப்படாத நாங்கள் இதற்கெல்லாமா பயந்துவிடுவோம் என்று தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நாராயணசாமி, தனது தேர்தல் பிரசாரத்தில், ''ரங்கசாமி முதலமைச்சர் ஆனவுடன் காங்கிரசின் திட்டங்களை முடக்கினார். கடந்த தேர்தலில் கூறியது போல, இப்போதும் வாஷிங் மிஷின் தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.  புதுச்சேரி மாநிலத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 5 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. இந்நிலையில் வாஷிங் மிஷின் எப்படி வழங்க முடியும்? தற்போதுள்ள நிதி நிலையில், அவரால் வாஷிங் பவுடர்கூட வாங்கி தர முடியாது. அடுத்த தேர்தலிலும் இதேபோல் வாஷிங்மிஷின் தருவேன் என அவர் கூறுவார்.

என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை அளிப்போம் என கூறியிருந்தனர். அதனை 30 தொகுதி மக்களும் நம்பி வாக்களித்தனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி தன் தொகுதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வேலை கொடுத்தார். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக அவர் 5 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தினார். அதற்கு இளைஞர்களிடம் ரூ.3 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து அந்த நியமனத்தை எல்லாம் ரத்து செய்துள்ளது. அதற்கு எதிர்கட்சிகள் எப்படி பொறுப்பாக முடியும்? நல்லது செய்து புகழ் வந்தால் அவருக்கு, கெட்டது செய்து பழி வந்தால் எதிர்கட்சிகளுக்கா?

தேர்தல் வெற்றிக்காக ரங்கசாமி யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் காங்கிரஸ், தி.மு.க. வேட்பாளர்கள் பொம்மைகளை செய்து யாக குண்டத்தில் போட்டுள்ளார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படும் ஆட்கள் இல்லை. என் வீட்டு வாசலில் பைப் வெடிகுண்டே போட்டார்கள். அதற்கே நாங்கள் பயப்படவில்லை. கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டால் மட்டும் ஆட்சி அமைந்துவிடுமா? மக்களை சந்திக்க வேண்டாமா? மக்களுக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டாமா?

ரங்கசாமி ஆட்சியில் புதுச்சேரியில் ஒரு தொழிற்சாலைகூட கொண்டு வரப்படவில்லை. மாறாக 900 தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும். ஒன்று முதல் பிளஸ்2 வரை கட்டாய கல்வி சட்டத்தை அமல் படுத்துவோம். சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். வானொலி திடலை மீட்டெடுப்போம். நான் 21 தொகுதிகளில் சுற்றி வந்துள்ளேன். எல்லா இடத்திலும் என்ஆர்.காங்கிரஸ் 3ம் இடத்தில்தான் உள்ளது. 5 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றால் சோனியா காந்தி காலில் விழுந்து ரங்கசாமி முதலமைச்சராகிவிடுவார் என என்.ஆர்.காங்கிரசார் கூறி வருகின்றனர்.

அப்படி என்ன தான் அந்த பதவியில் உள்ளது? பதவி இல்லாமல் உங்களால் இருக்க முடியாதா? என்.ஆர்.காங்கிரஸ் இது வரை தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடலாம். அதை யாரும் நம்பாதீர்கள். என்ஆர்.காங்கிரசுக்கு பதிலடி தரவே நாங்களும் தேர்தல் அறிக்கையை வெளியிடாமல் உள்ளோம். இங்கு ரவுடிகள் ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அவர்கள் சிறைக்கு சென்று விடுவார்கள். காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ