Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ச.ம.க-ன்னா சமந்தா கட்சினு சொல்றது இளைஞர்கள் குற்றமில்லை!' - ஆதங்க ஆர்.ஜே பாலாஜி

'தொகுதின்னா என்ன மீனிங்?’, ‘தமிழ்நாட்ல ஒரு 40-50 தொகுதி இருக்கும்’, ‘234 தொகுதில 233 தொகுதில ஜெயிச்சவங்கதான் சிஎம் ஆகமுடியும்’, ‘சமக-ன்னா தி.மு.க. இல்லல்ல.. சமகன்னா சமந்தாவோட கட்சி’, ‘எம்ஜியார், ஜெயலலிதா இவங்களைத் தவிர சி.எம்மா இருந்தவங்க ஓ.பன்னீர்செல்வம், விஷால், ஆர்.ஜே.பாலாஜி’, ‘இந்தியாவோட ப்ரெசிடெண்ட் மோடி அல்லது ப்ரணாப் முகர்ஜி’, ‘மோடியின் கட்சி காங்கிரஸ் கட்சி’, ‘சென்னை மேயர் விஜயகாந்த்’, ‘எலெக்‌ஷன் முடிஞ்சு ரெண்டு வாரம் கழிச்சு ரிசல்ட் வரும்’,‘சட்டமன்றம்னா பார்லிமெண்ட்’,‘ஓட்டு போட்டா கைல மார்க் வரும். ஜாலியா இருக்கும். ஃபோட்டோ எடுக்கலாம்.’-

'என்னங்க இது...?' என்று டென்ஷனாக வேண்டாம். கொஞ்சம் பொறுங்கள்....


ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட வீடியோ ஒன்றில், வினாடி வினா ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டாக்டர், என்ஜினியர் படிக்கிற 4 இளைஞர்கள் அளித்த பதில்கள்தான் நீங்கள் மேலே படித்தது.

இந்த பதில்களால் அதிர்ச்சியான நெட்டிசன்கள், “உண்மையச் சொல்லுங்க பாலாஜி... அது செட்டப் பண்ணின வீடியோதானே... சும்மா கலாய்க்கத்தானே அப்படிப் பேசிருக்காங்க?” என்று அவரிடம் ட்விட் செய்ய. “ஆமாம் னு சொல்லணும்னு ஆசைதான். ஆனா, இல்லை. நிஜம்மாவே அது அவர்களாக ஸ்பாட்டில் சொல்லிய பதில்கள்தான்” என்று அதிர்ச்சியை கூட்டியிருக்கிறார் பாலாஜி.

அந்த நாலுபேர் மட்டும்தான் இப்படி விஷயம் தெரியாதவர்களாக இருக்கிறார்களா? ஆர்.ஜே.பாலாஜியிடமே இந்தக் கேள்வியை முன்வைத்தோம்.

இதுக்கு பசங்களைக் குறை சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. இது கம்ப்ளீட் சிஸ்டம் ஃபெயிலியர். அவங்களுக்கான தேவை என்னவோ அதைப்பத்தி முழுமையா அவங்களுக்குத் தெரியும். பல விஷயங்கள்ல நமக்கு தெரியாததையெல்லாம்கூட தெரிஞ்சு வெச்சிருக்காங்க. தங்களுக்கு தேவையில்லாத, தெரிஞ்சுக்கக் கூடாத பட்டியல்ல அரசியலை வெச்சிருக்காங்க. அவ்வளவுதான்!

அரசியல் தங்களுக்கு தேவையில்லைன்னு அவங்க நினைக்க காரணம், அதனால் தங்களுக்கு எந்த மாற்றமும் வராதுன்னு அவங்க உறுதியா நினைக்கிறதுதான்”

அது சரியா?

சரி... தப்பைத் தாண்டி உண்மைன்னு ஒண்ணு இருக்கு. அதை நாம ஒப்புக்கொண்டே தீரணும். அவங்க ஆர்வத்தைத் தூண்டாத, அவங்களை ஊக்குவிக்காத எந்த ஒரு விஷயத்தையும் இன்றைய இளைஞர்கள் ஆழமா தெரிஞ்சுக்க ஆசைப்படறதில்லை. அதுக்காக மெனக்கடறதும் இல்லை. அதையும் தாண்டி நம்ம கல்வி முறையே ஓட்டப்பந்தயம்போலதான் இருக்கு. நான் படிக்கற காலத்துல, ஸ்கூல் முடிஞ்சி வந்தபின் தாத்தாகூட உட்கார்ந்து நாட்டு நடப்பு பற்றி பேசுவோம். பேசுவோம்னா, ‘வா.. கொஞ்சம் பேசலாம்’ன்னு திட்டமிட்டு பேசறதில்ல. இயல்பான ஒரு உரையாடலா இருக்கும்.

இப்ப ஸ்கூல் படிக்கற பையன் காலைல அஞ்சு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினா,  ட்யூஷனில் துவங்கி பள்ளிக்கூடம், ஸ்பெஷல் க்ளாஸ், அது இதுன்னு  லேட் நைட்தான் வீடு திரும்புகிறான். கிடைக்கற ஓய்வு நேரத்தில் அவனுக்குப் பிடிச்ச விஷயங்களில் கவனம் செலுத்துகிறான். அவன் சாராத, அவனை ஊக்குவிக்காத ஒன்றைத் தெரிஞ்சுக்கன்னா எப்படித் தெரிஞ்சுக்குவான்?

கடந்த இரண்டு மாதங்களா, ஸ்கூல் காலேஜ்னு ஆயிரக்கணக்கான மாணவர்கள்கிட்ட பேசிட்டிருக்கேன். இப்ப இருக்கற இளைஞர்களை எந்த அரசியல் தலைவர் “இன்ஸ்பையர்” பண்றாங்க? யாரும் இல்லைங்கறதுதான் உண்மை. 'ஓட்டுப் போடு ஓட்டு போடு..' ன்னு விழிப்பு உணர்வு கொண்டு வர்றதைத்தான் பலரும் பண்றாங்க. யாருக்கு போடணும்ங்கற தெளிவை உண்டாக்க யாரும் முயல்றது இல்லை. அதுனால அவனும் ‘இது எனக்கு சம்பந்தமில்லாத விஷயம். யார் வந்தாலும் நான் கஷ்டப்பட்டாதான் எனக்குப் பிழைப்பு’ன்னு போய்டறான்.

முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் வருஷத்துக்கு ஆறேழு வினாடி வினா, பொது அறிவு சம்பந்தமா நடக்கும். இப்ப எங்க நடக்குது? கல்ச்சுரல்ஸ் புரோகிராம் னு சொல்லி யாராவது செலிப்ரட்டியை வரவழைச்சி பேச வெச்சி அனுப்பிடுறாங்க. சொல்லிக்குடுக்கறது குறைஞ்சிடுச்சி. அவன் தெரிஞ்சுக்கறதும் வேற தளத்துக்கு போய்டுச்சு அவ்ளோதான்”

அதே இளைஞர்கள் அமெரிக்கா அதிபர்கள் பெயரை கரெக்டா சொல்றது எதனால? அந்த அறிவு ஏன் இந்தியான்னு வர்றப்ப இல்லை?

அப்படி இல்லை. அமெரிக்கா தேர்தல் முறையைப் பத்தி டீட்டெய்லா கேட்டாலும் அவங்களுக்கு தெரியாதுதான். ஆனா, அங்க இருக்க தலைவர்கள் மீதான மரியாதைகூட, இங்க இருக்க தலைவர்கள் மேல் அவனுக்கு இல்லை. ஏன்னா அங்க எதிரெதிர் கட்சியினர் நேருக்கு நேர் பார்த்தாலோ, பொது வெளியில சந்திச்சாலோ பேசிக்குவாங்க, நலம் விசாரிச்சுப்பாங்க. இங்க அந்த ஆரோக்கியம் இல்லையே. திட்டிக்கறதும், ஒருத்தருக்கொருத்தர் ஆபாசமான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிக்கறதும்தானே நடக்குது. அதைப் பார்த்து முகம் சுளிச்சுட்டு போய்டறாங்க. இல்லைன்னா கலாய்ச்சுட்டு ‘இவங்களைப் பத்தி நான் ஏன் தெரிஞ்சுக்கணும்’னு கடந்து போய்டறாங்க. அதான் நிஜம்

அப்படீன்னா அரசியல் தலைவர்கள் மாறணும்னு சொல்றீங்களா?

இளைஞர்கள் அதிகமா புழங்கற சோஷியல் நெட்வொர்க்கிங்ல இருக்கற அரசியல்வாதிகள்கூட அங்க கூட்டம், இங்க கூட்டம்னு பேசறாங்களே ஒழிய இன்ஸ்பைரிங்காவோ, உரையாடலாவோ தன் அறிவை இந்தக் கால இளைஞர்களுக்குக் கடத்தறது இல்லையே. அவங்க புகழ்பாடத்தான் வெச்சிருக்காங்க. இல்லைன்னா சண்டை போட்டுக்கறாங்க. ‘இவங்க நமக்கு நல்லது பண்றதுக்காகவா அவங்களுக்குள்ள சண்டை போட்டுக்கறாங்க?’ன்னு தெளிவா கேட்கறாங்க பசங்க. அதுனாலயே இவங்களுக்குப் பிடிக்க மாட்டேங்குது”

அப்ப இன்றைய தலைமுறை, அரசியலை தெரிஞ்சுக்க என்னதான் வழி?

கண்டிப்பா தெரிஞ்சுக்குவான். அவனுக்கு தேவையானதை தெரிஞ்சுட்டுதான் இருக்கான். நாம பத்து ரூபாய் தருமம் பண்ணினா, அவன் பர்ஸ்ல வெச்சிருக்கற இருநூறு ரூபாயை ஜஸ்ட் லைக் தட் குடுத்துட்டு அதைப் பத்திப் பீத்திக்காம போய்டுவான். ‘அரசியல் தெரியலை’ன்னு நாம நினைக்கற இதே இளைஞர்கள்தான் சென்னை மழைவெள்ளத்தின்போது ஜாதி, மதம், அந்தஸ்துங்கறதையெல்லாம் உடைச்சு போட்டுட்டு,  பேன்டை மடிச்சுக்கிட்டு தண்ணில இறங்கினாங்க. நான் கண்கூடா பார்த்தேன். ரோட்ல ஒருத்தன் விழுந்தா கைதூக்கற நாலுபேர்ல மூணு பேர் இந்த இளைஞர்களாத்தான் இருப்பாங்க.

மழைவெள்ளத்தப்ப சென்னை மைக்ரோன்னு ஆரம்பிச்சோம். இப்ப வரைக்கும் சின்னச் சின்னதா என்ன பண்ண முடியுமோ எல்லா வேலையும் பண்ணிட்டிருக்கோம். அங்கங்க காலேஜ், ஸ்கூல் பசங்க அவங்கவங்க தெருவுல ஒரு பிரச்னைன்னா போய் ஹெல்ப் பண்றாங்க. அதுவும் அரசியல்தான். என்கூட இதுல உதவி பண்ணின பசங்கள்ல, பதினொண்ணாவது படிக்கற ரெண்டு ஸ்கூல் பசங்க, அவங்க தெருவுல இருக்கற 17 குழந்தைகளுக்கு ஆதார் கார்ட் அப்ளை பண்ணி வாங்கிக்குடுத்திருக்காங்க. நம்மள்ல எத்தனை பேருக்கு ஆதார் கார்ட் அப்ளை பண்ணத் தெரியும்? அடுத்த 10 வருஷத்துல இவங்க லீடர்ஷிப் க்வாலிட்டியோட வருவாங்க.

இந்த மாதிரி பசங்களுக்கு, ‘எது எப்படிப் போனாலும் நீ தெரிஞ்சுக்க வேண்டியதை தெரிஞ்சுக்க’ன்னு சொல்லிட்டிருக்கோம். நிச்சயம் தெரிஞ்சுப்பாங்க. இப்ப இருக்கற பசங்களுக்கு மனசுல விஷம் கிடையாது. கெடுக்கணும்னு எண்ணம் கிடையாது. நல்லது பண்றதுக்கு யோசிக்கறது கிடையாது. உடனே செய்ற மனசு இருக்கு. இந்த வீடியோவிலேயே பார்த்தீங்கன்னா, தெரியாததை தெரியாதுன்னு ஓபன் டாக்ல சொல்றாங்க. அதுக்கு அவங்க வெட்கப்படலை. ‘இல்லடா.. இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்”ங்கற தெளிவை மட்டும் அவங்களுக்கு விதைச்சா போதும்.. அவங்களா தெரிஞ்சுக்குவாங்க. அதுக்கு விதை போட்டது இந்த வீடியோல இருக்கற நாலு பேர்னு வெச்சுக்கங்க. அந்த நாலு பேருக்கு நன்றி!

கடைசியா இந்தக் கேள்வி கேட்காம இந்தப் பேட்டி முடியாது... நீங்க அரசியலுக்கு வருவீங்களா?

அரசியல்னா எலெக்‌ஷன்ல நிக்கறதைச் சொல்றீங்களா? அரசியலுக்கு வர்றதோட கடைசியான, குறைந்த பட்ச செயல்தான் இந்த எலெக்‌ஷன்ல நிக்கறதுங்கறது. அதைத்தவிர அரசியல்னா என்னவோ அதை அல்ரெடி பண்ணிட்டுதான் இருக்கேன். உங்களைச் சுற்றி நடக்கற அநீதியை, சமூகத்துக்கு எதிரான ஒரு செயலை தட்டிக்கேட்கறதுதான் அரசியல். அதை நான் பண்ணிட்டுத்தானே இருக்கேன்!

‘பரிசல்’ கிருஷ்ணா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close