Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’போ மோனே மோடி!’ - ஆர்ப்பரிக்கும் கேரளா


நீ போடா மோனே தினேஷா" என 2000 ஆம் ஆண்டு வெளியான நரசிம்மம் திரைப்படத்தில் மோகன்லால் "பன்ச் டயலாக்" பேசியிருப்பார். இது, அப்போது, கேரளாவாசிகளிடம் மிகவும் பிரபலமான பன்ச் டயலாக்காக மாறியது. பல ஆண்டுகள் கழித்து இந்த பன்ச் டயலாக் மீண்டும் வைரலாகி உள்ளது. ஆனால் இம்முறை தினேஷாவை நோக்கி அல்ல… இந்தியாவின் பிரதமரான மோடியை நோக்கி. "போ மோனே மோடி" என்கிற ஹேஷ்டேக் தான் கேரள முகநூல் மற்றும் ட்விட்டர் வாசிகளின் தற்போதைய ட்ரெண்டிங் டாப்பிக்.

#PoMoneModi (போ மகனே மோடி) என்ற ஹேஷ்டாகுடன், பலரும் மோடியை தாக்கி பதிவுகளும், மீம்ஸ்களும் போட்டுத் தள்ள காரணம், கேரளாவில் உள்ள பழங்குடியின (ST) மக்களை, மோடி, சோமாலிய மக்களுடன் ஒப்பிட்டது தான். கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது, மோடி, கேரளாவில் உள்ள பழங்குடி இன குழந்தைகளின் இறப்பு விகிதம், சோமாலியாவின் குழந்தை இறப்பு விகிதத்தைக் காட்டிலும் மோசமாக உள்ளதாக கூறினார்.
 

இது கேரள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள, அதுவும் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவை, ஆப்பிரிக்க நாடான சோமாலியாவுடன் ஒப்பிட்டுவிட்டாரே மோடி… என முகநூலிலும், ட்விட்டரிலும் கொதித்துத் தள்ளுகின்றனர். அதில் ஒருவர் கேரளாவில் படித்தவர்களின் சதவீதம் 94% எனவும், பாஜக ஆதரவாளர்களின் சதவீதம் 6% எனவும், ஆகமொத்தம் 100% வருகிறது என பதிவிட்டு கலாய்த்துள்ளது படு வைரல் ஆகியுள்ளது.

 


 

மோடி குறிப்பிட்டதோ பழங்குடியின மக்களை, ஆனால் ஒட்டுமொத்த கேரளாவையே, சோமாலியாவுடன் ஒப்பிட்டது போல் தான் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் கேரள மக்கள் சிலர், "ஆம், பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது." எனக் கூறியுள்ளனர்.
 

குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) என்பது, ஒரு நாட்டிலோ, ஒரு மாநிலத்திலோ அல்லது ஒரு பகுதியிலோ பிறக்கும் 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் 1 வயதிற்கு முன்னதாகவே இறக்கின்றனர் என்பதை பொருத்து கணக்கிடப்படுகிறது. அதாவது பிறக்கும் 1000 குழந்தைகளில், 50 குழந்தைகள் இறந்தால், குழந்தை இறப்பு விகிதம் 50 ஆக இருக்கும்.      
 

சரி, உண்மையான நிலவரத்தை தெரிந்துகொள்ள, தேசிய மற்றும் சர்வதேச தகவல்களை அலசினால், அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ வின் தகவல்கள் படி, சோமாலியாவில் குழந்தை இறப்பு விகிதம் 98.39. இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் 41.81. உலக அளவில் சோமாலியா மூன்றாம் இடத்திலும், இந்தியா 50 ஆம் இடத்திலும் உள்ளது.
 

கேரளாவின் குழந்தை இறப்பு விகிதமோ 12. இந்திய அளவில், குறைந்த குழந்தை இறப்பு விகிதம் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக கேரளா விளங்குகிறது. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 36. இது கேரளாவைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். இப்படி இருக்கையில், மோடி எப்படி கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிடலாம் என்பதுதான் கேரளவாசிகளின் ஆதங்கம்.
 

மோடியின் கூற்றிலும் ஓரளவு உண்மை உள்ளது. காரணம், மோடி குறிப்பிட்ட கேரளாவில் உள்ள பழங்குடியின மக்கள் (ST) வாழும் பகுதிகளில் குழந்தை இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 60. ஆனால், இந்தியா முழுக்க உள்ள பழங்குடியின மக்களில் கேரளாவில் வசிப்போரிடம் தான் குழந்தை இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. ஆக, பாஜக ஆளும் பல மாநிலங்களில் பழங்குடியின மக்களின் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது.
 

எப்படியோ, மோடியின் கூற்று, பழங்குடியின மக்களின் மீது மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை திருப்பினால், குழந்தை இறப்பு விகிதத்தை இன்னும் கூடுதலாக கட்டுப்படுத்தலாம்.  

- ஜெ. விக்னேஷ் 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ