Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அம்மா உணவகம் தொடரமாட்டோம் எனக் கூற கருணாநிதிக்கு தைரியம் இல்லை! -ஜெயலலிதா

நெல்லை: அம்மா உணவகம் தொடரமாட்டோம் எனக் கூற கருணாநிதிக்கு தைரியம் இல்லை என்று நெல்லையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டபோது கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாளையங்கோட்டையில் நடந்த பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசும்போது, ''தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும், உங்கள் நலனுக்கு நீங்களே வைத்துக் கொள்ளும் வேட்டு என்பதை மறந்துவிடாதீர்கள். தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைத்து உங்களை கண்ணீரில் தவிக்கவிட்டன. அதை மாற்றி உங்களை கை தூக்கிவிட்டு, உங்களது கண்ணீரை துடைத்து, உங்களது முகங்களில் மலர்ச்சியை ஏற்படுத்தியது அ.தி.மு.க.

எங்களது தேர்தல் அறிக்கையில் எதையும் வெளிப்படையாகத் தான் சொல்லியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். நான் சொன்னதை செய்தேன். சொல்லாத பல திட்டங்களையும் நான் செயல்படுத்தி உள்ளேன். சொல்லாத பல திட்டங்களையும், ஏழை, எளியோர் நலன் காக்கும் வகையில் நான் கொண்டு வந்தேன். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற நினைப்பதாக தி.மு.க.வினர் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்.

நான் சொன்னதை செய்வேன் என்பது தமிழக மக்களுக்கே தெரியும். செய்வதைத் தான் இந்த ஜெயலலிதா சொல்லுவாள் என்பது தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, வாக்காள பெருமக்களே, இப்பொழுது நான் அறிவித்த திட்டங்களைக் கேட்டுவிட்டு இவ்வளவு தான் என்று கருதிவிடாதீர்கள். இதுமட்டும் அல்லாமல், இன்னும் இதைவிட சிறந்த திட்டங்களை, இதைவிட உன்னதமான திட்டங்களை, நீங்கள் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத பல திட்டங்களை உங்களுக்காக நான் கொண்டு வருவேன். நான் செயல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை உங்களுக்கு இந்த நேரத்தில் அளிக்கிறேன்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுவது ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்பதால், அத்தகைய நுழைவுத் தேர்வுக்கு அ.தி.மு.க. எப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. அந்த அடிப்படையிலேயே, கடந்த 2005-ம் ஆண்டு நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஒரு அரசாணை வெளியிட்டதோடு, 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனி சட்டத்தை, எனது தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. இந்த அரசாணையும், சட்டமும், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.

இதன் அடிப்படையிலேயே 2006-ம் ஆண்டு ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 2007-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், 27-12-2010 அன்று அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவக் குழுமம் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இதனை எதிர்த்து பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

தமிழக அரசின் சார்பில் எனது தலைமையிலான அரசால் சரியான வாதங்கள் வைக்கப்பட்டதன் அடிப்படையில், 18-7-2013 அன்று பொது நுழைவு தேர்வு நடத்தும் அறிவிக்கையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாமல் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த மறு ஆய்வு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்று அப்போதைய பாரத பிரதமருக்கு நான் கடிதம் எழுதினேன்.

மத்தியிலே பா.ஜ.க. அரசு அமைந்த பின், 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் பாரத பிரதமரை நேரில் சந்தித்து, நான் அளித்த கோரிக்கை மனுவிலும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முடிவை மறுபரிசீலனை செய்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை திரும்பப் பெறுமாறு நான் கேட்டுக்கொண்டேன். இதனை வலியுறுத்தி தொடர்ந்து கடிதங்கள் எழுதிவந்தேன். இந்நிலையில், 11-4-2016 அன்று உச்ச நீதிமன்றம் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, 2013-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை திரும்பப் பெற்று, மீண்டும் முதலில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டது. அந்த விசாரணை இன்னமும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில், மற்றொரு வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்கால ஆணையாக, மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்பட வேண்டும் என 9-5-2016 அன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத நிலையிலும், இதில் வழங்கப்படும் உத்தரவு தமிழகத்திற்கு பாதகமாக அமைந்துவிடக் கூடாது என்பதால், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட சட்டம் பற்றியும், அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியது பற்றியும், பொது நுழைவுத் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றியெல்லாம் விரிவாக எடுத்துக் கூறியதுடன், அவற்றை எழுத்துப் பூர்வமாகவும் தாக்கல் செய்துள்ளனர். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த சட்டம் பற்றியும், தமிழக அரசின் வாதங்கள் பற்றியும், எதையும் தெரிவிக்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு நுழைவுத் தேர்வை சி.பி.எஸ்.இ. நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

எந்த ஒரு விஷயத்திலும் அரசியல் ஆதாயம் பார்க்கும் கருணாநிதி, இது பற்றியும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் சரியாக வாதாடப்படவில்லை என்றெல்லாம் ஒரு பொய்யை தெரிவித்துள்ளார். இந்திய மருத்துவக் கவுன்சில் 2010-ம் ஆண்டு நுழைவுத் தேர்வை கொண்டு வந்து அறிவிக்கை வெளியிட்டபோது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்தது தி.மு.க. தான். கருணாநிதி நினைத்திருந்தால் அப்போதே பாரதப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லி இந்த அறிவிக்கையை திரும்பப் பெற்றிருக்க இயலும்.

குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் உள்ள நடைமுறையையும், சட்டத்தையும் பற்றியாவது எடுத்துச்சொல்லி, தமிழ்நாட்டுக்காவது அந்த அறிவிக்கையில் இருந்து விலக்கு பெற்றிருக்க முடியும். ஆனால், கருணாநிதியின் சிந்தனை எல்லாம் 2ஜி-யைப் பற்றியே இருந்த காரணத்தால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல், அந்த அறிக்கைக்கு உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கி என்ன பயன்?. உங்களது ஆதரவுடன் அ.தி.மு.க. அரசு மீண்டும் அமைந்தவுடன், மருத்துவ படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லாமலேயே தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் உங்களுக்கு அளிக்கிறேன். தேவையெனில் இதற்கென தனியே ஒரு சட்டத்தையும் அ.தி.மு.க. கொண்டு வரும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது தேர்தல் அறிக்கையை தி.மு.க.வினர் தான் சூப்பர் ஹீரோ என்றும், கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை என்றும் கூறி வந்தனர். ஏமாற்று அறிக்கைகளை வெளியிடுபவர்கள் தான் இவ்வாறெல்லாம் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பற்றி கூறிக் கொள்வார்கள். எங்களது தேர்தல் அறிக்கை சாமானிய மக்களுக்கான தேர்தல் அறிக்கை. வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை. எனவே தான், இந்தத் தேர்தல் அறிக்கைக்கு எந்த அடைமொழியும் தேவையில்லை. எங்கள் திட்டங்களில் இது சரியில்லை அது சரியில்லை என்று சதா சர்வ காலமும் கூறி வருகிறார் கருணாநிதி. ஏன்? 5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ஏழை எளியோரை கை தூக்கிவிடுவதற்கான எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. ஏழைகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியதைப்போல், ஆடுகள், கறவை மாடுகள் வழங்குதல், கல்வி உபகரணங்கள் வழங்குதல் என கருணாநிதியும் திட்டங்களை செயல்படுத்தி இருக்க முடியுமே. அவ்வாறு ஏன் செய்யவில்லை? செய்யவிடாமல் யார் தடுத்தார்கள்? உண்மை என்னவென்றால் அவ்வாறு செய்வதற்கு கருணாநிதிக்கு மனமில்லை.

எதையாவது இலவசமாக வழங்கினால் அதிலிருந்து தங்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று பார்த்து தான் வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை கருணாநிதி வழங்கினார். ஏழை, எளியோர் மீது தி.மு.க.வுக்கு அக்கறையில்லை. எனவே தான், ஏழைகளுக்கு பயன் தரும் வாக்குறுதிகள் அவர்கள் தேர்தல் அறிக்கையில் இல்லை. அது மாத்திரமல்லாமல் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று நேரடியாகக் கூறும் தைரியமும் கருணாநிதிக்கு இல்லை. எனவே தான், அம்மா உணவகத்தை நாங்கள் தொடர்ந்து நடத்த மாட்டோம் என நேரடியாகக் கூறாமல், இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து ஒரு வேளை உணவுக்கும் வழியில்லாதவர்களுக்கு ‘‘அண்ணா உணவகம்’’ அமைப்போம் என மக்களை ஏமாற்றும் விதமாக சொல்லி இருக்கிறார்கள்" என்றார்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ