Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தமிழர்கள் வசதியாகக் கூடாது!' தி.மு.க., அ.தி.மு.கவின் குறிக்கோளாம்

சென்னை: தமிழக மக்கள் வசதியாவதை விரும்பாத திராவிட கட்சிகள், இலவசங்களை வழங்கி வருகின்றன என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மயிலாப்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து, மயிலை மாங்கொல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசும்போது, ''தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை தண்ணீராய் செலவழிக்கின்றது. இந்த பணம் அவர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்ததா? இல்லை. அது கொள்ளையடித்த பணம்.

அ.தி.மு.க. அரசு மக்களுக்கு சரியான குடிநீர் வழங்கவில்லை, சாலை வசதி செய்துதரவில்லை. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவில்லை. ஆனால் இலவசம் என்ற பெயரில் ரூ.11,600 கோடியை வீணடித்துவிட்டனர். தமிழக மின்வாரியம் ரூ.80 ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது.

இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் கட்சிகள். அவர்களுக்கு மாற்றாக, 3-வது சக்தியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது. எந்த மாநிலங்களில் எல்லாம் பா.ஜ.க. ஆட்சி செய்கிறதோ, அங்கெல்லாம் மாற்று சக்தியாக தான் உருவெடுத்து இருக்கிறோம். இதற்கு காரணம், மக்கள் நலனை ஒருபோதும் நாங்கள் விட்டுக்கொடுத்தது கிடையாது.

தமிழகத்தில் வழங்கப்படும் இலவச பொருட்களான டி.வி., மிக்சி, கிரைண்டர் போன்றவை எல்லாம் நீண்டகால பயன் தராது. நமது வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்காது. இலவச பொருட்களை வழங்கி தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏழைகளாக வைத்திருக்கின்றன. மக்கள் வசதியாவதை 2 கட்சிகளும் விரும்புவதில்லை. அதனால் தான் தேர்தலின்போது இருகட்சிகளும் போட்டி போட்டு இலவசங்களை அறிவிக்கின்றன.

இலவசங்களை வேண்டாம் என்று தவிர்த்தால், தமிழர்களின் எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கும். தமிழ்நாட்டின் அனைத்து பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். இந்த இலவச பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து வரிப்பணமாக பெற்றதை தான் வழங்குகின்றனர். இங்கு தாமரை மலர்ந்தால், தமிழகம் வளரும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ