Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஜெயலலிதாவின் மனம் திறந்த மடல்!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மனம் திறந்த மடல் ஒன்றை எழுதி உள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தனது கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் எதிர்கால தமிழகத்தின் அரசியல் பயணத்திற்கு திசைகாட்டியாக அமையப் போகும் தேர்தல் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படக் காரணமாக இருந்த ஓர் அரசியல் கூட்டணி 'கூடா நட்பு' என்று கூறி பிரிந்தது. இன்று 'ஒட்டிப் பிறயதவர்கள்' என்று கூறிக் கொண்டு மக்கள் முன் கைகோர்த்து நிற்கிறது. இலங்கையில் தன் உரிமைகளை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் முயற்சிகளுக்கு இந்தக் கூட்டணி பேராபத்தாய் முடியும் என்பதை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

குடும்ப அரசியல் என்னும் நச்சு மரம் தன் வேர்களையும், விழுதுகளையும் வலுப்படுத்திக் கொள்ளுமேயானால், அது தமிழ் நாட்டில் தனி மனித சுதந்திரத்திற்கு ஆபத்தானதாக அமைந்துவிடும் என்பதையும்; பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், திரைப்படத் தயாரிப்பு, திரைப்பட வெளியீடு, கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் உரிமை உள்ளிட்ட அனைத்துத் தொழில் முயற்சிகளும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற கொடிய நிலையை 2011 வரை தமிழகம் அனுபவித்ததையும் வாக்காளர்களுக்கு நினைவூட்டுங்கள்.

2006 முதல் 2011 வரையிலும் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில், ஆளும் கட்சியின் நிர்வாகிகள், கிளை, ஊர், மாவட்டம் என்று அனைத்து நிலைகளிலும் ஆங்காங்கே 'தடியெடுத்தோர்கள் எல்லாம் தண்டல்காரர்களாகி' நில அபகரிப்பு உள்ளிட்ட மக்களின் உரிமைகளையும், உடைமைகளையும் அடித்துப் பறிக்கும் அவல நிலை தமிழகத்தில் காணப்பட்டதை, மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இருப்பினும், மக்களுக்கு அந்தத் துயரங்களை நீங்கள் வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறுவது மிகவும் அவசியம்.

மேற்சொன்ன வரலாற்றுப் பிழைகளையும், மன்னிக்க முடியாத பல குற்றங்களையும் செய்திட்ட தி.மு.க., அவற்றை மக்கள் மனதில் இருந்து அகற்றிட, 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பல ஊழல்களில் சம்பாதித்த பெரும் பணத்தைக் கொண்டு ஒரு சில ஊடகங்கள் வழியாகவும், பத்திரிகைகள் வழியாகவும் முயற்சிக்கிறது. இந்தப் பிரசாரத் தந்திரத்தில் தீய சக்தியின் குடும்பப் பரிவாரங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை, கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் உங்களுடைய அயராத உழைப்பின் மூலம் முறியடிக்க வேண்டும்.

உங்கள் அன்புச் சகோதரியாகிய எனது ஆட்சியில், பல்வேறு நிலைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ் நாடு விளங்கி வருகிறது. அனைத்து குடும்பங்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு குறுகிய கால மற்றும் நீண்ட கால பயன் அளிக்கும் திட்டங்களை நான் வெற்றிகரமாக செயல்படுத்தி இருக்கிறேன். தமிழக மக்கள் யாருக்கும் அஞ்சிடாமல் தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு பெற்று; சட்டத்தின் ஆட்சி தருகின்ற சமூகப் பாதுகாப்பினையும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். இந்த சாதனையை உங்கள் அன்புச் சகோதரியின் அரசு நிகழ்த்தி இருப்பதை தமிழக வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ் நாட்டில் தான் கடந்த ஐந்தாண்டுகளில் ஒன்றரை கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவானதையும்; சிறு, குறு தொழிற்சாலைகள் இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிக அளவில் தொடங்கப்பட்டிருப்பதையும்; தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பதையும் பல புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழகத்தின் பல்வேறு திட்டங்களைப் பாராட்டி மத்திய அரசு கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் வழங்கி இருக்கிறது. எனது தலைமையிலான கழக அரசு நிறைவேற்றி இருக்கும் பல திட்டங்களை இந்திய மாநிலங்கள் பலவும் பின்பற்ற முயற்சிக்கின்றன என்ற உண்மையை தமிழக வாக்காளர்களுக்கு விவரமாக எடுத்துச் சொல்லுங்கள்.

இந்தச் சாதனைகள் தொடரும் வகையில், நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. தமிழக மக்களுக்காகவே நாள்தோறும் சிந்தித்து உழைத்து வரும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், ஆழ்ந்து யோசித்து இந்தத் தேர்தல் அறிக்கையினை தயாரித்திருக்கிறேன். பெண்களுக்கு 50 விழுக்காடு மானியத்தில் ஸ்கூட்டர் அல்லது மொபெட்; விவசாயக் கடன்கள் ரத்து; புதிதாக 40 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயத்திற்கு கடனுதவி; மாணவர்களின் கல்விக் கடன் சுமையை அரசே ஏற்பது; அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா செல்போன்; கட்டணம் ஏதுமின்றி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம்; திருமண நிதியுதவி திட்டத்தில் தாலிக்கு 8 கிராம் தங்கம், அதாவது 1 பவுன்; வட்டியில்லா சுலபத் தவணை கடன் வசதி தரும் 'அம்மா பேங்கிங் கார்டு' போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்களை அச்சிட்டு, வீடு தோறும் அதனைக் கொண்டு சேர்த்து, வாக்கு கேட்க வேண்டிய பெரும் கடமை கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

'மக்களால் நான், மக்களுக்காகவே நான்', 'உங்களால் நான், உங்களுக்காகவே நான்' என் நினைப்பெல்லாம் தமிழக மக்களின் உயர்வைப் பற்றியே. என் கனவெல்லாம் தமிழர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்க வேண்டும் என்பதற்காகவே. என் முயற்சிக்கு ஒத்துழைத்து, மேற்கூறிய பணிகளை திறம்பட செய்து முடித்து, அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் மகத்தான வெற்றி பெறும் வகையில், நீங்கள் ஒவ்வொருவரும் கண் துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டும் என்று, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராக களத்தில் நிற்கிறேன் என்ற உணர்வோடு நீங்கள் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன்" என்று கூறி உள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ