Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகாலட்சுமிக்கு ஸ்ம்ரிதி இரானியின் அடடே விளக்கம்!

சென்னை: விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி பிரசாரம் செய்தபோது மகாலட்சுமிக்கு விளக்கம் அளித்தார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி பிரசாரம் செய்தபோது, ''அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது மக்கள் பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தற்போது பல சலுகைகளை கொடுத்து வாக்குகள் கேட்கிறது.

தி.மு.க.வின் சின்னம் சன்-ரைஸ் (உதயசூரியன்). சன் என்றால் மகன். இனி எந்த மகன் உதிக்க போகிறான் என்ற நிலையில் அவர்கள் கட்சி இருக்கிறது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய தகுதிகள் ஒரு குடும்பத்தினராலே அபகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் அமைந்துள்ள தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது ஒரு முறையற்ற கூட்டணி. மக்களுக்கு ‘2 ஜி’ யை தான் இந்த கூட்டணி நினைவுப்படுத்துக்கிறது.

முந்தைய காங்கிரஸ் அரசு மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால், அதில் 10 பைசா தான் மக்களை போய் சேரும். ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் மானியங்கள் வங்கி கணக்குகளில் சேர்க்கப்படுவதால் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய சூழ்நிலையில் நல்ல ஃபில்டர் காபி குடிப்பதற்கு ரூ.30 செலவாகிறது. ஆனால் நரேந்திர மோடி கொண்டு வந்த விபத்து காப்பீடுக்கு மாதம் ரூ.1 தான் செலவாகிறது. இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படுகிறது. கிராம பஞ்சாயத்து வளர்ச்சிக்கு ரூ.80 லட்சமும், மாநகராட்சி வளர்ச்சிக்கு ரூ.21 கோடியும் அளிப்பவர் மோடி. அதனால், மாநகராட்சி வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு உள்ளது.

விருகம்பாக்கம் தொகுதியில் பல நோய்கள் ஆக்கிரமித்து இருக்கிறது. நோய்களுக்கு தீர்வு காண டாக்டரை (தமிழிசை சவுந்தரராஜன்) வேட்பாளராக பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. காலையில் எழுந்தவுடன் தலை வணங்கும் லட்சுமி தெய்வம் கையை (காங்கிரஸ் கட்சியின் சின்னம்) பிடித்து வருவதில்லை. உதயசூரியனுடன் (தி.மு.க. சின்னம்) இல்லை. இரட்டை விரலை (அ.தி.மு.க. சின்னம்) காட்டுவதில்லை.

தாமரை மலர் (பா.ஜ.க. சின்னம்) மீது தான் லட்சுமி தெய்வம் அமர்ந்து இருக்கிறது. செல்வம், முன்னேற்றம் என்றால் லட்சுமி. எனவே லட்சுமிகரமாக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஓட்டு போட்டால் செல்வமும், முன்னேற்றமும் உங்களை தேடி வரும். அதனால்,  வளர்ச்சி வேண்டும் என்றால் பா.ஜ.க.விற்கு வாக்களியுங்கள்" என்றார்.

பிரசார கூட்டத்தில் பா.ஜனதா மாநில வர்த்தக அணி செயலாளர் இல.ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் வினோஜ், நிர்வாகிகள் கிளாரன்ஸ், லலித் ஜெயின், நடிகை காயத்ரி ரகுராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ