Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விழித்திருங்கள்... கவனமாய் செயல்படுங்கள்..! ஜெயலலிதா தேர்தல் அலர்ட்

 

தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் விழிப்புடன் இருந்து, வாக்குப் பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும், எதிர் தரப்பினர் முறைகேடுகள் எதையும் நடத்திவிடாதபடி கவனமாய் செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2006 முதல் 2011 வரை மாநில அரசிலும், தொடர்ந்து பல ஆண்டுகள் மத்திய அரசிலும் அதிகாரப் பதவிகளில் அமர்ந்து கொண்டு, தமிழக மக்களுக்கு விரோதமாகவும், தேசத்தை சீரழிக்கும் வகையிலும் நடைபெற்ற 2ஜி ஊழல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் கட்டப் பஞ்சாயத்து, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நில அபகரிப்பு, வட்டார தாதாக்களாக திமுக-வினர் நடத்திய ரவுடி ராஜ்ஜியம் ஆகியவற்றையெல்லாம் தமிழக மக்களாகிய நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

மாநிலத்திலும், மத்தியிலும் தங்களுக்கு இருந்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் எல்லா தொழில்களையும் தங்கள் வசப்படுத்தி, தமிழகத்தில் இளைய தலைமுறை தொழில் முனைவோரின் வாய்ப்புகளை தட்டிப் பறித்த கொடுஞ் செயல்கள் ஏராளமாக நடைபெற்றதையும் நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள். உங்கள் பேராதரவோடு 2011ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நான், திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஒழித்தேன்; தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீராக நிலை நாட்டினேன்; மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் அளித்தேன்; மின்வெட்டால் இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளிரச் செய்தேன்;

தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்க்கையில் புது நம்பிக்கையை ஏற்படுத்தினேன். எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத வகையில் அரசியலில் போராடி வரும் நான், தமிழ் நாட்டின் ஜீவாதாரப் பிரசனைகளான காவேரி நதி நீர், முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் நமது உரிமையைக் காப்பாற்றும் தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் வரை சென்று பெற்று வந்தேன்.

பெண்கள் அனைத்து நிலைகளிலும் முழு உரிமையும், பாதுகாப்பும் பெற்றவர்களாக தலை நிமிர்ந்து வாழ்ந்திட, என்னுடைய ஆட்சிக் காலங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்திருக்கும் நான், தற்பொழுது தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட தனிச் சட்டம் உள்ளிட்ட புதிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

காவல் துறையும், அரசின் மற்ற துறைகளும் யாருடைய தலையீடும் இன்றி, எந்தவித குறுக்கீடும் இன்றி முழு சுதந்திரத்துடன் செயல்பட அனைத்து வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்திருக்கிறேன். தமிழ் நாட்டில் சிறுபான்மை மக்கள் எந்தவித தொல்லைக்கும் ஆளாகாமல் பாதுகாப்புடன் வாழ்ந்திடவும், பணியாற்றிடவும் எனது அரசு பாதுகாப்பு அரணாக என்றைக்கும் திகழ்ந்து வந்திருக்கிறது. 2011 முதல் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நிறைவேற்றி வந்திருக்கும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களால் தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு தனி மனிதரும் பயன் பெற்றிருக்கின்றனர். குறிப்பாகவும், சிறப்பாகவும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் உலக அரங்கில் பெற்றிருக்கும் உச்ச நிலையைத் தொடர்ந்து காத்திட, பெருநகரம் முதல் சிற்றூர் வரை எல்லா இடங்களிலும் வாழுகின்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்பட்ட சாதனை வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும்.

இந்த சாதனைச் சரித்திரம் தொடர்ந்திடும் வகையிலும், தமிழகத்தில் விவசாயம், கல்வி, மகளிர் மேம்பாடு, சிறுபான்மையினர் நலன், சிறு, குறு தொழில் வளர்ச்சி ஆகியன மேலும் சிறப்புடன் நடைபெறுவதை உறுதி செய்கின்ற வகையிலும், பல்வேறு வாக்குறுதிகள் உள்ளடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நான் செய்து முடித்திட, 16.5.2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும், உங்கள் பொன்னான வாக்குகளை இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னத்திற்கு அளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அனைவரும் விழிப்புடன் இருந்து, வாக்குப் பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும், எதிர் தரப்பினர் முறைகேடுகள் எதையும் நடத்திவிடாதபடி கவனமாய் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close