Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்களுக்காக உழைத்திட உத்தரவிடுங்கள்..! கருணாநிதியின் வேண்டுகோள்



உண்மையானதொரு ஜனநாயக ஆட்சி உதயமாக உங்கள் அனைவருடைய நல்லாதரவையும் வேண்டி  எனது அன்பான கோரிக்கையினை உங்கள் முன் வைக்கின்றேன்.  உங்களுக்காக உழைத்திட உத்திரவிடுங்கள் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "15வது சட்டப் பேரவைக்கான  பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெற  இன்னும் 24 மணி நேரமே  உள்ளது!  ஆடம்பரம், ஆணவம், அகம்பாவம் ஆகியவற்றின்  உச்சியிலே அமர்ந்துள்ள ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டு காலத்தில்  யாரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை;  “எனது அரசு”  -  “நான் அறிவிக்கிறேன்” என்று அவர் விடுத்த ஒவ்வொரு அரசு அறிக்கையிலும்  தொக்கி நிற்கும் தன்முனைப்புத் தொனியை  யாரும் மறக்கவில்லை.   எந்த எதிர்க் கட்சியினரையும்  பேரவையில் ஜனநாயக ரீதியாக  எதிர்க் கருத்துகளைப் பேசவோ, ஆக்க பூர்வமாக விமர்சிக்கவோ, குரல் எழுப்பவோ அனு மதிக்கவில்லை என்பதை நாடே கவலையுடன்  பார்த்துக் கொண்டிருந்தது.
 
2011ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தவுடன்,  வாரந்தோறும்  செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று ஜெயலலிதா கூறினார்.  ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவும் இல்லை.  முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் இல்லை.  அதுபோலவே  அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, விவசாயச் சங்கங்களின் பிரதி நிதிகளையோ, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையோ  இந்த ஐந்தாண்டு கால வரலாற்றில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது.   தற்போது தேர்தல் என்றதும், “மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்”  என்று கூறுகிறாரே,  அந்த மக்களை எங்கேயாவது, எந்த மாவட்டத்திற்காவது  சென்று  கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது தான். 

குறிப்பாக விளக்க  வேண்டுமானால்,  “மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்”  என்பதற்கு மாறாக “எனக்காக நான்,  எனக்காகவே நான்; சசிகலா மற்றும் பரிவாரங்களுக்காக மட்டுமே நான்”  என்று சொல்லிக் கொள்ளலாம்.  தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க.  வெற்றி பெற்று விட்டால்,  இதைத் தான் மறுபடியும் அவரே சொல்லிக் கொள்வார். “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றி “அம்மா நாடு” என்று 110-வது விதியின் கீழ் அறிவித்து விடுவார்.

2011-ல் ஆட்சியை ஆரம்பித்த போது கழக ஆட்சியில் அரசுக்காக வாங்கப்பட்ட கடனை எடுத்துக் காட்டி,  அந்தக் கடனின் அளவைக் குறைப்பேன் என்றெல்லாம் அறிவித்தார். “தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும்  தலை நிமிர்ந்து  நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப் படும்” என்றெல்லாம் தேர்தல் அறிக்கையிலேயே ஜெயலலிதா சொன்னார். ஆனால் தற்போது என்ன நிலைமை?  மின்வாரியக் கடன்களைச் சேர்க்காமல்,  தமிழக அரசுக்கு உள்ள மொத்தக் கடன்  2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய்.   அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வருடைய  தலையிலும் 28 ஆயிரத்து 778 ரூபாய் கடன் சுமை ஏறி இருக்கிறது.

ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும், அதிலே தி.மு. கழகத்தின் மீது குறை கூறியும் தெரிவித்திருக்கிறார்.  இலங்கைத் தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா?  ஜெயலலிதா  16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில்  நிறைவேற்றிய தீர்மானம் மறந்து விட்டதா? ஜெயலலிதா மறந்து விட்டாலும், உலகத் தமிழர்கள் மறக்கவில்லை.  இன்று இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா வடிக்கும் நீலிக் கண்ணீரைக் கண்டு யாரும் ஏமாறப் போவதில்லை.

17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ண வில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல்  விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”  என்று கூறியதை ஜெயலலிதாவே மறந்து விட்டாரா?

அடுத்து, ஜெயலலிதா தனது அறிக்கையில் குடும்ப அரசியல் என்றெல்லாம்  கூறியிருக்கிறார். ஆனால் அவருடன் நிழலாகத் தொடர்ந்து  வரும் சசிகலா யார்? இளவரசி யார்? சுதாகரன் யார்?  தினகரன் யார்? திவாகரன் யார்? ராவணன் யார்? அந்தக் குடும்பங்களெல்லாம் ஜெயலலிதாவோடு இரண்டறக் கலந்தவை தானே?  “ஜாஸ் சினிமாஸ்” திரை அரங்குகளையும், டாஸ்மாக்குக்காக மதுவகை களைத் தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தையும், கொடநாடு எஸ்டேட்டையும், சிறுதாவூர் பங்களாக்களையும், மற் றும் கணக்கிலடங்காத சொத்துக்களையும், பணப் பரிமாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களையும்  நிர்வகிப்போர் எல்லாம் யார்? இவ்வளவு அழுக்குகளையும்  குவித்து வைத்திருக்கும் பின்னணியில், குடும்ப அரசியல் பற்றி ஜெயலலிதா பேசலாமா?  பேசுவதற்கு ஏதாவது அருகதை உண்டா?

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலே எந்தத் தரப்பினராவது திருப்தி யாக இருந்தது உண்டா? கழக ஆட்சியில் நியமனம் பெற்ற காரணத்திற்காக மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப் பெற்று, அவர்கள் உச்ச நீதி மன்றம் வரை சென்று அவர்களுக்குச்  சார்பாக தீர்ப்பு பெற்ற பிறகும் மீண்டும் அவர்களைப் பணியிலே நியமிக்க மனம் வரவில்லை என்றால் அது கல் நெஞ்சத்தின் அடையாளம் தானே? பிறகு தன்னைத் “தாய்” என்று அழைத்துக் கொள்வதற்கு என்ன தகுதி.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமான அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடரலாமா? ஏற்கனவே இந்த ஐந்தாண்டுகளில் காடாகி விட்ட நாடு, பாலைவனமாகிப் பாழாகிப் போய் விடாதா?  தமிழ்நாட்டு மக்கள் இனியும் அதை அனுமதிக்கலாமா?  234 தொகுதிகளிலும்  நானே போட்டியிடுவதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று நான் எழுதியவுடன்,  எல்லாவற்றிலும் “காப்பி” அடிக்கும் ஜெயலலிதாவும்  என்னைப் பின்பற்றி, 234 தொகுதிகளிலும் அவரே வேட்பாளராக நிற்பதாக இன்றைய அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார். என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளாம், தமிழ்ப் பெருமக்களே, கழகத்தைப் பொறுத்தவரை 234 தொகுதிகளிலும், நான் அல்ல, பேரறிஞர் அண்ணாவே போட்டியிடுகிறார்;’ தந்தை பெரியாரே போட்டி யிடுகிறார்;  திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது; உண்மையான திராவிட இயக்கம்  கூட்டணி கட்சிகளோடு போட்டியிடுகிறது.
  
உங்களுடைய வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்து தமிழகத்திலே நடைபெறுகின்ற கொடுங்கோன்மை ஆட்சியை அகற்றிட உறுதி மேற்கொள்ள வேண்டிய நேரம் இது! உண்மையானதொரு ஜனநாயக ஆட்சி உதயமாக உங்கள் அனைவருடைய நல்லாதரவையும் வேண்டி  எனது அன்பான கோரிக்கையினை உங்கள் முன் வைக்கின்றேன்.   உங்களுக்காக உழைத்திட உத்திரவிடுங்கள்!  சொன்னதைச் செய்வோம்; செய்வதைத் தான் சொல்வோம்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close