Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருநாவலூரில் பணம் பட்டுவாடா... பா.ம.க. வேட்பாளர் தேர்தல் அலுவலருடன் மோதல்! (வீடியோ)

விழுப்புரம்: திருநாவலூரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க கோரி உளுந்தூர்பேட்டை தொகுதி பா.ம.க. வேட்பாளர் பாலு தேர்தல் அலுவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் ஒன்றியத்தின் சில கிராமங்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தரப்பில் வாக்காளர்களுக்கு தலா 500  ரூபாய் வழங்கப்படுவதாக பொது மக்கள் தரப்பில் பறக்கும் படையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பணம் கொடுத்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பா.ம.க. வேட்பாளர் பாலு, தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், திடீரென சுமார் 30,000 ரூபாய் ரொக்க பணத்தை அலுவலர் ராஜேந்திரன் தலையில் அபிஷேகம் செய்வது போல் கொட்டியதுடன் கட்சிக்காரர்கள் கொடுத்த பணக்கட்டுகளை அவர் மீதும் வீசியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது வேட்பாளர் பாலு, ''நல்லா சந்தோஷமாக இருங்க சார். ஊர் பூரா பணத்தை இறைத்திருக்கிறார்கள். இந்த தொகுதி முழுக்க அ.தி.மு.க., தி.மு.க.வினர் பணத்தை இறைத்திருக்கின்றனர். நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். இந்தாங்க எல்லா பணத்தையும் நீங்க வைத்துக்கொள்ளுங்கள். இது என்னுடைய கம்ப்ளெயிண்ட். நீங்க யார் வேண்டுமானாலும் ஜெயித்ததாக சொல்லுங்க. என்ன வேணும்னாலும் பண்ணுங்க.

நான் சத்தியம் செய்து சொல்கின்றேன். எங்களை பத்தி நினைக்க உங்களுக்கு நேரம் கிடையாது. எங்களுக்கு நீங்கள் சரியான பதிலையும் சொல்ல மாட்டீர்கள். சார் எனக்கு ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகி சட்டமன்றத்தில் போய் உட்கார வேண்டும் என்ற அவசியமே கிடையாது. என்னுடைய கேள்வி, இந்த தேர்தலை இப்படி தான் நடத்துவீர்கள் என்று சொன்னால், இது ஒரு தேர்தலே கிடையாது.


இதற்கு ஒரு தேர்தல் ஆணையம் தேவை இல்லை. இதற்கு ஒரு தேர்தல் அலுவலர் தேவை இல்லை. இதுவா மக்கள் ஆட்சி. நான் ஒரு வழக்கறிஞர். நான் எதற்காக தெரு தெருவாக எல்லோர் கால்களிலும் விழுகிறேன். நான் என்ன முட்டாளா? இரண்டு கட்சிக்காரங்களும் ஊர் எல்லாம் பணத்தை கொடுப்பாங்க. நாங்க மட்டும் தெரு தெருவா போய் அம்மா தாயே எங்களுக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்கனும். கடைசியில நீங்க, இவர்தான் இந்த சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்வீர்கள்.

நான் நேற்றே புகார் கொடுத்தேன் அதற்கு நீங்கள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு தி.மு.க.வினர் பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். சார் நீங்க இதுக்கு பிறகு என்னத்த எதிர்பார்க்குறீர்கள்" என்று ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.

இந்நிலையில், இ ந்த விவகாரம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் பாலு உட்பட 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாலு மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ