Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துட்டுக்கு ஓட்டு - மக்களை ஊழல்வாதிகளாக்கும் கட்சிகள் ?

 
 
ட்டுப் போடுவது ஜனநாயகக் கடமை; ஓட்டுப் போட காசு வாங்குவது ஜனநாயக உரிமை - இதுதான் இப்போதைய ஜனநாயகப் போக்காக இருக்கிறது.

1952 முதல் பொதுத்தேர்தலிலேயே, தமிழ்நாட்டில் காங்கிரஸ்காரர்கள் பணம் கொடுத்ததாக காங்கிரஸ்காரரான தன் அப்பா சொன்னதாக, எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், சமீபத்தில் ஒரு நாளிதழில் எழுதிய கட்டுரையில் சொல்கிறார். ’நாங்கள் ஏழைகளுக்குத்தான் பணம் கொடுத்தோம். தேர்தலைத் திருவிழாவாகத்தான் மக்கள் நினைக்கிறார்கள். திருவிழா நாட்களில் பெரியவர்களிடம் பணம் வாங்குவதைப்போன்ற சம்பிரதாயம்தான் அது’ என்று தன் அப்பா குறிப்பிட்டதாகவும் பி.ஏ.கிருஷ்ணன் தன் கட்டுரையில் பதிவு செய்கிறார்.

முதல் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸைவிட கம்யூனிஸ்ட்கள் உருவாக்கிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிதான் அதிக எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்தது. ஆனால் காங்கிரஸுக்குத்தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிடாத ராஜாஜி, அவசர அவசரமாக மேலவை உறுப்பினர் ஆக்கப்பட்டு, முதல்வராகவும் ஆக்கப்பட்டார். எனவே முதல் கோணலில் இருந்து தொடங்கியதுதான் நம் ஜனநாயகக் கோணல்.

இது ஒருபுறமிருக்க, ஓட்டுக்குப் பணம் கொடுப்பது என்பது ஏதோ சில தொகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்தன. மூக்குத்தி, சில்வர்குடம் போன்ற பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டதும், தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டதும் நடந்தன என்றாலும், இவை தமிழகம் முழுக்கப் பரவலாக்கப்படவில்லை. ஒருகாலத்தில் குடிப்பது என்பது தவறான பழக்கமாக சமூகத்தில் நினைக்கப்பட்டு, மறைந்து மறைந்து செய்யும் நடவடிக்கையாக இருந்ததுபோய், தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைப் போல, இப்போது ஓட்டுக்குப் பணம் அளிப்பதும் ஜனநாயகச் சடங்குகளில் ஒன்றாக ஆகிவிட்டது. இத்தகைய சடங்குக்கு அங்கீகாரம் அளித்த பெருமைக்குரியவர் மு.க.அழகிரி. அவரால் அறிமுகப்படுத்த ‘திருமங்கலம் ஃபார்முலா’ தமிழகத்தின் ’பெருமை’யை உலகம் அறியச் செய்தது.

திருமங்கலத்துக்குப் பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியின்போது நடந்த இடைத்தேர்தல்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் பணம் புகுந்து விளையாடியது. தி.மு.க.வுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வும் கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த இடைத்தேர்தல்கள், 2014 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை விரிவுபடுத்தி ’ஜனநாயகக் கடமை’யை செவ்வனே நிறைவேற்றியது. தங்களுக்கு ஓட்டுக்குப் பணம் அளிப்பது விடுபட்டுப் போனால், கட்சிக்காரர்கள் வீடுகளுக்கே சென்று ‘உரிமை’யுடன் பணம் கேட்கும் அவலம் தொடர்கிறது. இந்தத் தேர்தலில்,  தி.மு.க. உருவாக்கிய திருமங்கலம் ஃபார்முலாவே பல தொகுதிகளில் தங்களுக்கு எதிராகத் திரும்புவதைக் கண்டு தி.மு.க.காரர்கள் திகைத்துப்போனார்கள். தொடக்கத்தில் ‘அ.தி.மு.க. ஆட்சி மீதான அதிருப்தி தங்களுக்குச் சாதகமாகத்தான் திரும்பும்’ என்று நினைத்திருந்தவர்கள், அ.தி.மு.க. பணப்பட்டுவாடாவை ஆரம்பித்ததும் பதறிப்போனார்கள். பிறகு...? அவர்களும் பணப்பட்டுவாடாவை ஆரம்பித்தார்கள். ‘ஜனநாயகத் திருவிழா’ களைகட்டியது.

இப்போது தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி, தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ‘234 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் இதே நிலைதான் என்னும்போது ஏன் அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் மட்டும் நடவடிக்கை?’, ’பணப்பட்டுவாடா செய்த வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்யாமல் தேர்தலை மட்டும் ஒத்திவைப்பதால் என்ன பலன்?’, ‘232 தொகுதிகளில் தேர்தல் முடிந்து முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டால், அது இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளின் மீது தாக்கம் செலுத்தாதா?' என்று பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எல்லாக் கேள்விகளுமே தவிர்க்கமுடியாத, நியாயமான கேள்விகள்தான்.

அரசியல்வாதிகள் பணம் கொடுத்துப் பழக்கப்படுத்துகிறார்கள் என்றால், மக்களும் ‘ஓட்டுக்குப் பணம் வாங்கமாட்டோம்' என்று உறுதியாக நிற்கத் தயாராயில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, ‘அ.தி.மு.க., தி.மு.க. இரண்டும் ஊழல் கட்சிகள். இவற்றுக்கு மாற்று வேண்டும்’ என்ற வாதம் வலுவாகப் பேசப்பட்டது. மக்களும் மாற்றைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வந்திருக்கும் எல்லாக் கருத்துக்கணிப்புகளுமே ‘தி.மு.க. அல்லது அ.தி.மு.க. தலைமையில்தான் ஆட்சி’ என்கின்றன. அப்படியானால் இதுவரை சொல்லப்பட்ட வாதங்கள் எல்லாம் பொய்யா? இந்தக் கருத்துக்கணிப்புகள் பலிக்குமா என்பதை இன்னும் மூன்று நாட்களில் வரப்போகும் முடிவுகள் சொல்லிவிடும். ஆனால் ‘மக்கள் ஊழலை வெறுக்கிறார்கள்’ என்கிற கருத்து நிஜமில்லை என்பதுதான் உண்மை.

மக்கள் ஊழலை எதிர்க்கிறார்கள்தான். ஆனால் அது அப்போதைய ஐந்தாண்டுகால ஆட்சி ஊழல் மீதான எதிர்ப்பே தவிர, ஒட்டுமொத்தமான ஊழல் எதிர்ப்பு அல்ல. 1991 ஜெயலலிதா ஆட்சி ஊழல்மயமான இருண்டகால ஆட்சி என்பதால் ஜெயலலிதாவையே பர்கூர் தொகுதியில் தோற்கடித்தார்கள். ஆனால் அதே 1991 ஊழலுக்காக, 2014 குன்கா தீர்ப்பால் ஜெயலலிதா சிறைக்குப் போனபோது அனுதாபப்பட்டவர்கள்தான் அதிகம். எனவே பொதுமக்களின் ஊழல் எதிர்ப்பு என்பது, ஐந்தாண்டுகால ஊழல் எதிர்ப்பாக மட்டும் இருக்கும்வரையில் அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. 

மேலும் தனியார் பள்ளிகளுக்கும் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் டொனேஷன் கொடுப்பதற்குத் தயங்காத மக்கள், அரசு வேலைக்கு லஞ்சம் கொடுக்க கூச்சப்படாத மக்கள், ஓட்டுக்குப் பணம் வாங்க மட்டும் வெட்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  லோக் ஆயுக்தாவை அமைப்போம்’ என்று வாக்குறுதி கொடுப்பதை ஜனநாயகத்தின் அவல நகைச்சுவை என்று எடுத்துக்கொள்வதைத் தவிர வேறுவழியுமில்லை.

- சிவா

எடிட்டர் சாய்ஸ்

MUST READ