Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் 19-க்கு முன் தேர்தல் நடத்துங்கள்! -முத்தரசன்

திருவாரூர்: வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் வருகின்ற 19-ம் தேதிக்கு முன் தேர்தல் நடத்துங்கள் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது வாக்கை பதிவு செய்தார்.

அப்போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. வாக்குச்சாவடியில் ஜெனரேட்டர் வசதி செய்யப்படாததால் இருட்டாக இருந்தது. இதனால் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், மின்தடையும் ஏற்பட்டதால் பொதுமக்கள் வேட்பாளர் புகைப்படம், கட்சி சின்னங்களை பார்க்க முடியவில்லை. திருத்துறைப்பூண்டி தொகுதியில் உள்ள 83 வாக்குச்சாவடி மையங்களிலும் இதே நிலை நீடித்தது.

இது தொடர்பாக முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழகத்தில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பே அறிவித்தது. ஆனாலும், வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் கமிஷன் தேவையான வசதிகளை செய்யாதது கண்டிக்கதக்கது. மின்சார வசதி, ஷெட் வசதி செய்யப்படாததால் மழையில் நனைந்து கொண்டும், இருட்டிலும் பொதுமக்கள் சிரமப்பட்டு வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடபெற்றுள்ளது. இதனை தடுக்க தேர்தல் கமிஷன் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் மவுனமாக உள்ளது. திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட ரூ.570 கோடி சிக்கியது. இதனை 10 மணிநேரத்துக்கு பிறகு வங்கிக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். இதில் மர்மம் நீடிக்கிறது.

ஏற்கனவே வைகோ கண்டெய்னர் லாரிகளில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டு வரப்பட்டது என்று கூறினார். ஆனால், அதனை நம்பாமல் பலர் அவரை தப்பாக பேசினார்கள். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் பணபட்டுவாடா அதிக அளவில் நடந்ததால் அங்கு தேர்தல் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் 19-ம் தேதிக்கு முன்பு தேர்தல் நடத்த வேண்டும். இல்லை என்றால் அங்கு நியாயமான முறையில் வாக்குப்பதிவு நடைபெறாது" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்