Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை இப்படிதான் முடிவு செய்ய வேண்டும்- டி. ராஜேந்தர் யோசனை!

 

சென்னை: "சின்னம் பார்த்து ஓட்டுப் போடக்கூடிய இந்த நாட்டிலே என்றைக்கு நல்ல எண்ணம் பார்த்து ஓட்டுப் போடும் நிலை வருகிறதோ அன்றைக்குதான் இந்த நாடு உருப்படும்" என்று நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் இன்று தனது வாக்கினைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், "லட்சிய திராவிட இயக்கத்தின் தலைவர், நடிகர், இயக்குநர் என்ற முறையில் அல்லாமல் ஒரு சாதாரண குடிமகன் என்று வாக்களித்திருக்கிறேன். மழை பெய்தாலும் கூட ஆர்வத்தோடு வந்து வாக்களித்த மக்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாருமே ஓட்டுரிமையை இழந்து நிற்கக்கூடாது.

திரையுலக பிரபலமாக இருந்தாலும், 'நான் வரிசையில் எல்லாம் நிற்க மாட்டேன்' என்று சொல்லாமல் வரிசையில்தான் நிற்க விரும்புகிறேன். நான் சட்டத்தை மட்டுமே மதிக்க விரும்புகிறேன். சட்டத்தை மதிக்கும் அளவுக்கு மக்கள் சரியான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

தற்போது நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, பணநாயகம் இருக்கிறதா என்று பெரிய பட்டிமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்று சொல்லும்போது எனக்கு வாக்காளர்களைக் கொச்சைப்படுத்துவது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. படித்த மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். பாமர மக்கள் தெளிவாகவும் இருக்கிறார்கள், நெளிவு சுளிவாகவும் இருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

யார் பணம் கொடுத்தாலும் கையில் இருக்கக்கூடிய அந்த நோட்டை பார்க்காதீர்கள். உங்களுடைய அடுத்த 5 வருட வாழ்க்கையை நிர்ணயிக்கக்கூடியது இந்த ஓட்டு. மக்களுக்கு என்ன திட்டம் போட்டு அதில் நாம் என்ன ஆதாயம் அடையறது என திட்டம் போடுபவர்களை மனதில் வைத்துக் கொண்டு மக்கள் ஓட்டுப்போட வேண்டும் என்பதுதான் என் வாதம். உங்களுடைய 5 வருட எதிர்கால வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்.

வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டைவிட்டு சென்றுவிட்டாலும், இந்த நாட்டில் இருக்கும் கொள்ளைக்காரர்களிடம் இருந்து எப்படி மீட்பது என்று நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நான் எந்த கட்சி சார்பாகவும் பேசவில்லை, நடுநிலைமையோடு பேசுகிறேன். யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, சட்டமன்றத்திற்கு சென்றாலும் சரி தட்டிக் கேட்க வேண்டும்.

சின்னம் பார்த்து ஓட்டுப்போடக்கூடிய இந்த நாட்டிலே,என்றைக்கு நல்ல எண்ணம் பார்த்து ஓட்டுப்போடும் நிலை வருகிறதோ அன்றைக்குதான் இந்த நாடு உருப்படும். தேர்தலில் யார் நிற்கிறார் அவருடைய தகுதி என்ன என்று தெரிந்து கொள்ளாமல் ஒரு தேர்தல் நடக்கிறது என்றால் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம். இவை எல்லாம் என்றைக்கு களையப்படுகிறதோ, அன்றுதான் இந்த நாடு முன்னேறும்" என்றார். 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close