Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த முதல்வருக்கு இளைஞர்கள் சார்பாக ஒரு கடிதம்

தேர்தல் முடிவுற்றது. பிரசாரங்கள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்கள், தேர்தல் ஆணையம் என  அனைவரும் சற்றே ஆசுவாசப் படுத்திக்கொள்ள இது நேரம். மக்களோ, 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் நான் உழைத்தால்தான் எனக்கு சோறு' என செல்லத் துவங்கி விட்டனர். ஆனால் கட்சித் தலைமைகளுக்கும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் முடிவுகள் வெளியாகும் வரை உறக்கம் வரப்போவதில்லை. தமிழ்நாடு முதன்முறையாக கண்ட பன்முனைப் போட்டி என்பதால் பிரதான கட்சிகளே ஓட்டுக்கள் பிரிந்து ஓய்வு எடுக்கவேண்டிவருமோ எனும் சிறு அச்சத்தோடு இருக்கின்றன.

அடுத்த முதல்வர் யாராக இருந்தாலும் சரி, இதுவரை அவர் எப்படி இருந்திருந்தாலும் சரி, இளைஞர்கள் சார்பாக சில வேண்டுகோள்களை அவர்களிடம் முன்வைக்க விழைகிறேன். மத்தியில் ஆள்பவர்களிடம் கடிதங்கள் எழுதப்போகும் தமிழக முதல்வருக்கு (யாராக இருந்தாலும் கடிதம் மட்டுமே எழுதுவது வாடிக்கை) இளைய சமுதாயம் சார்பாக இந்தக் கடிதம்.

தமிழ்நாட்டில் இளைஞர்களின் ஓட்டு சதவிகிதம், பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. முன்போல இல்லாமல், 18 வயது ஆனவர்கள் அனைவரும் துரிதமாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற தேர்தல் ஆணையமும் வசதிகள் செய்துதந்தன. ஆனால் தேர்தலுக்கு பின்னர், அதிகம் ஏமாற்றம் அடைவதும் இளைஞர்களே. நாட்டை ஆள்பவர், தான் ஆளும் காலத்திலிருந்து அடுத்த 10 தலைமுறை குடிமக்களுக்குத் தேவையான விஷயங்களை மனதில் வைத்து அதற்கேற்ப திட்டங்களை வகுத்தலே சிறந்தது. ஆனால் இது வரையில் அப்படி நடந்ததாக தெரியவில்லை.

இந்த முறை ஆட்சி அமைக்கப் போகும் அரசு, தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனாலும், கீழ் உள்ள கோரிக்கைகளை பரிசீலித்து செயல் படுத்தினால் அடுத்த தேர்தலில் கண்டிப்பாக இளைஞர்கள் ஆதரவு உங்களுக்குத்தான்.

1.    பள்ளிக் கல்வி தரம் உயர்த்துதல்

விவசாயம் தழைக்க விதைநெல் எப்படி அவசியமோ, நாடு செழிக்க மாணவர்கள் அவசியம், தற்போதைய சமச்சீர் கல்வி ஓரளவு தரமானதாக இருந்தாலும் கூட, பிற மாநில மாணவர்களுடன் நம் மாணவர்கள் போட்டி போடும் சமயத்தில் சற்றே தரம் குறைவாகத் தெரிகிறது. சி.பி.எஸ்.சி தரத்திற்கு நமது பாடத்திட்டத்தை உயர்த்தி, தகுதியான ஆசிரியர்களை நியமித்து பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது நன்று. மேலும் ஏட்டுக் கல்வியில் மட்டுமே மாணவர்களை சிறக்க வைக்காமல், அது நடைமுறைக்கு எப்படி சாத்தியம், அந்த அறிவை பிரயோகிப்பது எப்படி என்று உணர்த்துவது அத்தியாவசியமான ஒன்று.

 2. பட்டப் படிப்புகள் குறித்த விழிப்பு உணர்வு

பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள் வந்த வேகத்தில் இன்று பல மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்கே குவிகின்றனர். ஒருவேளை பன்னிரெண்டாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்ணோ, அல்லது கல்லூரியில் சேர பணம் இல்லாவிட்டாலோ, வேறு பட்டப் படிப்பு இல்லாதது போல இன்றும் பலர் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். விபரீத முடிவாக சிலர் தற்கொலைக்கே முயலுவதும் நடக்கிறது. இந்த நிலை பரவலாக கிராமப் புறங்களிலும், வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பகுதிகளிலுமே நடக்கிறது. இதற்காக, அரசாங்கமோ, கல்வித் துறை மூலமாகவோ மாணவர்களுக்கு விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தலாம். பொறியியல் மட்டுமே உயர் கல்வி என்று நினைக்கும் பலரிடம், இருக்கும் பல பட்டப் படிப்புகள், அதனுடைய வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் குறித்து அவர்களுக்குத தெரியப்படுத்தினால் பட்டப் படிப்பை தொடர பலருக்கு உதவியாக இருக்கும்.

3. பட்டப் படிப்பில் செயல்முறைக் கல்வி

பள்ளிக்கல்வி வரையில் ஏட்டுக் கல்வி என்று கூறினால் கூட அது சற்றே நியாயமானது, ஆனால் கல்லூரிகளிலும் வெறும் ஏடுகளை படித்து மட்டுமே மதிப்பெண் என்பது சற்றே சிக்கலான ஒன்று. செயல்முறைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே எந்தத் துறையாக இருந்தாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படும். இந்த நிலையில் கல்லூரிக்கு வந்த பின்னும் மனப்பாடப் பகுதி போல மாணவர்கள் பாடங்களை படித்து தேர்வுகளில் உமிழ்வது சரியான நடைமுறை இல்லை. எனவே அனைத்துக் கல்லூரிகளிலும் செயல்முறைக் கல்வியை அமல்படுத்த வேண்டும்.

 4. வேலை வாய்ப்பு

மேற்கூறிய கல்விப் புரட்சியை கொண்டு வந்தால், வேலைக்குத் 'தகுதியான' இளைஞர்கள் கிடைப்பதில் எந்தத் தடையுமில்லை. அரசாங்க வேலை என்றால் யாருக்கும் கசக்காது, எனவே, அரசுப் பணிகளை தகுதி பெற்ற இந்த இளைஞர்களால் நிரப்ப வேண்டும். பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் ஆயிரக் கணக்கான பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அவற்றைப் பற்றி பலருக்கும் தெரியாமல் போவதும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு காரணம். அதைப் பற்றி முறையாக விளம்பரங்கள் கொடுத்து, தகுதியான ஆட்களால் நிரப்ப வேண்டும். மேலும் முடிந்த இடங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி செம்மைப் படுத்த வேண்டும்.

5.    வேளாண் வளர்ச்சி

என்ன தான் பணம், பொருள் ஈட்டினாலும், உணவின்றி வாழ இயலாது. வேளாண்துறையில் புதிய புதிய சிந்தனைகளை, புதிய முயற்சிகளை புரட்சிகரமாக உண்டு செய்து, அதில் இளைஞர்களை ஈடுபடுத்தினால் விவசாயமும் செழிக்கும், விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் இளைஞர்கள் அறிவர்.

 6. ஊழலை ஒழித்தல்

லஞ்சம், ஊழல் போன்ற சமூக தீங்குகளை அறவே ஒழித்து, இளைஞர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கி, அரசு துறைகளில் துவங்கி, நாடு முழுவதும் இருக்கும் “முறையற்ற” பழக்கங்களை குறைக்க வேண்டும்.
மேற்சொன்னவற்றை அமைய இருக்கும் அரசாங்கம் நிறைவேற்றினால் அடுத்தத் தேர்தலில், பிரசாரத்திற்கு நீங்கள் கொளுத்தும் வெயிலில் எங்களை தேடி வரவேண்டியதிருக்காது. தேர்தல் நாளன்று வாக்கு செலுத்த வரிசையில் வந்து நிற்பார்கள் எம் இளைஞர்கள்.

- பா. அபிரக்ஷன்
(மாணவப் பத்திரிகையாளர்)

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close