Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கூட்டுக் குடும்பமாக வாழ்வது தப்பா...? ரேஷன் கார்டு தர மாட்டேங்குறாங்க!'

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் இருக்கிறது பூசாரிப்பட்டி கிராமம். அங்கு 'பெருமாள் நாயக்கர் குடும்பம்' என்றால், அந்த சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வளவு பிரபலம். காரணம், 211 பேர் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார்கள். கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து வரும் நிலையில் ஒரே வீட்டில், ஒரே குடும்பமாக இந்த காலகட்டத்தில் வாழ்வது மிகப்பெரிய சாதனைதான்.



பூசாரிப்பட்டியை சேர்ந்தவர்கள் தங்கமய்யா (வயது 79), அவரது சகோதரர் பெருமாள்சாமி நாயக்கர் (75) அவரது தம்பி கோவிந்தன்( 72). இவர்கள் தங்களது மகன்கள், மகள்கள், பேரன்கள் என கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு பெரிய வீட்டில் 21 குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றன.

இந்த குடும்பத்தின் நல்லது கெட்டது, வரவு செலவு எல்லாவற்றையும் தீர்மானிப்பது பெருமாள்சாமி நாயக்கர்தான். பி.ஏ. வரலாறு பட்டதாரியான பெருமாள்சாமியின் பேச்சுக்கு, வீட்டில் உள்ள 211 குடும்ப உறுப்பினர்களும் கட்டுப்படுகின்றனர். அவரின் பேச்சுக்கு வீட்டில் அவ்வளவு மரியாதை.

இவர்களது வீட்டில் மட்டும் 76 ஓட்டுக்கள் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் வேட்பாளர்கள்,  இவர்களது குடும்ப ஓட்டை அப்படியே அள்ள படாதபாடு படுவார்கள். ஆனால் பெருமாள்சாமியும் அவரது குடும்ப உறுப்பினர்களும், தேர்தலுக்கு முதல்நாள் அமர்ந்து பேசி, யாருக்கு ஓட்டுப் போடுவது என்று முடிவு செய்வார்கள்.

இது தொடர்பாக பெருமாள்சாமி நாயக்கரை சந்தித்துப் பேசினோம்...

‘‘நாங்கள் எல்லோரும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசிக்கிறோம். நான்காவது தலைமுறையாக அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சிகள், அவர்களது வாரிசுகள் என்று ஒரே குடும்பமாக வசிக்கிறோம். பட்டாசு ஆலை, விவசாயம்தான் எங்களது தொழில். நன்றாக படிக்கும் எங்கள் குழந்தைகளை அவர்கள் ஆசைப்படும் உயர் படிப்பை படிக்க வைத்துவிடுவோம். படிக்க விருப்பம் இல்லை என்றால் விவசாய வேலைகளை செய்ய விடுவோம்.

நான் ஏதோ சர்வாதிகாரிபோல், குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொல்வதில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் கலந்து பேசிதான் நல்லது கெட்டதில் முடிவு எடுப்போம். ஓட்டுப்போடுவதிலும் அப்படித்தான் முடிவு எடுப்போம். பெரும்பாலும் 76 பேரும் அப்படி முடிவெடுத்துதான் வாக்களிப்போம்.

ஆனால் எங்கள் குடும்பத்தில் 21 ரேஷன்கார்டுகளை மட்டுமே அரசு அதிகாரிகள் வழங்கி உள்ளனர். இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ‘ஒரே வீட்டில்தானே வசிக்கிறீர்கள். தனித்தனி வீட்டில் வசித்தால்தான் ரேஷன்கார்டு வழங்க முடியும்’ என்று கை விரிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வாழ்வது அவ்வளவு தப்பா? எங்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ரேஷன் கார்டு கூடவா கொடுக்கக் கூடாது. ரேஷன் கார்டு இல்லாததால் குடும்ப உறுப்பினர்களில் இன்னும் 50 பேருக்கு வாக்காளர் அட்டை இல்லை. இது மட்டுமின்றி ஆதார் கார்டு உள்பட அரசின் பல்வேறு சலுகைகளை பெற முடியவில்லை.


ஒவ்வொரு தேர்தலின்போதும், எங்கள் குடும்ப ஓட்டுகளைக் கேட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வருவார்கள். அவர்களிடம் ரேஷன் கார்டு கோரிக்கை வைப்போம். ‘சரி’ என்று சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் ரேஷன் கார்டு கிடைக்காது. இதுதான் எங்களது நிலைமை. அதற்காக சோர்ந்துவிடவில்லை.

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விவசாயம், பட்டாசு தொழில் செய்து சம்பாதித்து வருகிறோம். எங்களது உழைப்புதான் எங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறது. அதனால் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்கே வாக்களிப்போம். ஆனால் யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்று கேட்காதீர்கள். அதை சொல்லக்கூடாது. எங்கள் குடும்ப உறுப்பினர்கள்கூட அதை வெளியே சொல்ல மாட்டார்கள்.’’

-எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ