Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போயஸ் கார்டனில் பட்டாசு, லட்டு... அறிவாலயத்தில் பட்டாசு...! - காத்திருக்கும் கழகங்கள்

 

ந்தாண்டு அமைச்சரவையின் பதவிக்காலம், வருகிற  மே 22 ம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. ஆளுநர் அழைப்பின் பேரில், புதிய அமைச்சரவை 23 ம் தேதியில் இருந்து அவர்கள் விரும்புகிற ஏதாவதொரு சுபமுகூர்த்த நாளில் பதவியேற்கும்.

அந்த தேதியைச் சொல்லப் போவது, ஆளும் அதிமுகவா, ஆண்ட திமுகவா அல்லது மூன்றாவது அணியான மக்கள் நலக் கூட்டணியா என்பதும், ஒருவேளை இழுபறி நிலை ஏற்பட்டால்  "குதிரை பேர" பேச்சு (?!) வார்த்தைகளின் முடிவுதான் தீர்மானிக்குமா என்பதும் நாளை காலை 12 மணிக்குள்ளாகவே தெரிந்துவிடும்.

இந்நிலையில், அறிவாலயத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. "இதுவே நாளைய எங்கள் ரிசல்ட்டை சொல்கிறது" என்று காலரை தூக்கி விட்டபடி கண் சிமிட்டுகின்றனர் உ.பி.க்கள். அதை விட கோபாலபுரத்திலும், சேமியர்ஸ் சாலையிலும் காணப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிரள வைக்கின்றன.

போயஸ் கார்டன் ஏரியாவில் போலீஸ் பாதுகாப்பு எப்போதும் போல் காணப்பட்டாலும், 'இங்கே நிற்காதே, அங்கே போகாதே' என்று விரட்டியடிக்கும் கெடுபிடி முன்பு போல இல்லை. கொட்டும் மழையிலும் தொண்டர்கள் பாலிதீன் கவர்களில் ரோஜாக்களையும், லட்சுமி வெடிகளையும் மார்போடு அணைத்துக் கொண்டு, " நாளைக்கு மொத்தத்தையும் இங்கேதான் வெடிக்கப் போறோம்' என்று ஆவேசமாக சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

நீரா ராடியா, 2ஜி, ஆ.ராசா போன்ற பழைய பரபரப்புகளை முன்வைத்து இரண்டு நாட்களாக அனலைக் கிளப்பிக் கொண்டிருக்கும் செய்திகள், பேட்டிகளின் தொடர்ச்சியாக, இப்போது ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் மரண விவகாரமும் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுபற்றி திமுகவினர் தரப்பில் பேசியபோது, "வருடக் கணக்கில் கிடப்பில் கிடந்த சாதிக் பாட்சா விவகாரத்தை, இப்போது கையிலெடுத்து யாரோ ஒருவரை சாட்சியாக ரெடி பண்ணி  கொண்டு வந்து, அவரை பேட்டி கொடுக்க வைக்கிறார்கள்... இது அதிமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது. இதை ஒரு வாரம் முன்னர் கையிலெடுத்து, அதை வைத்து பிரசாரம் செய்திருக்கலாமே...? 'எனக்கு அந்த பிரபாகரனை முன்பே தெரியும், அந்த தம்பி என்னிடமே இதை சொல்லியிருக்கிறார்' என்று இப்போது சொல்லும் வைகோ, அதை ஒரு மாதம் வெயிலில் சுற்றிச் சுற்றி பிரசாரம் செய்தபோது சொல்லி இருக்கலாமே? அவர் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்பது அவருக்கே மறந்துவிட்டதே" என்கின்றனர்.

பந்தல், அரங்க வேலைகள் தொடர்பான ஆட்கள், அறிவாலயத்திலும் காணப்படுகிறார்கள், கார்டன் ஏரியாவிலும் காணப்படுகிறார்கள். அதே போல் இருதரப்பு ஆதரவு காக்கிகளும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் ஐ-பேட் சகிதமாய் மப்டியில் அந்தந்த ஏரியாவில் சுற்றி வருகிறார்கள். 'இரண்டுநாள் பொறுத்திருங்கள்' என்றார் முதல்வர் ஜெயலலிதா. 'ஆட்சியமைக்க போதுமான அளவு இடங்களைப் பிடிப்போம்' என்று அதற்கு கவுன்ட்டர் கொடுத்தார், திமுக தலைவர் கருணாநிதி.

மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வருகிறார் என்றால் கூட சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் இருக்காது. அந்தளவுக்கு அங்கே பல அணிகளின் பஞ்சாயத்து ஓடும். ஆனால், தேர்தல் நடந்த 16.05.2016 முதல் இந்த நேரம் வரை சத்தியமூர்த்தி பவனில் கதர் வேட்டிக்காரர்கள் சளைக்காமல் வந்து போய் கொண்டிருக்கின்றனர்.

மக்கள் நலக் கூட்டணியின் லீடர் கட்சியான தேமுதிக அலுவலகத்தில், இந்த மழையிலும் கூட சொல்லிக் கொள்ளும் அளவில் தொண்டர்கள், எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோக, பிரதானமாய் ஐ.டி. விங்குகளை கையில் வைத்துள்ள இரண்டு கழகங்களிலும், நாளைய தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதற்கேற்ப எப்படி தயாராய் இருப்பது என்று 'கார்டு'களுடன் தயாராய் களத்தில் இருக்கிறார்கள்.

போயஸ்கார்டன் ஏரியாவில் தொண்டர்கள் குவிக்கும் பட்டாசுகளுக்கு ஈடாக வைத்துக்கொண்டு அதிமுகவின் தலைமை அலுவலக வாசலிலும் தயார் நிலையில் காத்திருக்கின்றனர் தொண்டர்கள். கூடவே மகளிரணியினரின் அன்பான லட்டுகளும்...

அறிவாலயத்திலும் லட்டு இருக்கிறது என்ற தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பட்டாசு பலமாக இருக்கிறதாம்.

காத்திருப்போம் சில மணி நேரங்கள், யாருடைய பட்டாசுகள் வெடிக்கப்போகின்றன... எந்த கட்சியின் பட்டாசுகள் நமுத்துப்போகப்போகின்றன என்பதை அறிய...! 

-ந.பா. சேதுராமன்
ஜெ.வேங்கடராஜ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ